தேவார வைப்புத் தலங்கள் பெயர்கள் அதிகமாக குறிப்பிடப்பட்டுள்ள பதிகங்கள்.
திருஞானசம்பந்தர் - 2-ம் திருமுறை, 39-வது பதிகம்
ஆரூர்தில்லை யம்பலம் வல்லந்நல்லம்
வடகச்சியு மச்சிறு பாக்கம் நல்ல
கூரூர் கூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி
கடல்சூழ் கழிப்பாலை தென்கோடி பீடார்
நீரூர் வயல்நின்றியூர் குன்றியூரும்
குருகா வையூர் நாரையூர் நீடுகானப்
பேரூர்நன் னீள்வயல் நெய்த்தானமும்
பிதற்றாய்பிறை சூடிதன் பேரிடமே. (1)
அண்ணாமலை யீங்கோயும் அத்தி முத்தா
றகலா முதுகுன்றங் கொடுங்குன்றமுங்
கண்ணார் கழுக்குன்றங் கயிலை கோணம்
பயில்கற் குடிகாளத்தி வாட்போக்கியும்
பண்ணார்மொழி மங்கையோர் பங்குடையான்
பரங்குன்றம் பருப்பதம் பேணிநின்றே
எண்ணாய் இரவும் பகலும் இடும்பைக்
கடல் நீந் தலாங்கா ரணமே. (2)
அட்டானமென் றோதிய நாலிரண்டும்
அழகன்னுறை காவனைத் துந்துறைகள்
எட்டாந் திருமூர்த்தியின் காடொன்பதுங்
குளமூன்றுங் களமஞ்சும் பாடிநான்கும்
மட்டார்குழ லாள்மலை மங்கை பங்கன்
மதிக்கும் மிடமாகிய பாழி மூன்றும்
சிட்டா னவன் பாசூரென் றேவிரும்பாய்
அரும்பா வங்களா யினதேய்ந் தறவே. (3)
அறப்பள்ளி அகத்தியான் பள்ளி வெள்ளைப்
பொடிபூசி யாறணி வானமர் காட்டுப்பள்ளி
சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன்பள்ளி
திருநனி பள்ளிசீர் மகேந் திரத்துப்
பிறப்பில் லவன்பள்ளி வெள்ளச் சடையான்
விரும்பும் மிடைப்பள்ளி வண்சக்கரம்மால்
உறைப்பாலடி போற்றக் கொடுத்த பள்ளி
உணராய்மடநெஞ்ச மேயுன்னி நின்றே. (4)
ஆறைவட மாகறல் அம்பர்ஐயா
றணியார் பெருவேளூர் விளமர் தெங்கூர்
சேறைதுலை புகலூரக லாதிவை காதலித்தா
னவன் சேர்பதியே *****************
*********************************************
**********************************
*********************************************
**********************************
(இச்செய்யுளின் சிலஅடிகள் கிடைக்கப்பெறவில்லை). (5)
மனவஞ்சர்மற் றோடமுன் மாதராரும்
மதிகூர்திருக் கூடலில் ஆலவாயும்
இனவஞ் சொலிலா இடைமா மருதும்
இரும்பைப்பதி மாகாளம் வெற்றியூருங்
கனமஞ்சின மால்விடை யான்விரும்புங்
கருகாவூர் நல்லூர் பெரும்புலியூர்
தனமென் சொலிற்றஞ்ச மென்றே நினைமின்
தவமாம்மல மாயின தானறுமே. (6)
மாட்டூர் மட ப்பாச்சி லாச்சிராமம்
முண்டீச்சரம் வாதவூர் வாரணாசி
காட்டூர் கடம் பூர்படம் பக்கங் கொட்டுங்
கடலொற்றியூர்மற் றுறையூ ரவையும்
கோட்டூர் திருவாமாத் தூர்கோ ழம்பமுங்
கொடுங்கோவலூர் திருக்குண வாயில் *****
************************************
******************************************
(இச்செய்யுளின் சிலஅடிகள் கிடைக்கப்பெறவில்லை). (7)
********* குலாவுதிங்கட் சடையான்
குளிரும் பரிதி நியமம்
போற்றூ ரடியார் வழிபா டொழியாத் தென்
புறம்பயம் பூவணம் பூழியூரும்
காற்றூர் வரையன் றெடுத்தான் முடிதோள்
நெரித்தானுறை கோயில்**********************
*************************** லென் றென்று நீகருதே.
(இச்செய்யுளின் சிலஅடிகள் கிடைக்கப்பெறவில்லை). (8)
நெற்குன்றம் ஓத்தூர் நிறைநீர் மருகல்
நெடுவாயில் குறும்பலா நீடுதிரு
நற்குன்றம் வலம்புரம் நாகேச்சுரம்
நளிர்சோலை உஞ்சேனை மாகாளம் வாய்மூர்
கற்குன்ற மொன்றேந்தி மழைதடுத்த
கடல்வண் ணனுமாமல ரோனுங்காணாச்
சொற்கென் றுந்தொலைவிலாதா னுறையுங்
குடமூக்கென்றுசொல் லிக்குலா வுமினே. (9)
குத்தங்குடி குத்தங்குடி வேதி குடிபுனல்சூழ்
குருந்தங்குடி தேவன் குடிமருவும்
அத்தங்குடி தண்டிருவண் குடியும்
அலம்புஞ்சலந்தன் சடைவைத் துகந்த
நித்தன் நிமலன் உமையோடுங்கூட
நெடுங்காலம் உறைவிட மென்று சொல்லாப்
புத்தர் புறங்கூ றியபுன் சமணர்
நெடும்பொய்களைவிட் டுநினைந் துய்ம்மினே. (10)
அம்மானை யருந்தவ மாகிநின்ற
அமரர் பெருமான் பதியான வுன்னிக்
கொய்ம்மா மலர்ச்சோலை குலாவு கொச்சைக்
கிறைவன் சிவஞான சம்பந்தன் சொன்ன
இம்மா லையீரைந் தும்இரு நிலத்தில்
இரவும் பகலுந்நினைந் தேத்திநின்று
விம்மா வெருவா விரும்பும் அடியார்
விதியார் பிரியார் சிவன்சே வடிக்கே. (11)
இப்பதிகத்தில் குறிப்பிடப்படும் கூரூர், குருகாவையூர், தென்கோடி, குன்றியூர், அறப்பள்ளி, வெற்றியூர், மயிண்டீச்சரம், வாதவூர், வாரணாசி, காட்டூர், கொடுங்கோவலூர், குணவாயில், நெற்குன்றம், நற்குன்றம், உஞ்சேனை மாகாளம், குத்தங்குடி, குருந்தங்குடி, அத்தங்குடி, வண்குடி முதலியவை வைப்புத் தலங்கள் ஆக கூறப்படுகின்றன.
திருநாவுக்கரசர் - 6-ம் திருமுறை, 51-வது பதிகம் (திருவீழிமிழலை தலத்திற்குரிய பதிகம்)
கயிலாய மலையுள்ளார் காரோ ணத்தார்
கந்தமா தனத்து ளார் காளத் தியார்
மயிலாடு துறையுளார் மாகா ளத்தார்
வக்கரையார் சக்கரமாற் கீந்தார் வாய்ந்த
அயில்வாய சூலமுங் காபா லமும்
அமருந் திருக்கரத்தார் ஆனே றேறி
வெயிலாய சோதி விளங்கு நீற்றார்
வீழி மிழலையே மேவி னாரே. 1
பூதியணி பொன்னிறத்தர் பூண நூலர்
பொங்கரவர் சங்கரர்வெண் குழையோர் காதர்
கேதிசர மேவினார் கேதா ரத்தார்
கெடில வடவதிகை வீரட் டத்தார்
மாதுயரந் தீர்த்தென்னை உய்யக் கொண்டார்
மழபாடி மேய மழுவா ளனார்
வேதி குடியுளார் மீயச் சூரார்
வீழி மிழலையே மேவி னாரே. 2
அண்ணா மலையமர்ந்தார் ஆரூ ருள்ளார்
அளப்பூரார் அந்தணர்கள் மாடக் கோயில்
உண்ணாழி கையார் உமையா ளோடும்
இமையோர் பெருமானார் ஒற்றி யூரார்
பெண்ணா கடத்துப் பெருந்தூங் கானை
மாடத்தார் கூடத்தார் பேரா வூரார்
விண்ணோர்க ளெல்லாம் விரும்பி யேத்த
வீழி மிழலையே மேவி னாரே. 3
வெண்காட்டார் செங்காட்டங் குடியார் வெண்ணி
நன்னகரார் வேட்களத்தார் வேத நாவார்
பண்காட்டும் வண்டார் பழனத் துள்ளார்
பராய்த்துறையார் சிராப்பள்ளி யுள்ளார் பண்டோர்
வெண்கோட்டுக் கருங்களிற்றைப் பிளிறப் பற்றி
உரித்துரிவை போர்த்த விடலை வேடம்
விண்காட்டும் பிறைநுதலி யஞ்சக் காட்டி
வீழி மிழலையே மேவி னாரே. 4
புடைசூழ்ந்த பூதங்கள் வேதம் பாடப்
புலியூர்ச்சிற் றம்பலத்தே நடமா டுவார்
உடைசூழ்ந்த புலித்தோலர் கலிக்கச் சிமேற்
றளியுளார் குளிர்சோலை யேகம் பத்தார்
கடைசூழ்ந்து பலிதேருங் கங்கா ளனார்
கழுமலத்தார் செழுமலர்த்தார்க் குழலி யோடும்
விடைசூழ்ந்த வெல்கொடியார் மல்கு செல்வ
வீழி மிழலையே மேவி னாரே. 5
பெரும்புலியூர் விரும்பினார் பெரும்பா ழியார்
பெரும்பற்றப் புலியூர்மூ லட்டா னத்தார்
இரும்புதலார் இரும்பூளை யுள்ளா ரேரார்
இன்னம்ப ரார்ஈங்கோய் மலையார் இன்சொற்
கரும்பனையாள் உமையோடுங் கருகா வூரார்
கருப்பறிய லூரார் கரவீ ரத்தார்
விரும்பமரர் இரவுபகல் பரவி யேத்த
வீழி மிழலையே மேவி னாரே. 6
மறைக்காட்டார் வலிவலத்தார் வாய்மூர் மேயார்
வாழ்கொளி புத்தூரார் மாகா ளத்தார்
கறைக்காட்டுங் கண்டனார் காபா லியார்
கற்குடியார் விற்குடியார் கானப் பேரார்
பறைக்காட்டுங் குழிவிழிகட் பல்பேய் சூழப்
பழையனூர் ஆலங்காட் டடிகள் பண்டோ ர்
மிறைக்காட்டுங் கொடுங்காலன் வீடப் பாய்ந்தார்
வீழி மிழலையே மேவி னாரே. 7
அஞ்சைக் களத்துள்ளார் ஐயாற் றுள்ளார்
ஆரூரார் பேரூரார் அழுந்தூ ருள்ளார்
தஞ்சைத் தளிக்குளத்தார் தக்க ளூரார்
சாந்தை அயவந்தி தங்கி னார்தாம்
நஞ்சைத் தமக்கமுதா உண்ட நம்பர்
நாகேச் சரத்துள்ளார் நாரை யூரார்
வெஞ்சொற் சமண்சிறையி லென்னை மீட்டார்
வீழி மிழலையே மேவி னாரே. 8
கொண்டல் உள்ளார் கொண்டீச் சரத்தி னுள்ளார்
கோவலூர் வீரட்டங் கோயில் கொண்டார்
தண்டலையார் தலையாலங் காட்டி னுள்ளார்
தலைச்சங்கைப் பெருங்கோயில் தங்கி னார்தாம்
வண்டலொடு மணற்கொணரும் பொன்னி நன்னீர்
வலஞ்சுழியார் வைகலின்மேன் மாடத் துள்ளார்
வெண்டலைமான் கைக்கொண்ட விகிர்த வேடர்
வீழி மிழலையே மேவி னாரே. 9
அரிச்சந் திர த்துள்ளார் அம்ப ருள்ளார்
அரிபிரமர் இந்திரர்க்கு மரிய ரானார்
புரிச்சந் திர த்துள்ளார் போகத் துள்ளார்
பொருப்பரையன் மகளோடு விருப்ப ராகி
எரிச்சந்தி வேட்கு மிடத்தார் ஏம
கூடத்தார் பாடத்தே னிசையார் கீதர்
விரிச்சங்கை யெரிக்கொண்டங் காடும் வேடர்
வீழி மிழலையே மேவி னாரே. 10
புன்கூரார் புறம்பயத்தார் புத்தூ ருள்ளார்
பூவணத்தார் புலிவலத்தார் வலியின் மிக்க
தன்கூர்மை கருதிவரை யெடுக்க லுற்றான்
தலைகளொடு மலைகளன்ன தாளுந் தோளும்
பொன்கூருங் கழலடியோர் விரலா லூன்றிப்
பொருப்பதன்கீழ் நெரித்தருள்செய் புவன நாதர்
மின்கூருஞ் சடைமுடியார் விடையின் பாகர்
வீழி மிழலையே மேவி னாரே.
இப்பதிகத்தில் குறிப்பிடப்படும் கந்தமாதனமலை, மாகாளம், அளப்பூர், கூடம் (ஏமகூட மலை), பேராவூர், தஞ்சைத் தளிக்குளம், தக்களூர், கொண்டல், அரிச்சந்திரம் , ஏமகூடம், புரிச்சந்திரம் (சந்திரபுரம், பிறையனூர்), புலிவலம் முதலியவை வைப்புத் தலங்கள் ஆக கூறப்படுகின்றன.
திருநாவுக்கரசர் - 6-ம் திருமுறை, 70-வது பதிகம்
தில்லைச் சிற்றம்பலமும் செம்பொன் பள்ளி
தேவன்குடி சிராப்பள்ளி தெங்கூர்
கொல்லிக் குளிர் அறைப்பள்ளி கோவல்
வீரட்டங் கோகரணம் கோடிகாவும்
முல்லைப் புறவம் முருகன்பூண்டி
முழையூர் பழையாறை சத்திமுற்றம்
கல்லில் திகழ் சீர் ஆர் காளத்தியும்
கயிலாயநாதனையே காணலாமே. (1)
ஆரூர் மூலட்டானம் ஆனைக்காவும்
ஆக்கூரில் தான்தோன்றி மாடம் ஆவூர்
பேரூர் பிரமபுரம் பேராவூரும்
பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணுங்
கூரார் குறுக்கைவீரட்டானம்மும்
கோட்டூர் குடமூக்குக் கோழம்பமும்
கார் ஆர் கழுக்குன்றும் கானப்பேரும்
கயிலாயநாதனையே காணலாமே. (2)
இடைமருது ஈங்கோய் இராமேச்சரம்
இன்னம்பர் ஏர் இடவை ஏமப்பேறூர்
சடைமுடி சாலைக்குடி தக்களூர்
தலையாலங்காடு தலைச்சங்காடு
கொடுமுடி குற்றாலம் கொள்ளம்பூதூர்
கோத்திட்டை கோட்டாறு கோட்டுக்காடு
கடைமுடி கானூர் கடம்பந்துறை
கயிலாயநாதனையே காணலாமே. (3)
எச்சில்இளமர் ஏமநல்லூர்
இலம்பையங்கோட்டூர் இறையான்சேரி
அச்சிறுபாக்கம் அளப்பூர் அம்பர்
ஆவடுதண்துறை அழுந்தூர் ஆறை
கைச்சினம் கற்குடி கச்சூர் ஆலக்
கோயில் கரவீரம் காட்டுப் பள்ளி
கச்சிப் பலதளியும் ஏகம்பத்தும்
கயிலாயநாதனையே காணலாமே. (4)
கொடுங்கோளூர் அஞ்சைக்களம் செங்குன்றூர்
கொங்கணம் குன்றியூர் குரக்குக்காவும்
நெடுங்களம் நன்னிலம் நெல்லிக்காவும்
நின்றியூர் நீடூர் நியமநல்லூர்
இடும்பாவனம் எழுமூர் ஏழூர் தோழூர்
எறும்பியூர் ஏர் ஆரும் ஏமகூடம்
கடம்பை இளங்கோயில் தன்னினுள்ளுன்ங்
கயிலாயநாதனையே காணலாமே. (5)
மண்ணிப்படிக்கரை வாழ்கொளிபுத்தூர்
வக்கரை மந்தாரம் வாரணாசி
வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி
விளமர் விராடபுரம் வேட்களத்தும்
பெண்ணை அருள் துறைதண் பெண்ணா கடம்
பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூரும்
கண்ணை களர் காறை கழிப்பாலையும்
கயிலாயநாதனையே காணலாமே. (6)
வீழிமிழலை வெண்காடு வேங்கூர்
வேதிகுடி விசயமங்கை வியலூர்
ஆழி அகத்தியான்பள்ளி அண்ணா
மலை ஆலங்காடும் அரதைப்பெரும்
பாழி பழனம் பனந்தாள் பாதாளம்
பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட்டூர் தண்
காழி கடல்நாகைக்காரோணத்தும்
கயிலாயநாதனையே காணலாமே. (7)
உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்
உருத்திரகோடி மறைக்காட்டுள்ளும்
மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்
வீரட்டம் மாதானம் கேதாரத்தும்
வெஞ்சமாக்கூடல் மீயச்சூர் வைகா
வேதீச்சுரம் விவீச்சுரம் வெற்றியூரும்
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையும்
கயிலாயநாதனையே காணலாமே. (8)
திண்டீச்சரம் சேய்ஞலூர் செம்பொன்பள்ளி
தேவூர் சிரபுரம் சிற்றேமம் சேறை
கொண்டீச்சரம் கூந்தலூர் கூழையூர் கூடல்
குருகாவூர் வெள்ளடை குமரிகொங்கு
அண்டர் தொழும் அதிகை வீரட்டானம்
ஐயாறு அசோகந்தி ஆமாத்தூரும்
கண்டியூர் வீரட்டம் கருகாவூரும்
கயிலாயநாதனையே காணலாமே. (9)
நறையூரில் சித்தீச்சரம் நள்ளாறு
நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல
துறையூர் சோற்றுத்துறை சூலமங்கை
தோணிபுரம் துருத்தி சோமேச்சரம்
உறையூர் கடல் ஒற்றியூர் ஊற்றத்தூர்
ஓமாம்புலியூர் ஓர் ஏடகத்தும்
கறையூர் கருப்பறியல் கன்றாப்பூரும்
கயிலாயநாதனையே காணலாமே. (10)
புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர்
புறம்பயம் பூவணம் பொய்கைநல்லூர்
வலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல்
வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி
நிலம் மலி நெய்த்தானத்தோமு எத்தானத்தும்
நிலவு பெருங்கோயில் பல கண்டால் தொண்டீர்
கலிவலி மிக்கோனைக் கால் விரலால் செற்ற
கயிலாயநாதனையே காணலாமே. (11)
இப்பதிகத்தில் குறிப்பிடப்படும் தேவன்குடி, அறைப்பள்ளி, பேரூர், பேராவூர், காம்பீலி, பிடவூர், கோட்டூர், ஏர், இடவை, ஏமப்பேறூர், சடைமுடி, சாலைக்குடி, தக்களூர், கோத்திட்டை, கோட்டுக்காடு, ஏமநல்லூர், இறையான்சேரி, அளப்பூர், ஏகம்பத்து, கொடுங்கோளூர், செங்குன்றூர், கொங்கணம், குன்றியூர், நியமநல்லூர், எழுமூர், ஏழூர், தோழூர், ஏர், ஏமகூடம், வக்கரை மந்தாரம், வாரணாசி, விளத்தொட்டி, விராடபுரம், பிரம்பில், கண்ணை, உஞ்சேனை மாகாளம், உருத்திரகோடி, தஞ்சை, வழுவூர், மாதானம், வேதீச்சுரம், விவீச்சுரம், வெற்றியூர், கஞ்சாறு, பஞ்சாக்கை, திண்டீச்சரம், கூந்தலூர், கூழையூர், குமரிகொங்கு, அசோகந்தி, சூலமங்கை, சோமேச்சரம், ஊற்றத்தூர், கறையூர், புலிவலம், பொய்கைநல்லூர், முதலியவை வைப்புத் தலங்கள் ஆக கூறப்படுகின்றன.
திருநாவுக்கரசர் - 6-ம் திருமுறை, 71வது பதிகம்
பொருப்பள்ளி வரைவில்லாப் புரம் மூன்று எய்து
புலந்தழியச் சலந்தரனைப் பிளந்தான் பொற்சக்
கரப்பள்ளி திருக்காட்டுப்பள்ளி கள்ளார்
கமழ்கொல்லி அறைப்பள்ளி கலவஞ் சாரல்
சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன்பள்ளி
செழு நனிபள்ளி தவப்பள்ளி சீரார்
பரப்பள்ளி யென்றென்று பகர்வோர் எல்லாம்
பரலோகத்து இனிதாகப் பாலிப்பாரே. (1)
காவிரியின் கரைக் கண்டி வீரட்டானம்
கடவூர் வீரட்டானம் காமரு சீர் அதிகை
மேவிய வீரட்டானம் வழுவை வீரட்டம்
வியன் பறியல் வீரட்டம் விடையூர்திக்கு இடமாம்
கோவல்நகர் வீரட்டம் குறுக்கை வீரட்டம்
கோத்திட்டைக்குடி வீரட்டானம் இவை கூறி
நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுகச் சென்றால்
நமன்தமருஞ் சிவன் தமரென்று அகல்வர் நன்கே. (2)
நற்கொடிமேல் விடையுயர்த்த நம்பன் செம்பங்குடி
நல்லக்குடி நளி நாட்டியத்தான்குடி
கற்குடி தென் களக்குடி செங்காட்டங்குடி
கருந்திட்டைக்குடி கடையக்குடி காணுங்கால்
விற்குடி வேள்விக்குடி நல் வேட்டக்குடி
வேதிகுடி மாணிகுடி விடைவாய்க்குடி
புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி
புதுக்குடியும் போற்ற இடர் போகுமன்றே. (3)
பிறையூரும் சடைமுடி எம் பெருமான் ஆரூர்
பெரும்பற்றப்புலியூரும் பேராவூரும்
நறையூரும் நல்லூரும் நல்லாற்றூரும்
நாலூரும் சேற்றூரும் நாரையூரும்
உறையூரும் ஓத்தூரும் ஊற்றத்தூரும்
அளப்பூர் ஓமாம்புலியூர் ஓற்றியூரும்
துறையூரும் துவையூரும் தோழூர் தானுந்
துடையூரும் தொழ இடர்கள் தொடராவன்றே. (4)
பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோடு எட்டும் மற்றும்
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்
கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட்டேத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்
திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து
தாழ்ந்து இறைஞ்சத் தீவினைகள் தீரும் அன்றே. (5)
மலையார் தம் மகளொடு மாதேவன் சேரும்
மறைக்காடு வண்பொழில் சூழ் தலைச்சங்காடு
தலையாலங்காடு தடங் கடல் சூழந்தண்
சாய்க்காடு தள்ளு புனற் கொள்ளிக்காடு
பலர்பாடும் பழையனூர் ஆலங்காடு
பனங்காடு பாவையர்கள் பாவம் நீங்க
விலையாடும் வளை திளைக்கக் குடையும் பொய்கை
வெண்காடும் அடைய வினை வேறாமன்றே. (6)
கடுவாயர் தமைநீக்கி யென்னை யாட்கொள்
கண்ணுதலோன் நண்ணுமிடம் அண்ணல்வாயில்
நெடுவாயில் நிறை வயல்சூழ் நெய்தல்வாயில்
நிகழ்முல்லை வாயிலொடு ஞாழல் வாயில்
மடுவார் தென்மதுரை நகர் ஆலவாயில்
மறிகடல்சூழ் புனவாயில் மாட நீடு
குடவாயில் குணவாயில் என எல்லாம்
புகுவாரைக் கொடுவினைகள் கூடா வன்றே. (7)
நாடகமாடிட நந்திகேச்சுரம் மாகாளேச்சுரம்
நாகேச்சுரம் நாகளேச்சுரம் நன் கான
கோடீச்சுரம் கொண்டீச்சுரம் திண்டீச்சுரம்
குக்குடேச்சுரம் மக்கீச்சுரம் கூறுங்கால்
ஆடகேச்சுரம் அகத்தீச்சுரம் அயனீச்சுரம்
அத்தீச்சுரம் சித்தீச்சுரம் அந்தண் கானல்
ஈடுதிரை இராமேச்சுரம் என்றென்றேத்தி
இறைவனுறை சுரம் பலவும் இயம்புவோமே. (8)
கந்தமாதனம் கயிலைமலை கேதாரம்
காளத்தி கழுக்குன்றம் கண்ணா ரண்ணா
மந்தமாம் பொழிற்சாரல் வடபற்பதம்
மகேந்திரமாமலை நீலம் ஏம கூடம்
விந்தமாமலை வேதஞ் சையம் மிக்க
வியன்பொதியின் மலைமேரு உதயம் அத்தம்
இந்துசேகரன் உறையும் மலைகள் மற்றும்
ஏத்துவோம் இடர் கெட நின்றே த்துவோமே. (9)
நள்ளாறும் பழையாறும் கோட்டாற்றோடு
நலந்திகழும் நாலாறும் திருவையாறும்
தெள்ளாறும் வளைகுளமும் தளிக்குளமும் நல்
இடைக்குளமும் திருக்குளத்தோடு அஞ்சைக் களம்
விள்ளாத நெடுங்களம் வேட்களம் நெல்லிக்கா
கோலக்கா ஆனைக்கா வியன்கோடிகா
கள்ளார்ந்த கொன்றையான் நின்ற ஆறுங்
குளம் களங்கா என அனைத்துங் கூறுவோமே. (10)
கயிலாய மலையெடுத்தான் கரங்களோடு
சிரங்களுரம் நெரியக்கால் விரலாற் செற்றோன்
பயில்வாய பராய்த்துறை தென் பாலைத்துறை
பண்டெழுவர் தவத்துறை வெண்டுறை பைம்பொழில்
குயிலாலந்துறை சோற்றுத்துறை பூந்துறை
பெருந்துறையும் குரங்காடுதுறையினோடு
மயிலாடுதுறை கடம்பந்துறை ஆவடுதுறை
மற்றுந் துறையனைத்தும் வணங்குவோமே. (11)
இப்பதிகத்தில் குறிப்பிடப்படும் பொருப்பள்ளி, சிவப்பள்ளி, தவப்பள்ளி, பரப்பள்ளி, வழுவூர், செம்பங்குடி, நல்லக்குடி, தென்களக்குடி, கருந்திட்டைக்குடி, கடையக்குடி, மாணிகுடி, விடைவாய்க்குடி, புற்குடி, மாகுடி, புதுக்குடி, பேராவூர், ஊற்றத்தூர், அளப்பூர், நல்லாற்றூர், நாலூர், சேற்றூர், துவையூர், துடையூர், ஞாழற் கோயில், மணிக் கோயில், பனங்காடு, அண்ணல்வாயில், நெடுவாயில், நெய்தல்வாயில், ஞாழல் வாயில், குணவாயில், திண்டீச்சுரம், நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம், நாகளேச்சுரம், கோடீச்சுரம், குக்குடேச்சுரம், அக்கீச்சுரம், ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அயனீச்சுரம், அத்தீச்சுரம், கந்தமாதனம், மகேந்திரம், நீலமலை, விந்தம், சையம், மேரு, உதயமலை, அத்தமலை, பழையாறு, நாலாறு, தெள்ளாறு, வளைகுளம், தஞ்சைத் தளிக்குளம், இடைக்குளம், திருக்குளம், தவத்துறை, குயிலாலந்துறை, பூந்துறை முதலியவை வைப்புத் தலங்கள் ஆக கூறப்படுகின்றன.
சுந்தரர் - 7-ம் திருமுறை, 12-வது பதிகம்
வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த விலங்கலான்
கூழை ஏறுகந்தான் இடங் கொண்டது கோவலூர்
தாழையூர் தகட்டூர் தக்களூர் தருமபுரம்
வாழை காய்க்கும் வளர் மருகல் நாட்டு மருகலே. (1)
அண்டத்து அண்டத்தின் அப்புறத்தாடும் அமுதன் ஊர்
தண்டந்தோட்டம் தண்டங்குறை தண்டலை ஆலங்காடு
கண்டல் முண்டல்கள் சூழ்கழிப்பாலை கடற்கரை
கொண்டல் நாட்டுக் கொண்டல் குறுக்கை நாட்டுக் குறுக்கையே. (2)
மூலனூர் முதலாய முக்கண்ணன் முதல்வன் ஊர்
நாலனூர் நரை ஏறுகந்தேறிய நம்பன் ஊர்
கோல நீற்றன் குற்றாலம் குரங்கணின் முட்டமும்
வேலனூர் வெற்றியூர் வெண்ணிக் கூற்றத்து வெண்ணியே. (3)
தேங்கூரும் திருச்சிற்றம்பலமும்
சிராப்பள்ளி பாங்கூர் எங்கள் பிரான் உறையும்
கடம்பந்துறை பூங்கூரும் பரமன் பரஞ்சோதி
பயிலும் ஊர் நாங்கூர் நாட்டு நாங்கூர்
நறையூர் நாட்டு நறையூரே. (4)
குழலை வென்ற மொழிமடவாளை ஓர் கூறனாம்
மழலை யேற்று மணாளன் இடம் தட மால்வரைக்
கிழவன் கீழை வழி பழையாறு கிழையமும்
மிழலை நாட்டு மிழலை வெண்ணி நாட்டு மிழலையே. (5)
தென்னூர் கைம்மைத் திருச்சுழியற்றிருக் கானப்பேர்
பன்னூர் புக்குறையும் பரமற்கிடம் பாய்நலம்
என்னூர் எங்கள் பிரான் உறையும் திருத்தேவனூர்
பொன்னூர் நாட்டுப் பொன்னூர் புரிசை நாட்டுப் புரிசையே. (6)
ஈழ நாட்டு மாதோட்டம் தென்னாட்டி இராமேச்சுரம்
சோழ நாட்டுத் துருத்தி நெய்த்தானம் திருமலை
ஆழியூரன நாட்டுக்கெல்லாம் அணியாகிய
கீழையில் அரனார்க்கு இடம் கிள்ளிகுடி யதே. (7)
நாளும் நன்னிலம் தென்பனையூர் வடகஞ்சனூர்
நீள நீள்சடையான் நெல்லிக்காவு நெடுங்களம்
காள கண்டன் உறையும் கடைமுடி கண்டியூர்
வேளா நாட்டு வேளூர் விளத்தூர் நாட்டு விளத்தூரே. (8)
தழலு மேனியன் தையலொர் பாகம் அமர்ந்தவன்
தொழலுந் தொல்வினை தீர்க்கின்ற சோதி சோற்றுத்துறை
கழலுங் கோவை யுடையவன் காதலிக்கும் இடம்
பழனம் பாம்பணி பாம்புரம் தஞ்சை தஞ்சாக்கையே. (9)
மைகொள் கண்டன் எண்டோளன் முக்கண்ணன்
வலஞ்சுழி பைகொள் வாளர வாட்டித் திரியும்
பரமனூர் செய்யில் வாளைகள் பாய்ந்துகளும் திருப்புன்கூர்
நன் றையன் மேய பொழில்அணி ஆவடு துறையதே. (10)
பேணி நாடத னிற்றிரியும்பெரு மான்றனை
ஆணையா அடியார்கள் தொழப்படும் ஆதியை
நாணிஊரன் வனப்பகை அப்பன் வன்றொண்டன் சொல்
பாணியால் இவை ஏத்துவார் சேர் பரலோகமே. (11)
இப்பதிகத்தில் குறிப்பிடப்படும் தாழையூர், தகட்டூர், தக்களூர், தண்டந்தோட்டம், தண்டங்குறை, கொண்டல், மூலனூர், முதல்வனூர், நாலனூர், வேலனூர், வெற்றியூர், தேங்கூர், பாங்கூர், பூங்கூர், நாங்கூர், கீழைவழி, பழையாறு, கிழையம், மிழலை நாட்டிலுள்ள மிழலை, வெண்ணி நாட்டிலுள்ள மிழலை, தென்னூர் , பன்னூர், தேவனூர், பொன்னூர், புரிசை, திருமலை, ஆழியூர், கீழையில், கிள்ளிகுடி, தென்பனையூர், வடகஞ்சனூர், வேளூர், விளத்தூர், தஞ்சை, தஞ்சாக்கை, முதலியவை வைப்புத் தலங்கள் ஆக கூறப்படுகின்றன.
சுந்தரர் - 7-ம் திருமுறை, 47-வது பதிகம்
காட்டூர்க் கடலே கடம்பூர் மலையே கானப் பேரூராய்
கோட்டூர்க் கொழுந்தே அழுந்தூர் அரசே கொழுநல் கொல்லேறே
பாட்டூர் பலரும் பரவப் படுவாய் பனங்காட்டூரானே
மாட்டூர் அறவா மறவா துன்னைப் பாடப் பணியாயே. (1)
கொங்கில் குறும்பில் குரக்குத் தளியாய் குழகா குற்றாலா
மங்குல் திரிவாய் வானோர் தலைவா வாய்மூர் மணவாளா
சங்கக் குழையார் செவியா அழகா அவியா அனலேந்திக்
கங்குல் புறங்காட்டு ஆடீ அடியார் கவலை களையாயே. (2)
நிறைக்காட்டானே நெஞ்சத்தானே நின்றியூரானே
மிறைக்காட்டானே புனல்சேர் சடையாய் அனல்சேர் கையானே
மறைக்காட்டானே திருமாந்துறையாய் மாகோணத்தானே
இறைக்காட்டானே எங்கட்கு உன்னை எம்மான் தம்மானே. (3)
ஆரூர் அத்தா ஐயாறு அமுதே அளப்பூர் அம்மானே
காரூர் பொழில்கள் புடைசூழ் புறவில் கருகாவூரானே
பேரூர் உறைவாய் பட்டிப் பெருமான் பிறவா நெறியானே
பாரூர் பலரும் பரவப்படுவாய் பாசூர் அம்மானே. (4
மருகல் உறைவாய் மாகாளத்தாய் மதியம் சடையானே
அருகல் பிணி நின்னடியார் மேல அகல அருளாயே
கருகல் குரலாய் வெண்ணிக் கரும்பே கானூர்க் கட்டியே
பருகப் பணியாய் அடியார்க்கு உன்னைப் பவளப்படியானே. (5)
தாங்கூர் பிணி நின் அடியார் மேல அகல அருளாயே
வேங்கூர் உறைவாய் விளமர் நகராய் விடையார் கொடியானே
நாங்கூர் உறைவாய் தேங்கூர் நகராய் நல்லூர் நம்பானே
பாங்கூர் பலிதேர் பரனே பரமா பழனப்பதியானே. (6)
தேனைக் காவல் கொண்டு விண்ட கொன்றைச் செழுந்தாராய்
வானைக் காவல் கொண்டு நின்றார் அறியா நெறியானே
ஆனைக் காவில் அரனே பரனே அண்ணாமலையானே
ஊனைக் காவல் கைவிட்டு உன்னை உகப்பார் உணர்வாரே. (7)
துருத்திச் சுடரே நெய்த்தானத்தாய் சொல்லாய் கல்லாலா
பருத்தி நியமத்துறைவாய் வெயிலாய்ப் பலவாய்க் காற்றானாய்
திருத்தித் திருத்தி வந்து என் சிந்தை இடங்கொள் கயிலாயா
அருத்தித்து உன்னை அடைந்தார் வினைகள் அகல அருளாயே. (8)
புலியூர்ச் சிற்றம்பலத்தாய் புகலூர்ப் போதா மூதூரா
பொலிசேர் புரம் மூன்று எரியச் செற்ற புரிபுன் சடையானே
வலிசேர் அரக்கன் தடக்கை ஐஞ்ஞான் கடர்த்த மதிசூடீ
கலிசேர் புறவில் கடவூல் ஆளீ காண அருளாயே. (9)
கைம்மா உரிவை அம்மான் காக்கும் பலவூர் கருத்து உன்னி
மைம்மாந் தடங்கண் மதுரம் அன்ன மொழியாள் மடச்சிங்கடி
தம்மான் ஊரன் சடையன் சிறுவன் அடியன் தமிழ்மாலை
செம்மாந்து இருந்து திருவாய் திறப்பார் சிவலோகத்தாரே (10)
இப்பதிகத்தில் குறிப்பிடப்படும் காட்டூர், கொழுநல், குரக்குத்தளி, நிறைக்காடு, மிறைக்காடு, இறைக்காடு, பேரூர், பாரூர், தாங்கூர், வேங்கூர், நாங்கூர், தேங்கூர், பாங்கூர் முதலியவை வைப்புத் தலங்கள் ஆக கூறப்படுகின்றன.