தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள் பற்றிக் கூறும் இணையதளம்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்ஆறை மேற்றளி
இறைவன் பெயர்கைலாசநாதர்
இறைவி பெயர்சபளநாயகி
பதிகம்சுந்தரர் (7-35-1)
எப்படிப் போவது கும்பகோணம் - தாராசுரம் - பட்டீஸ்வரம் வழியாக தஞ்சாவூர் செல்லும் சாலையில், சாலையோரத்தில் கோயில் உள்ளது.. பட்டீஸ்வரம் தலத்திற்கு மேற்கே 2 கி.மி. தொலைவில் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு கயிலாயநாதர் திருக்கோவில்
திருமேற்றளி
பட்டீஸ்வரம் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 610104

ஒரு கால பூஜை மட்டும் நடைபெறுகிறது. பட்டீஸ்வரத்தில் இருக்கும் திரு கோவிந்தராஜன் என்பவரைத் தொடர்பு கொண்டு எந்நேரமும் தரிசிக்கலாம். கோவிந்தராஜன் தொடர்பு கைபேசி எண்: 9715846398
ஆறை மேற்றளி வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

சுந்தரரின் 7-ம் திருமுறையில் 35-வது பதிகத்தில் 1-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது


அங்கம் ஓதியோர் ஆறை மேற்றளி
நின்றும் போந்து வந்து இன்னம்பர்த்
தங்கி னோமையும் இன்னது என்று இலர்
ஈசனார் எழு நெஞ்சமே
கங்குல் ஏமங்கள் கொண்டு தேவர்கள்
ஏத்தி வானவர் தாந்தொழும்
பொங்கு மால்விடை ஏறி செல்வப்
புறம்பயம் தொழப் போதுமே.

பொழிப்புரை :

மனமே, ஆறு அங்கங்களையும் ஓதியவராகிய அந்தணர்கள் திரு ஆறை மேற்றளியில் 
இருந்து புறப்பட்டு வந்து திருஇன்னம்பரில் பலநாள் தங்கியும் நம்மை இங்குள்ள இறைவர் 
இனி நாம் செய்யத்தக்கது இன்னது என்று தெளிவித்தார் இல்லை. ஆதலின் வானவர்கள் தம் 
நிலையினும் மேன்மேல் உயர்தற் பொருட்டு இரவு எல்லாம் காத்து நின்று விடியலில் ஏத்தித் 
தொழுகின்ற, அழகு மிக்க பெரிய விடையை ஏறும் பெருமானது செல்வம் நிறைந்த 
திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம், புறப்படு.

கோவில் அமைப்பு: ஆலயத்திற்கு இராஜகோபுரமில்லை. சுற்றிலும் மதிற்சுவரும் இல்லை. அர்த்த மண்டபத்துடன் கூடிய மூலவர் கருவறையும் வெளியே நந்தி மண்டபம் மட்டும் இன்றைய நாளில் கோவிலாக உள்ளது.. மூலவர் கருவறையும், நந்தி மண்டபமும் சற்று உயரமான இடத்தில் சில படிகள் ஏறிச் செல்லும் படி அமைந்துள்ளது. மூலவர் கைலாசநாதர் கிழக்கு நோக்கி கருவறையில் அருட்காட்சி தருகிறார். அம்பாள் மற்றும் விநாயகர் சந்நிதிகள் முற்றிலும் சிதிலமடைந்து விட்டதால் அங்கிருந்த சிலா மூர்த்தங்கள் கருவறை அர்த்த மண்டபத்தினுள் வைக்கப்பட்டுள்ளன.

ஊர் மக்கள் உதவியுடன் ஒரு கால பூஜை நடைபெற்று வருகிறது. பிரதோஷம், சோமவாரம், சிவராத்திரி ஆகிய தாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தேவலோகத்து பசுவான காமதேனுவின் புதல்வியருள் ஒருவளான சபளி என்பவள் இத்தலத்தில் இறைவனையும், அம்பிகையையும் வழிபட்டுள்ளாள். மற்றைய புதல்விகளில் பட்டி பட்டீஸ்வரத்திலும், விமலி பழையாறை வடதளியிலும், நந்தினி முழையூரிலும் பூஜை செய்துள்ளனர். ஆனி மாதம் முதல் நாளன்று பட்டீஸ்வர இறைவன் இத்தலத்திற்கு பல்லக்கு உற்சவத்தன்று எழுந்தருளுவார்.

ஆறை மேற்றளி கைலாசநாதர் ஆலயம் புகைப்படங்கள்
>ஆலயத்தின் வெளித் தோற்றம் நந்தி மண்டபம் அர்த்த மண்டபத்தில் விநாயகர்