இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடல்களில் கூறப்பட்டுள்ள வேங்கூர், பனங்காட்டூர், திருமலை, கீழையில், கிள்ளிகுடி ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | ஆழியூர் |
| இறைவன் பெயர் | கங்காளநாதர் |
| இறைவி பெயர் | கற்பகவல்லி |
| பதிகம் | அப்பர் (6-70-7), சுந்தரர் (7-12-7) |
| எப்படிப் போவது | திருவாரூர் - நாகப்பட்டிணம் பேருந்து சாலையில் கீவளூருக்கும், சிக்கலுக்கும் இடையே ஆழியூர் உள்ளது. பிரதான சாலையில் ஆழியூரை அடைந்து ஊருக்குள் சற்று உள்ளடங்கி உள்ள கோவிலுக்கு வழி விசாரித்துக் கொண்டு செல்ல வேண்டும். |
| ஆலய முகவரி |
அருள்மிகு கங்காளநாதர் திருக்கோவில் ஆழியூர் ஆழியூர் அஞ்சல் வழி கீவளூர் நாகப்பட்டிணம் மாவட்டம் PIN - 611117 |
திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 7-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.
வீழிமிழலை வெண்காடு வேங்கூர் வேதிகுடி விசயமங்கை வியலூர் ஆழி யகத்தியான் பள்ளி அண்ணாமலை ஆலங்காடும் அரதைப்பெரும்பாழி பழனம் பனந்தாள் பாதாளம் பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட்டூர் தண் காழி கடல் நாகைக் காரோணத்தும் கயிலாய நாதனையே காணலாமே. பொழிப்புரை : சிவபெருமானாருக்கு உரிய தலங்கள் ஈழநாட்டில் உள்ள மாதோட்டம், தென்னாட்டில் உள்ள இராமேச்சுரம், சோழநாட்டிலுள்ள துருத்தி, நெய்த்தானம், திருமலை, ஆழி, கடல் சூழ்ந்த நிலவுலகிற் கெல்லாம் அணியாய் விளங்கும் கீழையில், கிள்ளிகுடி என்பவையாகும்.
கோவில் அமைப்பு: நான்கு புறமும் மதிற்சுவரும், உயரமான மரக்கதவுடன் கூடிய ஒரு வாயிலுடனும், ஒரு பிராகாரத்துடனும் ஆலயம் அமைந்துள்ளது. முகப்பு வாயில் கடந்து உள்ளே சென்றால் நேரே விநாயகர், அதையடுத்து பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம் இருக்கக் காணலாம். அடுத்துள்ள வாயில் வழியே உள்ளே நுழைந்தால் ஒரு விசாலமான முன் மண்டபம் உள்ளது. நேரே கிழக்கு நோக்கி சதுரபீட ஆவுடையார் மீது லிங்க உருவில் மூலவர் கங்காளநாதர் எழுந்தருளியுள்ளார். முன் மண்டபத்தின் வடபகுதியில் தெற்கு நோக்கிய அம்பாள் கற்பூரவல்லி சந்நிதி உள்ளது. வெளிப் பிராகாரம் சுற்றி வரும்போது தென் மேற்கு மூலையில் பிரளயம் காத்த விநாயகரும், மேற்குச் சுற்றில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியரும், அதையடுத்து கஜலட்சுமியும் கோவில் கொண்டுள்ளனர். கிழக்குப் பிராகாரத்தில் வடகிழக்கில் பைரவர் மற்றும் சூரியன் சிலாஉருவங்கள் உள்ளன.
தல வரலாறு: ஸ்ரீ முருகப் பெருமான் தேவர்களைக் காக்க திருச்செந்தூரில் அசுரன் சூரபத்மனையும், அவனைச் சார்ந்தவர்களையும் அழித்தார். அசுரர்களைக் கொன்றதால் ஏற்பட்ட வீரஹத்தி தோஷம் நீங்க என்ன செய்வது என்று அவரது தந்தையான சிவபெருமானைக் கேட்டார். அதற்கு ஈசன், "பூவுலகில் தட்சிண பத்ரி ஆரண்யம் என்று போற்றப்படும் கீழ்வேளூர் திருத்தலத்தில் சுயம்புலிங்க வடிவில் எழுந்தருளி அருள்பாலிக்கும் என்னை நவலிங்க பூஜை செய்து, வழிபட்டு, தவமியற்றி வந்தால் இந்த தோஷம் நீங்கும்"' என்று கூறி அருளினார். அதன்படி முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்த லிங்கங்களில் ஆழியூரிலுள்ள கங்காளதார் ஒருவர் என்று தல வரலாறு கூறுகிறது. கீவளூரில் முருகர் செய்யும் பூஜைக்கு இடையூறு வராமல் காக்க அஞ்சுவட்டத்தம்மன் காவல் இருந்தது பொல ஆழியூரிலும் புருகர் பூஜையைக் காக்க பிடாரி அம்மன் காவல் காத்ததாக சொல்லப்படுகிறது. பிடாரி அம்மனுக்கு இவ்வாலயத்தில் தனி சந்நிதி உள்ளது.
| ஆழியூர் கங்காளநாதர் ஆலயம் புகைப்படங்கள் | ||
|---|---|---|
ஆலயத்தின் முகப்பு வாயில் |
நந்தி மண்டபம், பலிபீடம் |
இரண்டாவது நுழைவாயில் |
முன் மண்டபத்தில் மூலவர் சந்நிதி |
வெளிப் பிராகாரம், மூலவர் கருவறை விமானம் |
வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் |
பிரளயம் காத்த விநாயகர் சந்நிதி |
பைரவர், சூரியன் |
சுப்பிரமணியர் சந்நிதி |