தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள் பற்றிக் கூறும் இணையதளம்

Main menu


இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள உருத்திரகோடி பொதியில்மலை, தஞ்சை, வழுவூர் வீரட்டம், மாதானம், வேதீச்சுரம், விவீச்சுரம், வெற்றியூர், கஞ்சாறு, பஞ்சாக்கை ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்உஞ்சேனை மாகாளம் (இன்றைய நாளில் உஜ்ஜயினி என்று பெயர்)
இறைவன் பெயர்மகாகாளேஸ்வரர்
இறைவி பெயர்சங்கரி, ஹரசித்திதேவி
பதிகம்அப்பர் (6-70-8)
எப்படிப் போவது சென்னை புதுடில்லி ரயில் பாதையில் மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள போபால் என்ற ஊரிலிருந்து மேற்கே சுமார் 170 கி.மீ. தொலைவில் சிப்ரா ஆற்றின் கிழக்குக் கரையில் உஜ்ஜயினி அமைந்துள்ளது. சென்னையில் இருந்து சுமார் 1300 கி.மீ. தொலைவில் உள்ளது,
ஆலய முகவரி அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோவில்
உஜ்ஜயினி
உஜ்ஜயினி அஞ்சல்
உஜ்ஜயினி வட்டம்
உஜ்ஜயினி மாவட்டம், மத்தியப் பிரதேசம்
PIN - 456001

இவ்வாலயம் தினந்தோறும் காலை 4 மணி முதல் இரவு 10-30 மணி வரையிலும் தொடர்ச்சியாக திறந்திருக்கும். பகலில் கோவில் மூடுவதில்லை.
உஞ்சேனை மாகாளம் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 8-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.


உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்
உருத்திர கோடி மறைக்காட்டுள்ளும்
மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்
வீரட்டம் மாதானங் கேதாரத்தும்
வெஞ்சமாக்கூடல் மீயச்சூர் வைகா
வேதீச்சுரம் விவீச்சுரம் வெற்றியூரும்
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையுங்
கயிலாய நாதனையே காணலாமே.

பொழிப்புரை :		www.thevaaram.org.


உஞ்சேனை மாகாளம், ஊறல், ஓத்தூர், உருத்திர கோடி, மறைக்காடு, மேகங்கள் பொருந்திய 
பொதியமலை, தஞ்சை, வழுவூர்வீரட்டம், மாதானம், கேதாரம், வெஞ்சமாக்கூடல், மீயச்சூர், 
வைகாவூர், வேதீச்சரம், விவீச்சுரம், வெற்றியூர், கஞ்சனூர், கஞ்சாறு, பஞ்சாக்கை ஆகிய 
இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம்.

தலப் பெருமை: இந்தியத் திருநாட்டில் மூன்று சிவஸ்தலங்கள் மாகாளம் என்ற பெயருடன் விரங்குகின்றன. அவை வடதாட்டிலுள்ள உஜ்ஜயனி மாகாளம், காவிரி தென்கரைத் தலமான அம்பர் மாகாளம் மற்றும் தொண்டை நாட்டுத் தலமான இரும்பை மாகாளம். இவற்றில் உஜ்ஜயனி மாகாளம் ஒரு தேவார வைப்புத் தலம். மற்ற இரண்டும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களாகும். இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் உஜ்ஜயினியும் ஒன்று. இத்தலத்தின் இறைவன் மகாகாளேஸ்வரர். அம்பாளின் சக்தி பீடங்களில் முழங்கை விழுந்த இடமான இது மகோத்பலா பீடம் ஆகும்.

உஜ்ஜயனி இந்திய நாட்டில் பழங்காலத்திலிருந்தே மிகவும் புகழ் பெற்ற ஒரு நகரமாகும். புராண காலம், சரித்திர காலம், இராமாயண, மகாபாரத இதிகாசங்கள் காலம் ஆகிய கால கட்டங்களிலும் சிறப்பு வாய்ந்த தலம். தேவாமிர்தம் சிந்திய நான்கு புண்ணிய ஊர்களில் உஜ்ஜயினியும் ஒன்று. துவாபர யுகத்தில் உஜ்ஜயினியில் தான் சாந்தீப முனிவரிடம் கிருஷ்ணர், பலராமர், சுதாமர் ஆகியோர் பாடம் கற்றதாக வரலாறு. முன்காலத்தில் மாளவதேசத்தின் தலைநகராகவும், விக்கிரமாதித்திய மகாராஜாவின் தலை நகரமாகவும் உஜ்ஜயினி விளங்கியது.. விக்கிரமாதித்தனும், அவனது மந்திரி பட்டியும் உஜ்ஜயினி காளியிடம் வரம் பெற்று சாகசங்கள் பல புரிந்து நாடாறு மாதம், காடாறு மாதம் என்று 2000 ஆண்டுகள் அரசாட்சி புரிந்த தலம். விக்கிரமாதித்தராஜாவின் தெய்வீக சிம்மாசனம் இருந்த இடம் இது.

உஜ்ஜயினியில் மகாகாளர் கோயில் இருப்பது போலவே, மகாகாளி கோயிலும் சிப்ர நதிக்கரையில் உள்ளது. இக்காளி கோயிலும் மிகவும் பிரசித்தி பெற்றது. விக்கிரமாதித்திய மன்னனும், பட்டியும் இந்த மகா காளியிடம் வரம் பெற்றுத்தான், 2000 வருடங்கள் ஆட்சி புரிந்து பல சாகசங்கள் செய்ததாகக் கூறப்படுகின்றன. இந்த மகா காளிக்கு ஹரசித்திதேவி என்ற வேறு பெயரும் உண்டு.