தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள் பற்றிக் கூறும் இணையதளம்

Main menu


இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வைப்புத் தலப் பாடல்களில் கூறப்பட்டுள்ள பழையாறை, முழையூர், பொருப்பள்ளி, சிவப்பள்ளி, தவப்பள்ளி, பரப்பள்ளி ஆகியவையும் வைப்புத் தலங்களாகும்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்அறப்பள்ளி
இறைவன் பெயர்அறப்பளீஸ்வரர்
இறைவி பெயர்தாயம்மை, அறம்வளர்த்தநாயகி
பதிகம்சம்பந்தர் (2-39-4), அப்பர் (6-70-1, 6-71-1)
எப்படிப் போவது நாமக்கல்லிலிருந்து சுமார் 52 கி.மீ. தொலைவில் கொல்லிமலை உள்ளது. கொல்லிமலையின் ஒரு பகுதியான அறப்பள்ளிக்குச் செல்ல மலைப்பாதை வசதி உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு அறப்பளீஸ்வரர் திருக்கோவில்
கொல்லிமலை
பெரிய கோவிலூர் அஞ்சல்
வளப்பூர் நாடு, கொல்லிமலை
நாமக்கல் மாவட்டம்
PIN - 637411

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 1 மணி வரையிலும், பகல் 2.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். திருவிழா நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கோவில் திறந்திருக்கும்.

இத்தலத்திற்கு சம்பந்தரின் 2-வது திருமுறையில் 39-வது பதிகத்தில் 4-வது பாடல், திருநாவுக்கரசர் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 1-வது பாடல், 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 1-வது பாடல், மற்றும் ஆக 3 பாடல்களில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.


அறப்பள்ளி அகத்தியான்பள்ளி வெள்ளைப் பொடிப்பூசி ஆறணிவானமர் காட்டுப்பள்ளி	2-39-4
சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன்பள்ளி திருநனிபள்ளி சீர் மகேந்திரத்துப்
பிறப்பில்லவன் பள்ளிவெள் ளச்சடையான் விரும்பும்மிடைப் பள்ளிவண் சக்கரமால்
உறைப்பாலடி போற்றக் கொடுத்தபள்ளி யுணராய்மட நெஞ்சமே யுன்னிநின்றே.

பொழிப்புரை :

நெஞ்சமே! கோயில் எனப்பொருள் தரும் பள்ளி என முடியும் கொல்லி அறைப்பள்ளி, அகத்தியான்பள்ளி, 
காட்டுப்பள்ளி, சிறப்பள்ளி, சிராப்பள்ளி செம்பொன்பள்ளி, திருநனிபள்ளி முதலான தலங்களை உன்னி 
உணர்வாயாக, உனக்குப் பயன் பல விளையும்.

தில்லைச் சிற்றம்பலமும் செம்பொன்பள்ளி	6-70-1
தேவன்குடி சிராப்பள்ளி தெங்கூர்
கொல்லிக் குளிர் அறைப்பள்ளி கோவல்
வீரட்டம் கோகரணம் கோடிகாவும்
முல்லைப் புறவம் முருகன் பூண்டி
முழையூர் பழையாறை சத்தி முற்றம்
கல்லில் திகழ் சீர் ஆர் காளத்தியும்
கயிலாயநாதனையே காணலாமே.

பொழிப்புரை :

தில்லைச்சிற்றம்பலம், செம்பொன்பள்ளி, தேவன்குடி, சிராப்பள்ளி, தெங்கூர், கொல்லி அறைப்பள்ளி,, 
கோவல் வீரட்டம், கோகரணம், கோடிகா, முல்லைக் கொடிகளை உடைய காடுகளை உடைய முருகன் பூண்டி, 
முழையூர், பழையாறை, சத்தி முற்றம், குறிஞ்சி நிலத்தில் திகழ்கின்ற சிறப்பு நிறைந்த காளத்தி ஆகிய 
திருத்தலங்களில் கயிலாய நாதனைக் காணலாம்.

பொருப்பள்ளி வரைவில்லாப் புரம் மூன்று எய்து		6-71-1
புலந்தழியச் சலந்தரனைப் பிளந்தான் பொற்சக்
கரப்பள்ளி திருக்காட்டுப்பள்ளி கள்ளார்
கமழ் கொல்லி அறைப்பள்ளி கலவஞ் சாரற்
சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன்பள்ளி
செழு நனிபள்ளி தவப்பள்ளி சீரார்
பரப்பள்ளி யென்றென்று பகர்வோர் எல்லாம்
பரலோகத் தினிதாகப் பாலிப்பாரே.

பொழிப்புரை :	www.thevaaram.org

மேருவை வில்லாகக் கொண்டு திரிபுரங்களை அம்பால் எய்தானது பொருப்பள்ளி, வருந்தி அழியுமாறு  
சலந்தரனைச் சக்கரத்தால் பிளந்தானது அழகிய சக்கரப்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி, மது நிறைந்து 
மலர்கள் மணம் கமழும் கொல்லியறைப்பள்ளி, மயில்கள் ஆடும் சாரலினை உடைய சிராப்பள்ளி, 
சிவப்பள்ளி, செம்பொன்பள்ளி, செழிப்புமிக்க நனிபள்ளி, தவப்பள்ளி, புகழ்பொருந்திய பரப்பள்ளி 
என்று இத்தலப்பெயர்களைப்  பலகாலும் சொல்லுவார் எல்லாரும் மேலான தேவருலகை அடைந்து 
அதனை இனிமை மிகக் காப்பாராவார்.