இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள மந்தரமலை, வாரணாசி, விளத்தொட்டி, விராடபுரம், பிரம்பில், காறை ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | கண்ணை (இன்றைய நாளில் செங்கம் என்று பெயர்) |
| இறைவன் பெயர் | ரிஷபேஸ்வரர் |
| இறைவி பெயர் | அனுபாம்பிகை |
| பதிகம் | அப்பர் (6-70-6) |
| எப்படிப் போவது | திருவண்ணாமலையில் இருந்து மேற்கே சுமார் 30 கி.மீ. தொலைவில் சேயாற்றின் கரையில் செங்கம் உள்ளது. |
| ஆலய முகவரி |
அருள்மிகு ரிஷபேஸ்வரர் திருக்கோவில் செங்கம் செங்கம் அஞ்சல் செங்கம் வட்டம் திருவண்ணாமலை மாவட்டம் PIN - 606701 இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 9-30 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும். |
திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 6-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.
மண்ணிப் படிக்கரை வாழ்கொளிபுத்தூர் வக்கரை மந்தாரம் வாரணாசி வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி விளமர் விராடபுரம் வேட்களத்தும் பெண்ணை அருட்டுறை தண் பெண்ணாகடம் பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூரும் கண்ணை களர் காறை கழிப்பாலையும் கயிலாய நாதனையே காணலாமே. பொழிப்புரை : மண்ணிப்படிக்கரை, வாழ்கொளிபுத்தூர், திருவக்கரை, மந்தாரம், வாரணாசி, வெண்ணி, விளத்தொட்டி, வேள்விக்குடி, விளமர், விராடபுரம், வேட்களம், பெண்ணையாற்றங்கரையிலுள்ள அருட்டுறை, பெண்ணாகடம், பிரம்பில், பெரும்புலியூர், பெருவேளூர், கண்ணை, திருக்களர், காறை, திருக்கழிப்பாலை முதலிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம்.
கோவில் அமைப்பு: சுமார் 3 ஏக்கர் நிலப்பரவளவில் இவ்வாலயம் ஒரு கோபுரத்துடனும், பிராகாரத்துடனும் அமைந்துள்ளது. மூலவர் ரிஷபேஸ்வரர் சுயம்பு லிங்கத் திருமேனியுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அம்பாள் சந்நிதியும் கிழக்கு நோக்கியே அமைந்துள்ளது. இந்த இரு சந்நிதிக்கும் இடையே முருகர் சந்நிதி உள்ளது. பிராகாரத்தில் விநாயகர், மகாலட்சுமி, வீரபத்திரர், நவக்கிரக சந்நிதி ஆகியவை அமைந்துள்ளன். கோஷ்ட மூர்த்திகளாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
செங்கம் சங்ககாலம் தொட்டே வழங்கி வரும் ஒரு பழமையான ஊராகும், சங்க நூல்கள் மூலம் இவ்வூரைத் தலைநகராகக் கொண்டு நன்னன்சேய் நன்னன் என்ற அரசன் ஆண்டு வந்தான் என்பதை அறியலாம். பல்லவ மன்னர்கள் மகேந்திரவர்மன், நரசிம்மவிஷ்ணு ஆகியோர் இவ்வூரை ஆட்சி செய்து வந்துள்ளதை கல்வேட்டுகள் மூலம் அறியலாம்.
இக்கோவிலில் நாள்தோறும் இரு கால பூஜைகள் நடைபெறுகின்றன. சித்திரை மாதத்தில் பிரமோத்சவம், பங்குனி உத்திரம், திருக்கலயாண உற்சவம் ஆகியவை இக்கோவிலில் நடைபெறும் விழாக்களாகும்.