சுந்தரரின் பதிகப் பாடலில் குறிப்படப்பட்டுள்ள அமுதனூர், தண்டந்தோட்டம், தண்டங்குறை, குறுக்கை நாட்டிலுள்ள குறுக்கை ஆகியவையும் வைப்புத் தலங்களாகும்
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | கொண்டல் |
| இறைவன் பெயர் | தாரகபரமேஸ்வரர் |
| இறைவி பெயர் | |
| பதிகம் | அப்பர் (6-51-9), சுந்தரர் (7-12-2) |
| எப்படிப் போவது | சீர்காழி பேருந்து நிலையத்தில் இருந்து பனங்காட்டங்குடி செல்லும் சாலையில் வள்ளுவக்குடி தாண்டி சுமார் 12 கி.மீ. தொலைவில் கொண்டல் உள்ளது. |
| ஆலய முகவரி |
அருள்மிகு குமார சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கொண்டல் வள்ளவக்குடி அஞ்சல் சீர்காழி வட்டம் மயிலாடுதுறை மாவட்டம் PIN - 609116 இவ்வாலயம் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 51-வது பதிகத்தில் 9-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.
கொண்டலுள் உள்ளார் கொண்டீச்சரத்தின் உள்ளார் கோவலூர் வீரட்டம் கோயில் கொண்டார் தண்டலையார் தலையாலங்காட்டின் உள்ளார் தலைச்சங்கைப் பெருங்கோயில் தங்கினார் தாம் வண்டலொடு மணற்கொணரும் பொன்னி நன்னீர் வலஞ்சுழியார் வைகலின் மேன் மாடத்துள்ளார் வெண்டலைமான் கைக்கொண்ட விகிர்த வேடர் வீழிமிழலையே மேவினாரே. பொழிப்புரை : வெள்ளிய மண்டையோட்டைக் கையில் ஏந்திய, உலகத்தார் கொள்ளும் வேடங்களிலிருந்து வேறுபட்ட வேடத்தை உடைய பெருமானார், கொண்டல், கொண்டீச்சரம், கோவலூர் வீரட்டம், சோலைகள் சூழ்ந்த தலையாலங்காடு, தலைச்சங்காடு, காவிரி வண்டலொடு மணலைக் கரையில் சேர்க்கும் திருவலஞ்சுழி, வைகல் மாடக்கோயில் ஆகிய தலங்களில் தங்கி வீழிமிழலையை விரும்பி வந்தடைந்தார்
சுந்தரரின் 7-ம் திருமுறையில் 12-வது பதிகத்தில் 2-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.
அண்டத் தண்டத்தின் அப்புறத்தாடும் அமுதனூர் தண்டந் தோட்டந் தண்டங்குறை தண்டலை யாலங்காடு கண்டல் முண்டல்கள் சூழ்கழிப்பாலை கடற்கரை கொண்டல் நாட்டுக் கொண்டல் குறுக்கை நாட்டுக் குறுக்கையே. பொழிப்புரை : இவ்வண்டத்திற்கு அப்பால் உள்ள அண்டங்களுக்கும் அப்பால் நின்று நடனம் ஆடுகின்ற அமுதமாய் உள்ள இறைவனது தலங்கள், தண்டந்தோட்டம், தண்டங்குறை, தண்டலை, ஆலங்காடு, கடல் முள்ளியும் தாழையும் சூழ்ந்த கழிப்பாலை, கடற்கரை, கொண்டல் நாட்டிலுள்ள கொண்டல், குறுக்கை நாட்டிலுள்ள குறுக்கை என்பவை
சீர்காழியில் இருந்து பனங்காட்டங்குடி செல்லும் சாலையில் வள்ளுவக்குடி தாண்டி கொண்டல் செல்லும் வழி வரைபடம்கொண்டல் தலம் ஒரு தேவார வைப்புத் தலமான சிவாலயமாக இருந்தாலும் இன்றைய நாளில் இவ்வாலயத்திலுள்ள குமார சுப்பிரமணியசாமி சந்நிதி மிகவும் பிரபலமாக உள்ள காரணத்தால் இத்தலம் கொண்டல் முருகன் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. கோபுர வாயில் கடந்து உள்ள முன்மண்டபம் தாண்டிச் சென்றால் நேரே மூலவராக குமார சுப்பிரமணியர் தரிசனம் தருகிறார். அருகில் இத்தல இறைவன் தாரகபரமேஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது. பிரணவத்திற்கு பொருள் தெரியாத காரணத்தால் பிரம்மாவை சிறையிலிட்டு சிருஷ்டிக்கும் தொழிலை ஏற்றார் முருகப் பெருமான். பிரம்மாவை விடுதலை செய்யக்கோரி சிவனும், மகாவிஷ்ணுவும் இத்தலம் வந்து முருகனிடம் கேட்டுக் கொண்டனர் என்றது இத்தலத்தின் சிறப்பாகும்.
அருணகிரிநாதரின் திருப்புகழில் இத்தல முருகர் மீது பாடல் உள்ளது.