தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள் பற்றிக் கூறும் இணையதளம்

Main menu


இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள செம்பங்குடி, நல்லக்குடி, தென்களக்குடி, கருந்திட்டைக்குடி, மாணிகுடி, விடைவாய்க்குடி, புற்குடி, மாகுடி, புதுக்குடி ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.

மரக்கதவு சிற்பங்கள்
மரக்கதவு சிற்பங்கள்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்கடையக்குடி, (இன்றைய நாளில் கடையம் என்று பெயர்)
இறைவன் பெயர்வில்வாரண்யேஸ்வரர்
இறைவி பெயர்நித்ய கல்யாணி
பதிகம்அப்பர் (6-71-3)
எப்படிப் போவது தென்காசி - அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் அம்பாசமுத்திரத்தில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் கடையம் உள்ளது. கடையம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் ஊரிலிருந்து வெளியே வயல்களுக்கு நடுவே ஆலயம் இருக்கிறது.
ஆலய முகவரி அருள்மிகு வில்வாரண்யேஸ்வரர் திருக்கோவில்
கடையம்
கடையம் அஞ்சல்
அம்பாசமுத்திரம் வட்டம்
திருநெல்வேலி மாவட்டம்
PIN - 627415

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
கடையக்குடி வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 3-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இத்திருத்தாண்டகம் "குடி" என முடியும் தலங்களை வகுத்தருளிச் செய்தது.


நற்கொடி மேல் விடையுயர்த்த நம்பன் செம்பங்குடி
நல்லக்குடி நளி நாட் டியத்தான்குடி
கற்குடி தென்களக்குடி செங்காட்டங்குடி
கருந்திட்டைக்குடி கடையக்குடி காணுங்கால்
விற்குடி வேள்விக்குடி நல் வேட்டக்குடி
வேதிகுடி மாணிகுடி விடைவாய்க்குடி
புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி
புதுக்குடியும் போற்ற இடர் போகுமன்றே.

பொழிப்புரை :
நல்ல இடபக் கொடியை மேலே உயரத்தூக்கியவனும், நம்புதற்குரியவனுமாகிய 
சிவபெருமானுடைய செம்பங்குடி, நல்லக்குடி, பெருமைமிக்க நாட்டியத்தான்குடி, 
கற்குடி, இனிய களக்குடி, செங்காட்டங்குடி, கருந்திட்டைக்குடி, கடையக்குடி 
ஆகியவற்றோடு ஆராயுங்கால் குடியில் முடியும் ஊர்களாகிய விற்குடி, வேள்விக்குடி, 
நன்மைமிகு வேட்டக்குடி, வேதிகுடி, மாணிகுடி, விடைவாய்க் குடி, புற்குடி, மாகுடி, 
தேவன்குடி, நீலக்குடி, புதுக்குடி என்பனவற்றையும் புகழ்ந்து கூறத் துன்பம் நீங்கும்.

தல வரலாறு: தசரதருக்கு இராமன் மகனாகப் பிறக்க காரணாமாய் இருந்த தலம் என்று பெருமை இத்தலத்திற்கு உண்டு. ஸ்ரவணன் என்பவன் குளத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு இருக்கும் போது ஏற்பட்ட சப்தத்தில் மான் தண்ணீர் குடிக்கிறது என்று எண்ணி வேட்டைக்குச் சென்ற தசரதர் அம்பு எய்ய அது ஸ்ரவணன் மீது பாய்ந்து அவன் இறந்து விடுகிறான். இறக்கும் துருணம் அவன் தசரதரிடம் தன் தாய் தந்தையருக்கு குடிக்க தண்ணீர் எடுக்க வந்ததைக் கூறி, அவர்களுக்கு தண்ணீர் கொடுக்கும் படி கூறிவிட்டு இறக்கிறான் அவன் பெற்றோருக்கு தண்ணீர் கொடுத்துவிட்டு தசரதர் அவர்களிடம் உண்மையைக் கூறுகிறார். மகனை இழந்த அவர்கள் எங்களைப் போல நீயும் புத்திர சோகம் அனுபவிப்பாய் என சாபம் கொடுத்தனர். தனக்கு புத்திர பாக்கியம் இல்லையே என்று கவலைப்பட்டுகொண்டிருந்த தசரதருக்கு, புத்திர சோகம் ஏற்படும் என்ற இந்த சாபத்தில் தனக்கு புத்திரன் பிறப்பான் என்று செய்தியும் உள்ளடங்கி இருந்ததால் ஆனந்தப்பட்டார். இராமாயணத்தில் நிகழ்ந்ததாக கருதப்படும் இச்சம்பவம் நிகழ்ந்த தலம் கடையக்குடி என்று நம்பப்படுகிறது. கோவில் நுழைவாயிலில் உள்ள பெரிய மரக்கதவில் இராமாயணம் சம்பந்தப்பட்ட மரசிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

பிரம்மா சிவபெருமானை நோக்கி கடுமையான தவம் புரிந்தார். அவர் தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் பிரம்மா முன் தோன்றி ஒரு வில்வபழத்தைக் கொடுத்து மறைந்தார். பிரம்மா மூன்றாக உடைத்து ஒன்றை வடக்கே கைலாய மலையிலும், இன்னொன்றை பாரதத்தின் நடுவிலுள்ள மேருமலையிலும், மற்றொன்றை தென்பொதிகை சாரலிலுள்ள துவாத சாந்தவனத்திலும் நட்டார். அந்த துவாத சாந்தவனப் பகுதி தான் இன்றைய கடையம். தேவர்கள் நீர் பாய்ச்சி இந்த மரத்தை வளர்த்தனர். இங்குள்ள வில்வ வனத்தில் இறைவன் சுயம்புவாகத் தோன்றியதால் அவர் வில்வவனநாதர் எனப்பட்டார். தற்போது கோயிலுக்குள் உள்ள வில்வமரத்தில் எப்போதாவது தான் காய் காய்க்கும். இதை எடுத்து உடைத்தால் உள்ளே சதைப்பகுதி சிவலிங்க பாணம் உருவில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் சிலருக்கு இந்தக் காய் கிடைத்துள்ளது. அவற்றை அவர்கள் பொக்கிஷமாக பாதுகாத்து வருகின்றனர்.

சும்பன், நிசும்பன் என்றி இரு அரக்கர்களை அழிக்க அன்னை பார்வதி அவதாரம் எடுத்து அவர்களை அழித்தார். அச்சமயம் பார்வதி தேவியின் பொன்மேனி கருமேனியாகிவிட, இவ்விடத்தில் அன்னை கடும் தவம் செய்தார். பிரம்மா அவர் முன் தோன்றி அன்னையின் மேனியை பொன்நிறமாக்கி அன்னைக்கு நித்யகல்யாணி என்ற பெயரையும் கொடுத்து அனுக்கிரகம் செய்தார்.

இத்தலத்து அம்பாள் நித்யகல்யாணி மிகுந்த உக்கிர தேவதையாக கிழக்கு நோக்கிய சன்னதியில் இருந்தாள். இவளுக்கு பூஜை செய்வதென்றால், சற்றும் விதிமுறைகள் தவறாமல் செய்ய வேண்டியிருந்தது. இதில் சிறு கோளாறு ஏற்பட்டாலும் பூஜைக்குச் சென்ற அர்ச்சகர்கள் இறந்து விடுவார்கள். இதனால், கோயில் பக்கமே யாரும் செல்ல அஞ்சினர். பிற்காலத்தில், பல யோசனைகளுக்குப் பிறகு தெற்கு நோக்கியிருந்த ஒரு சன்னதியில் அம்பாள் சிலை வைக்கப்பட்டது. அம்பாளின் சிலையில் இருந்த 16 கலைகளில், 15 கலைகளைப் பிரித்து ஒரு பீடத்தில் ஆவாஹனம் செய்யப்பட்டது. இந்த பீடம் தரணி பீடம் என்றழைக்கப்படுகிறது. மீதி உள்ள ஒரு கலையுடன் சாந்ததேவியாக அம்பாளுக்கு பூஜைகள் துவங்கின. அதன் பிறகு பிரச்னை ஏதும் ஏற்படவில்லை.

மகாகவி பாரதியார் கடையத்தில் வசித்த செல்லம்மாளை திருமணம் செய்து கொண்டவர். இவ்வூரில் தன் வாழ்நாளில் சில வருடங்கள் அவர் தங்கியிருந்தார். அப்போது வில்வவனநாத சுவாமி கோயிலுக்கு வந்து வில்வவனநாதர் மற்றும் நித்யகல்யாணி அம்பாள் மீது பல பாடல்களைப் பாடியுள்ளார். அவர் எழுதிய நவராத்திரி பாடலில், "உஜ்ஜெயினீ நித்ய கல்யாணீ ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி!"' என்று பாடினார். சங்கரன்தேவி, சரஸ்வதி மாதா, மகேஸ்வரன் தோழி, மகாலட்சுமி, உத்தமதேவி என்று அவர் நித்யகல்யாணி அம்பாளை வர்ணித்துள்ளார். கோயில் முன்பு உள்ள வட்டப்பாறையில் அமர்ந்து தான் "காணிநிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்" என்ற புகழ் பெற்ற பாடலை அவர் பாடினார்.

கோவில் அமைப்பு: ஆலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயிலுடன் ஆலயம் அமைந்துள்ளது. இரண்டு பிராகாரங்கள் கொண்ட இவ்வாலயத்தின் வெளிப் பிராகாரத்தில் குறிப்பிட்டுச் சொல்லும் படி சந்நிதிகள் ஏதுமில்லை. ஆலயம் புதுப் பொலிவுடன் காணப்படுகிறது. இரண்டாவது வாயில்க் கடந்து உள்ளே சென்றால் இறைவன் வில்வாரண்யேஸ்வரர் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கருவறைக்கு எதிரே பலிபீடம், நந்தி மற்றும் கொடிமரம் உள்ளன. கருவறை சுற்றுப் பிராகாரத்தில் 63 மூவர், விநாயகர், பைரவர், வள்ளி தெயவானையுடன் முருகர், நவக்கிரக சந்நிதி, நடராஜ சபை ஆகியவை உள்ளன. தெற்குச் சுற்றில் தரணிபீடம் உள்ளது. அம்பாள் நித்யகல்யாணி சந்நிதியும் இறைவன் சந்நிதிக்கு அடுத்து அமைந்துள்ளது.

கடையக்குடி வில்வாரண்யேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
ஆலயத்தின் முகப்பு வாயில் நவக்கிரக சந்நிதி வள்ளி தெய்வானையுடன் முருகர்
63 மூவர் பலிபீடம், நந்தி, கொடிமரம் தரணிபீடம்
மூலவர் வில்வாரண்யேஸ்வரர் இறைவி நித்யகல்யாணி மூலவர் சந்நிதி நுழைவாயில்