Shiva Temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


பஞ்சநதீஸ்வரர் திருக்கோவில், திருவையாறு

தகவல் பலகை
இறைவன் பெயர்பஞ்சநதீஸ்வரர், ஐயாரப்பர்
இறைவி பெயர்தர்மசம்வர்த்தினி, திரிபுரசுந்தரி
பதிகம்திருநாவுக்கரசர் - 12
திருஞானசம்பந்தர் - 5
சுந்தரர் - 1
எப்படிப் போவது திருவையாற்றின் மையப்பகுதியில் இத்தலம் அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் திருவையாறு இருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது. தஞ்சாவூரில் இருந்து அதிகமான பேருந்துகள் உள்ளன. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு வரும் வழியில் பாடல் பெற்ற அட்ட வீரட்டான முதல் தலமான திருக்கண்டியூர் அமைந்து உள்ளது. கும்பகோணத்தில் இருந்து செல்ல வெளியூர் செல்லும் பேருந்து நிலையத்தில் இருந்து 30 நிமிட இடைவெளியில் பேருந்துகள் உள்ளது. திருவையாறு பேருந்து நிலையத்தில் இருந்து 400 மீட்டர் தொலைவில் கோவில் அமைந்து உள்ளது.
அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்1. திருப்பழனம் - 2.8 கிமி -
2. திருநெய்த்தானம் - 2.2 கிமி -
3. திருவாலம்பொழில் - 7 கிமி -
4. திருப்பூந்துருத்தி - 6 கிமி -
5. திருக்கண்டியூர் - 2.5 கிமி -
6. திருசோற்றுத்துறை - 6.5 கிமி -
7. திருவேதிகுடி - 6.2 கிமி -
8. திருப்பெரும்புலியூர் - 4.4 கிமி -
அருகில் உள்ள தேவார வைப்புத் தலம்1. திங்களூர் - 4 கிமி -
அருகில் உள்ள திவ்ய தேசம்1. ஸ்ரீ ஹர சாப விமோசனப் பெருமாள் கோயில், திருக்கண்டியூர் - 2.7 கிமி -
ஆலய முகவரிஅருள்மிகு ஐயாரப்பர் திருக்கோவில்
திருவையாறு அஞ்சல்
திருவையாறு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 613204
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 12:30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

எமபயம் நீங்கி வாழ்வில் முக்தி பெற - ஐயாரப்பர் கோவில், திருவையாறு

பகுதி - 1
பகுதி - 2

படிக்கும் நேரம் - நிமிடங்கள்

காவிரிக்கரையில் காசிக்கு சமமாகக் கருதப்படும் 6 சிவஸ்தலங்களில் திருவையாறும் ஒன்றாகும். மற்ற 5 சிவஸ்தலங்கள் 1. திருவெண்காடு, 2. சாயாவனம், 3. மயிலாடுதுறை, 4. திருவிடைமருதூர் மற்றும் 5. திருவாஞ்சியம்.

கோவில் அமைப்பு: திருவையாறு சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் 7 நிலைகளையுடைய ராஜகோபுரமும், 5 பிரகாரங்களும் உள்ள ஒரு பெரிய கோவிலாகும். திருவையாறு மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முச்சிறப்பும் உடைய தலமாகும். முதல் பிரகாரத்தில் எழுந்தருளியுள்ள தக்ஷிணாமூர்த்தம் மிகச் சிறப்புடையது. இரண்டாம் பிரகாரத்தில் சோமஸ்கந்தருக்கு தனி ஆலயம் உள்ளது. அருகில் உள்ள ஜப்பேசுரமண்டபத்தில் பஞ்சபூதலிங்கங்களும், சப்தமாதர்களும், ஆதிவிநாயகரும், நவகிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் இச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், சோமச்கந்தர், தட்சினாமூர்த்தி, நடராஜர் ஆகிய திருவுருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூன்றாம் பிரகாரத்தில் கிழக்கிலும் தெற்கிலும் இருகோபுரங்கள் உள்ளன. நான்காம் பிரகாரத்தில் சூரியபுஷ்கரணி தீர்த்தமும், அப்பர் கைலாயக் காட்சி கண்ட வடகயிலாயம் அமைந்துள்ளன. இச்சுற்றின் 4 புறமும் கோபுரங்கள் இருக்கின்றன. ஐந்தாம் பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய ஐயாரப்பன் சந்நிதியும் திரிபுரசுந்தரி சந்நிதியும் இருக்கிறது. சுவாமி சந்நிதியிலும், அம்பாள் சந்நிதியிலும் தனித்தனியாக ராஜகோபுரங்கள் உள்ளன. இறைவன் சந்நிதி கருவறை விமானத்தின் பின்புறக் கோஷ்டத்தில் அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் சற்று மாறுபட்டது. வழக்கமாக இந்த அர்த்தநாரீஸ்வரர் சிற்பங்களில் சிவபெருமான் வலப்புறமும், உமையம்மை இடப்புறமும் தான் காணப்படுவர். ஆனால் இங்கு சிவன் இடப்புறமும் உமை வலப்புறமும் அமைந்திருப்பதைக் காணலாம். மேலும் இறைவன் கருவறையை சுற்றி வர முடியாது என்பதும் இத்தலத்தின் முக்கிய அம்சம், இறைவனின் கருவறையில் விரிசடை படர்ந்திருப்பதால் அதை சென்று மிதிக்கக் கூடாது என்பதால் கருவறை சுற்றுப் பிராகாரத்தை வலம் வரக்கூடாது என்பது இத்தலத்தில் கடைபிடிக்கப்படுகிறது.


இத்தலத்திலுள்ள வடகயிலாயம், தென்கயிலாயம் ஆகிய இரு சந்நிதிகள் முக்கியமானவை.. இக்கோவிலின் மூன்றாம் பிரகாரத்தின் வடபுறம் "ஓலோக மாதேவீச்சுரம்" என்ற கற்கோவில் உள்ளது. இது "வட கைலாயம்" எனப்படும். அப்பர் கைலாயக் காட்சி கண்ட வடகயிலாயம் முதல் இராஜராஜசோழனின் பட்டத்தரசி உலகமகாதேவியால் எழுப்பப்பட்டது. மூன்றாம் பிரகாரத்தின் தென்புறம் "தென் கைலாயம்" எனப்படும் கற்கோவில் உள்ளது. இது முதலாம் இராஜேந்தர சோழனின் மனைவிகளில் ஒருவரான பஞ்சவன்மாதேவியால் பழுது பார்க்கப்பட்டு திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இறைவன் சந்நிதி முன்னுள்ள சொக்கட்டான் மண்டபம், கீழைக் கோபுரத்திற்கு அருகிலுள்ள நூற்றுக்கால் மண்டபம் ஆகியவை கட்டட, சிற்பக்கலைச் சிறப்பு மிக்கவை.


இறைவனுக்கும், இறைவிக்கும் கிழக்கு நோக்கியவாறு உள்ள சந்நிதிகளைக் கொண்டு தனித்தனி கோவில்கள் உள்ளன. மூலவர் ஐயாரப்பர் ஒரு சுயம்பு லிங்கமாகும். இந்த லிங்கம் ஒரு பிருத்வி லிங்கம் ஆகையால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆவுடையார் மேல் மட்டுமே அபிஷேகம் செய்யப்படும். லிங்கத் திருமேனிக்கு புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்பெறும். திருக்கச்சி ஏகம்பம் ஆலய மூலவர் ஏகாம்பரநாதரும் ஒரு பிருத்வி லிங்கம் ஆதலால் அங்கும் புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்பெறும். திருவாரூர் ஆலய மூலவர் வன்மீகநாதரும் ஒரு பிருத்வி லிங்கம் என்பது குறிப்பிடதக்கது. இறைவி தர்மசம்வர்த்தினி காஞ்சி காமாட்சியைப் போன்றே இறைவனிடம் இருநாழி நெல் பெற்று 32 அறங்களையும் செய்தமையால் அறம் வளர்த்த நாயகி என்றும் அறியப்படுகிறாள். இத்தலத்தில் இறைவி இடக்கரம் இடுப்பில் ஊன்றியுள்ளபடியும், மேல் இரு கரங்களில் சங்கு சக்கரம் போன்றவையுடன் காணப்படுவதால் இத்தலத்தில் அம்பிகை மஹாவிஷ்னு ஸ்வரூபத்தில் தோற்றமளிக்கிறாள்.



திருப்புகழ் தலம்: இத்தலத்தில் முருகப்பெருமான் வில், வேல், அம்பு ஆகிய படைக்கலங்களுடன் வில்லேந்திய வேலவனாக "தனுசுசுப்ரமணியம்" என்ற பெயருடன் விளஙகுகிறார். இவர் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு நின்ற திருக்கோலத்தில் பின்புறம் மயில் விளங்கக் காட்சி தருகின்றார். மயிலின் முகம் தெற்கு நோக்கி உள்ளது. அருகில் இருபுறமும் தேவியர் எழுந்தருளியுள்ளனர். அருணகிரிநாதரின் திருப்புகழில் இத்தல முருகப்பெருமான் மீது ஒரு பாடல் உள்ளது.

இங்குள்ள தட்சினமூர்த்தி ஸ்ரீஹரிகுருசிவயோக தட்சினாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். வலது கரங்களில் கபாலம், அபய முத்திரையும், இடது கரங்களில் சூலம், வேதச்சுவடிகள் தாங்கியும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். மகாவிஷ்ணுவுக்கு குருவாக இருந்து ஸ்ரீதட்சிணாமூர்த்தி வேதங்களை உபதேசித்த ஒப்பற்ற திருத்தலம் திருவையாறு ஸ்ரீபஞ்சநதீஸ்வரர் திருக்கோயில். திருவீழிமிழலையில்திருவீழிமிழலையில் கண்மலரிட்டு அர்ச்சனை செய்து ஸ்ரீசக்கரத்தைப் பெற்ற திருமால், வேதங்களின் பெருமைகளை உணர்ந்து, இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீதட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெற்றார் என்று தலபுராணம் கூறும். இங்குள்ள தட்சினாமூர்த்தியின் பாதத்தின் கீழே கூர்மம் (ஆமையின் உருவம்) அமைந்திருப்பது ஒரு சிறப்பம்சமாகும். குரு ஸ்தலம் எனப் போற்றப்படுகிற இந்தக் கோயிலில், மாதந்தோறும் உத்திரட்டாதி நட்சத்திர நாளில், குரு பகவானுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதில் கலந்துகொண்டு, அபிஷேகம் செய்து ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு விளக்கேற்றி வழிபட்டால், சகல தோஷங்களும் நீங்கி, சந்தோஷம் நிலைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஆலயத்தின் தென்கோபுர வாசலில் உள்ள ஆட்கொண்டார் சந்நிதி மிகவும் முக்கியமானது. இச்சந்நிதியில் எப்போதும் குங்கிலியம் இங்கு மணந்து கொண்டே இருக்கும். பக்தர்கள் இங்குள்ள குண்டத்தில் குங்கிலியம் அர்ப்பணிப்பார்கள். சிவபெருமான் சுசரிதன் என்ற சிறுவனை எமனிடமிருந்து காப்பாற்றிய சமயம் எடுத்த உருவமே ஆட்கொண்டார். இவரை வணங்கி விட்டு கோவிலுக்குச் செல்வது ஒரு மரபு. இவரை வணங்கினால் எமபயம் நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

சுந்தரரும், சேரமான் பெருமானும் திருவையாறு வரும் போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிகொண்டிருந்தது. கலங்கி அக்கரையில் நின்ற சுந்தரர் பதிகம் பாட, இக்கரையில் இருந்த விநாயகர் "ஓலம் ஓலம்" என்று குரல் கொடுத்து காவிரியில் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தி அவரை அழைத்து வந்ததால் இங்குள்ள விநாயகர் ஓலமிட்ட விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

மூன்றாம் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் நின்று வடக்கு நோக்கி ஐயாறா என்று அழைத்தால் ஏழு முறை அது எதிரொலிக்கும். திருவையாறு செல்பவர்கள் இதனையும் அனுபவியுங்கள்.


அப்பர் கண்ட கைலாயம்: திருநாவுக்கரசர் கைலாயம் சென்று சிவபெருமானை தரிசிக்க விரும்பினர். காசியில் தன்னுடன் வந்த அடியார்களை தங்கியிருக்குமாறு சொல்லிவிட்டு தனித்துப் புறப்பட்டார். கைலாயப் பயணம் மிகவும் கடினமாக இருந்ததால் முதலில் நடந்து சென்ற அவர் பிறகு நடக்க முடியாமல் தவழ்ந்து செல்லத் தொடங்கினார். திருநாவுக்கரசர் படும் சிரமத்தைப் பார்த்த இறைவன் அவரை ஆட்கொள்ள நினைத்தார். அருகில் ஒரு குளத்தை ஏற்படுத்தி ஒரு முனிவர் வேடத்தில் அவரை நெருங்கி கைலாயம் செல்லும் வழியில் உள்ள சிரமங்களை எடுத்துக் கூறி திரும்பிச் செல்லும்படி கூறினார். இறந்தாலும் கைலைநாதனைக் காணாமல் ஊர் திரும்ப மாட்டேன் என்ற உறுதியுடன் இருந்த திருநாவுக்கரசரை ஆகாயத்தில் இருந்து அசரீரியாக அழைத்த சிவபெருமான் அங்குள்ள குளத்தில் மூழ்கி திருவையாற்றில் எழுவாய்! அங்கே உனக்கு கைலாயக் காட்சி தருகிறேன் என்று அருளினார். அதே போல் குளத்தில் மூழ்கி திருவையாற்றில் சூரியபுஷ்கரணி தீர்த்தத்தில் எழுந்தார். சிவபெருமான் தான் கூறியபடி அவருக்கு கைலாயக் காட்சி தந்து அருளினார். திருநாவுக்கரசரும்


மாதர் பிறைகண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதோடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாம லையா றடைகின்றபோது
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டேனவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்

என்ற பாடலுடன் தொடங்கும் பதிகம் பாடி இறைவனை தரிசித்தார். இந்த வரலாற்றை உணர்த்தும் வகையில் ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் உள்ள வடகைலாயம் (ஓலோகமாதேவீச்சரம்), தென்கைலாயம் ஆகிய இரண்டும் காண வேண்டிய ஒன்றாகும்.


இறைவன் ஆதி சைவராக வந்தது: திருவையாற்றில் இறைவனுக்கு பூஜை செய்யும் உரிமை பெற்றவர்கள் 24 பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் காசி யாத்திரை மேற்கொண்டார். நெடுநாள் ஆகியும் அவர் திரும்பி வராததால் அவருக்குரிய நிலபுலன்கள் மற்ற சொத்துக்களை தமக்கே உரிமை என்று ஏனைய 23 ஆதி சைவ அந்தணர்களும் கைப்பற்றிக் கொண்டனர். காசி யாத்திரை சென்ற ஆதி சைவரின் மனைவியும், மகனும் இறைவனிடம் நடந்ததை முறையிட்டு வேண்டினார்கள். அவர்களுக்கு அருள் புரியவும் மற்ற அந்தணர்களுக்கு பாடம் புகட்டவும் எண்ணிய சிவபெருமான் காசிக்குச் சென்ற அந்தணர் உருவத்தில் கங்கை நீருடன் ஐயாரப்பர் ஆலயத்திற்கு வந்து இறைவனுக்கு பூஜையும் செய்தார். மனைவியும், மகனும் மகிழ மற்ற 23 அந்தணர்களும் ஒடுங்கிப் போயினர். சில நாட்கள் கழித்து உண்மையான அந்தணர் காசியில் இருந்து கங்கை நீருடன் திரும்பிவர, இருவரில் யார் உண்மையான ஆதி சைவர் என்ற குழப்பம் ஏற்பட்டது. உண்மை அறியும் பொருட்டு யாவரும் கூடியிருக்க முதலில் வந்த ஆதி சைவர் திடீரென்று மறைந்துவிடுகிறார். வந்தவர் சிவபெருமானே என்று எல்லோரும் உணர்கின்றனர். இவ்வாறு ஆதி சைவராக வந்து தனக்குத் தானே பூஜை செய்து கொண்டவர் இத்தலத்து இறைவன் ஐயாரப்பர்.


திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்து பதிகம்

  1. கலையார் மதியோ டுரநீரும்
  2. பணிந்தவர் அருவினை பற்றறுத் தருள்
  3. புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
  4. கோடல் கோங்கங் குளிர்
  5. திருத்திகழ் மலைச்சிறுமி

திருநாவுக்கரசர் அருளிய இத்தலத்து பதிகம்

  1. மாதர்ப் பிறைக்கண்ணி யானை
  2. விடகிலேன் அடிநாயேன்
  3. கங்கையைச் சடையுள் வைத்தார்
  4. குண்டனாய்ச் சமண ரோடே
  5. தானலா துலக மில்லை
  6. குறுவித்த வாகுற்ற நோய்வினை
  7. சிந்திப் பரியன சிந்தி
  8. அந்திவட் டத்திங்கட் கண்ணியன்
  9. சிந்தை வாய்தலு
  10. சிந்தை வண்ணத்த
  11. ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
  12. ஓசை ஒலியெலா மானாய் நீயே

சுந்தரர் அருளிய இத்தலத்து பதிகம்

  1. பரவும் பரிசொன் றறியேன்நான்

அருணகிரிநாதர் அருளிய இத்தலத்து திருப்புகழ்

  1. சொரியு மாமுகி லோஇரு ளோகுழல்
பஞ்சநதீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்

ஆலயகோபுரம்
ஆலயத்தின் மற்றொரு கோபுரம்
2வது கோபுரம் கடந்து உட்தோற்றம்
உள் பிராகாரத் தோற்றம்
இறைவியின் தனிக்கோவிலுக்குச் செல்லும் வழி
இறைவியின் தனிக்கோவிலுக்குச் செல்லும் நுழைவாயில்
தென் கைலாயம்