தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | திருசோற்றுத்துறை |
இறைவன் பெயர் | ஓதவனேஸ்வரர், சோற்றுத்துறைநாதர், தொலையாச்செல்வர் |
இறைவி பெயர் | அன்னபூரணி, ஒப்பிலா அம்மை |
பதிகம் | திருநாவுக்கரசர் - 4 திருஞானசம்பந்தர் - 1 சுந்தரர் - 1 |
எப்படிப் போவது | தஞ்சாவூரில் இருந்து 13 கி.மீ. தொலைவிலும், திருவையாற்றில் இருந்து திருக்கண்டியூர் வழியாக சுமார் 6 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்திருக்கிறது. திருசோற்றுத்துறையில் இருந்து தெற்கே 3 கி.மீ. லைவில் திருவேதிக்குடி என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இருக்கிறது. திருவையாற்றில் இருந்து திருசோற்றுத்துறை செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு. |
ஆலய முகவரி |
அருள்மிகு ஓதவனேஸ்வரர் திருக்கோயில் திருச்சோற்றுத்துறை திருச்சோற்றுத்துறை அஞ்சல் (வழி) கண்டியூர் திருவையாறு வட்டம் தஞ்சை மாவட்டம் PIN - 613202 இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலய தொடர்புக்கு: திரு மனோகரன் / திரு கண்ணன்: கைபேசி: 9943884377 |
கோவில் அமைப்பு: கிழக்கு நோக்கிய ஒரு முகப்பு வாயிலுடனும், சுற்றிலும் மதிற்சுவருடனும் இவ்வாலயம் குடமுருட்டியாற்றின் கரையில் அமைந்துள்ளது. முகப்பு வாயலின் மேற்புறத்தில் சுதையாலான சிவனும், பார்வதியும் ரிஷபத்தின் மீது அமர்ந்தபடி காட்சி அளிக்கின்றனர். முகப்பு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் விசாலமான கிழக்கு வெளிப் பிரகாரம் உள்ளது. இந்த வாயிலுக்கு நேரே உட்பிரகாரத்திற்குச் செல்லும் வாயில் உள்ளது. இந்த வாயிலுக்கு முன் பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. கொடிமரம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. கருவறை, மற்றும் உட்பிரகாரமும் நான்கு புறமும் மதிற்சுவருடன் அமைந்துள்ளது. வெளிப் பிரகாரங்கள் நான்கு புறமும் விசாலமாக உள்ளன. .வெளிப் பிரகாரத்தின் தென்கிழக்குப் பகுதியில் தனிக் கோயிலாக அம்பாள் சந்நிதி கிழக்குப் பார்த்து அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் நின்ற கோலத்தில் ஒப்பிலாம்பிகை எழுந்தருளியுள்ளாள். இவருக்கு அன்னபூரணி என்ற பெயரும் உண்டு. அள்ள அள்ளக் குறையாமல் வழங்கிய சிவனுக்கு தொலையாச் செல்வர் என்றும், அவருக்குள் பாதியாகி அருள்புரியும் அம்மைக்கு அன்னபூரணி என்றும் திருநாமங்கள். அம்மையை உளமார உருகி வழிபட்டால், வறுமையும் பிணியும் விலகி விடும்.
இரண்டாவது நுழைவாயில் வழியே உள்ளே நுழைந்தால் அடுத்துள்ள பெரிய மண்டபத்தில் வலதுபுறம் நடராஜ சபை உள்ளது. இந்த மண்டபப் பகுதியிலிருந்து நேரே மூலவர் சந்நிதிக்குள் நுழைந்து விடலாம். தெற்காக கிழக்குப் பார்த்தபடி மகாவிஷ்ணு. அடுத்து, அர்த்த மண்டப நுழைவு வாயிலில் பெரிய ஆறுமுகப் பெருமான் மூர்த்தம் உள்ளது. இத்தலத்திற்குச் சிறப்பு தரும் மூர்த்தியான இவர் தனிக்கோயிலில் காட்சி தருகிறார். அடுத்து இருபுறமும் கௌதமர் சிலையும் அவர் வழிபட்ட ஐதிகக்காட்சி செதுக்கப்பட்ட சிலையும் உள்ளது. அதிகார நந்தியை வணங்கிவிட்டு உள்ளே நுழைந்தால், மகாமண்டபமும், அர்த்த மண்டபமும் தாண்டி, உள்ளே நோக்கினால் அருள்மிகு சோற்றுத்துறைநாதர் எனும் தொலையாச் செல்வர் கிழக்கு நோக்கி லிங்க உருவில் அருட்காட்சி தருகிறார். தெற்கு வெளிப் பிரகாரத்தில் இருத்தும் இறைவன் கருவறை பகுதிக்குச் செல்ல வழி உள்ளது.
தலச் சிறப்பு: தேவார மூவர் என்று போற்றப்படும் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற பெருமை உடையது இத்தலம். இத்தல இறைவனை வழிபடும் அடியார்களின் பசிப்பணி தீர இறைவன் சோறு வழங்குபவன் என்னும் பொருளைத் தருவதுடன், உயிரைப்பற்றிய பிறவிப்பபிணி தீர வீடுபேறு தருபவன் என்ற பொருளும் உண்டு. இது காசிக்கு அடுத்தபடியாக அட்சய பாத்திரம் கொடுத்த தலமாகும். சிறந்த சிவபக்தரான அருளாளருக்காக எடுக்க எடுக்கக் குறையாத அட்சய பாத்திரம் அருளிய சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் இத்தலம் தட்சிண கயிலாயம் என்று போற்றப்படும் திருவையாற்றின் சப்தஸ்தான தலங்களில் ஒன்றாகும். அடியவர்களது பசிப்பிணியைப் போக்க உணவு வழங்கிய இறைவன் எழுந்தருளிய தலம் என்பதால் இந்த ஊருக்கு திருச்சோற்றுத்துறை எனும் பெயர் ஏற்பட்டது. பிரம்மா, விஷ்ணு, இந்திரன், கவுதம முனிவர், சூரியன் ஆகியோர் வழிபட்டுள்ள சிறப்பைப் பெற்றது இத்தலம். இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் அம்பாள் சந்நிதி அமைந்துள்ள தலங்கள் திருமணத் தலங்கள் என்று அழைக்கப்படும். அவ்வகையில் இத்தலத்திலும் அம்பாள் அன்னபூரணியின் சந்நிதி இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் அமைந்துள்ளதால் திருச்சோற்றுத்துறை ஒரு திருமணத் தலமாக கருதப்படுகிறது.
சப்த ஸ்தானத் தலம்: திருவையாறைத் தலைமை தலமாகக் கொண்டு விளங்கும் சப்த ஸ்தானத் தலங்களில் இத்தலம் மூன்றாவது தலமாகும்.
தல வரலாறு: ஒரு முறை திருச்சோற்றுத்துறை இருந்த நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு மக்கிள் பசியால் வாடினர். இத்தலத்தில் வசித்து வந்த அருளாளர் என்ற சிவபக்தரும் பஞ்ச காலத்தில் பசியால் அவதிப்பட்டார். வருந்திய அருளாளன் இத்தல இறைவனிடம், "இப்படி மக்களை பசியில் தவிக்க விடுவது நியாயமா" என்று முறையிட்டார். திடீரென்று மழை பொழிய ஊரே வெள்ளக் காடானது. அப்போது ஒரு பாத்திரம் வெள்ளத்தில் மிதந்து வந்தது. இதைப்பார்த்த அருளாளர் அதை கையில் எடுக்க, இறைவன் "அருளாளா! இது அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம். இதை வைத்து அனைவருக்கும் சோறு போடு"' என்று அசரீரியாக குரல் கொடுத்து அருள் செய்தார். இந்த பாத்திரத்தை கையில் வைத்தபடி ஊராருக்கு சோறும், நெய்யும், குழம்புமாக போட்டு அவர்களின் பசி தீர்த்தார். இவ்வாறு இறைவன் அருளால் மக்களின் பசியைப் போக்கிய அருளாளருக்கும் அவர் மனைவிக்கும் இத்தலத்தில் கருவறை அர்த்த மண்டபத்திற்கு வெளியே சிலை உள்ளது.
Top