கோவில் அமைப்பு :இவ்வாலயம் ஒரு 5 நிலை கோபுரத்துடன் விளங்குகிறது. மேற்கு நோக்கிய சந்நிதி. கோபுர வாயில் இருபுறமும் துவார பாலகர் உள்ளனர். கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால் இடதுபுறம் சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. வெளிப் பிரகாரத்தில் விநாயகர், விசுவநாதர், விசாலாட்சி சந்நிதிகள் உள்ளன. அடுத்துள்ள மண்டபத்தில் வலதுபுறம் நவக்கிரக சந்நிதியும், இடதுபுறம் அம்பாள் சந்நிதியும் உள்ளன. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள். இத்தலத்து அம்மனை வழிபட்டால் ஞானம் கிடைக்கும் என்பது ஐதீகம். நேரே கருவறையில் இத்தலத்தின் மூலவர் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கருவறைச் சுற்றில் சுப்பிரமணியர், நவக்கிரகங்கள், நால்வர் சன்னதி, மூல விநாயகர், பஞ்சலிங்கம், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், காசி விஸ்வநாதர், வள்ளி, தெய்வானையுடன் முருகர், நவக்கிரகம், காசி விசாலாட்சி, நடராஜர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன. இத்தல இறைவனை காசிபர், அஷ்டவசுக்கள் ஆகியேர் பூஜித்துள்ளனர். இத்தலத்தில் உள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் மேதா தட்சிணாமூர்த்தியாக உள்ளார்.
திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய இப்பதிகம் 6-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. அப்பர் இத்தலத்திற்கான தம் பதிகத்தில் தென் பரம்பைக் குடியின் மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே என்று ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிடுகிறார். இதிலிருந்து ஊரின் பெயர் பரம்பைக்குடி என்றும், கோவிலின் பெயர் திருவாலம் பொழில் என்றும் அந்நாளில் வழங்கப்பட்டதாகத் தெரிகின்றது. இத்தலக் கல்வெட்டிலும் இறைவன் பெயர் "தென் பரம்பைக்குடி திருவாலம் பொழில் உடைய நாதர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.