Shiva Temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


வேதபுரீஸ்வரர் திருக்கோவில், திருவேதிகுடி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருவேதிகுடி
இறைவன் பெயர்வேதபுரீஸ்வரர், ஆராவமுது நாதர்
இறைவி பெயர்மங்கையர்க்கரசி
பதிகம்திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது திருவையாற்றில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் திருக்கண்டியூர் வந்து அங்கிருந்து வீரசிங்கன்பேட்டை வழியாக தென்கிழக்கே 4 கி.மீ. தொலைவில் திருவேதிக்குடி சிவஸ்தலம் அமைந்துள்ளது. திருசோற்றுத்துறை என்ற பாடல் பெற்ற ஸ்தலமும் அருகில் இருக்கிறது. திருவையாற்றில் இருந்து நகரப் பேருந்து உண்டு. கண்டியூரில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது.
அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்1. திருவையாறு - 6.2 கிமி -
2. திருநெய்த்தானம் - 7.7 கிமி -
3. திருப்பெரும்புலியூர் - 10 கிமி -
4. திருவாலம்பொழில் - 8.3 கிமி -
5. திருப்பூந்துருத்தி - 7.8 கிமி -
6. திருக்கண்டியூர் - 3.7 கிமி -
7. திருச்சோற்றுத்துறை - 3.7 கிமி -
8. தென்குடித்திட்டை - 8.6 கிமி -
9. திருப்புள்ளமங்கை - 7.9 கிமி -
10. திருசக்கரப்பள்ளி - 10.4 கிமி -
ஆலய முகவரி அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில்
திருவேதிகுடி
கண்டியூர் அஞ்சல்
திருவையாறு வட்டம்
தஞ்சை மாவட்டம்
PIN - 613 202

இவ்வாலயம் தினந்தோறும் காலை 9-30 மணி முதல் பகல் 12-30 வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

படிக்கும் நேரம் - நிமிடங்கள்

தல வரலாறு: பிரம்மாவிடம் இருந்த வேதங்களை, அசுரன் ஒருவன் எடுத்துச் சென்று கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். அதை மகாவிஷணு மீட்டு வந்தார். அசுரனிடம் இருந்ததால் உண்டான தோஷம் நீங்க, வேதங்கள் சிவனை நோக்கி இத்தலத்தில் தவமிருந்தன. சிவனும் வேதங்களை புனிதப்படுத்தினார். வேதங்களின் வேண்டுகோளை ஏற்று இத்தலத்தில் சிவபெருமான் வேதபுரீஸ்வரராக எழுந்தருளினார். ஊருக்கும் திருவேதக்குடி என்ற பெயர் ஏற்பட்டு பின்பு வேதிக்குடி என மருவியது. வேதங்களை மீட்டுக் கொடுத்த சிவபெருமானை இத்தலத்தில் பிரம்மாவும் பூஜித்துள்ளார்.

சப்த ஸ்தானத் தலம்: திருவையாறைத் தலைமை தலமாகக் கொண்டு விளங்கும் சப்த ஸ்தானத் தலங்களில் இத்தலம் நான்காவதாக போற்றப்படுகிறது.


கோவில் அமைப்பு: கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் காணப்படுகிறது. ஆலயத்திற்கு வெளியே பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. இராஜகோபுரத்தைக் கடந்து கோவிலுக்குள் சென்றால் மகாமண்டபம் வரும். அங்கு நடராஜர் சபை இருக்கிறது. உள் பிராகாரம் வலம் வரும்போது செவிசாய்ந்த விநாயகர், 108 சிவலிங்கங்கள் இருப்பதைப் பார்க்கலாம். அம்பாள் மங்கையர்க்கரசி சந்நிதி இரண்டாம் பிரகாரத்தில் தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது. அம்பாள் சந்நிதியை ஒட்டினாற்போல் வசந்த மண்டபம் இருக்கிறது. கோஷ்டங்களில் தட்சிணாமூர்த்தி, அர்த்த நாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை, விநாயகர், முருகன் மற்றும் மஹாலக்ஷ்மி ஆகியோரை தரிசிக்கலாம். கருவறையில் மூலவர் வேதபுரீஸ்வரர் காட்சி தருகிறார். கோவிலில் சப்தஸ்தான தல லிங்கங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 13, 14, 15 தேதிகளில் சூரியனுடைய கிரணங்கள் சிவலிங்கத்தின் மீது படுகிறது. சூரியன் ஈசனை பூஜை செய்வதாக ஐதீகம். இத்தலத்தில் சூரியன், பிரம்மா, குபேரன் ஆகியோர் தவமிருந்து வேதபுரீஸ்வரர் அருள் பெற்றிருக்கின்றனர். இத்தலம் ஒரு திருமண பிரார்த்தனை தலமாக கருதப்படுகிறது.

பிரம்மன் பூஜித்த தட்சிணாமூர்த்தியை நாமும் வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். 4 வேதங்களும் இங்கு இறைவனை வழிபட்டுள்ளன. இத்தலத்துப் பிள்ளையார் வேதம் கேட்கச் சாய்ந்திருக்கும் நிலையில் காணப்படுகிறார். இவருக்கு வேதப்பிள்ளையார் என்று பெயர். இத்தலத்திலுள்ள அர்த்தநாரீஸ்வர கோலம் சற்று வித்தியாசமாக உள்ளது. பொதுவாக அர்த்தநாரீஸ்வரர் என்றால் சிவன் வலது புறமும், அம்மன் இடது புறமும் இருப்பார்கள். ஆனால் இங்கு அம்மன் வலது புறமும், சிவன் இடது புறமும் இணைந்துள்ள அர்த்தநாரீஸ்வரரைக் கணலாம்.

இத்தலத்தின் தீர்த்தம் வேத தீர்த்தம். இது கோவிலுக்கு எதிரில் உள்ளது. தலவிருட்சமாக வில்வமரம் உள்ளது. வாழைமடுவில் இறைவன் தோன்றிய காரணத்தினால் வாழைமடுநாதர் என்ற பெயரும் இத்தல இறைவனுக்கு உண்டு.


திருமணத்தில் தடை உள்ளவர்கள் இத்தலம் வந்து இறைவனையும், அம்மனையும் வழிபட்டு, சம்பந்தரின் பதிகத்தை வீட்டில் அமர்ந்து காலை மாலை விடாது படித்து வந்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

இத்தலத்திற்கான திருஞானசம்பந்தரின் பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. திருமண தோஷம் நீங்கி, ஆண்களும், பெண்களும் மகிழ்ச்சியுடன் திருமணச் சடங்குகள் செய்து, முறைப்படி திருமணம் செய்து கொள்ளும் தலம் இது என்று தனது தேவாரப் பிதிகத்தில் சம்பந்தர் குறிப்பிடுகிறார். நீறுவரி யாடரவொ டாமைமன வென்புநிரை பூண்பரிடபம் என்று தொடங்கும் இப்பதிகத்தின் 7-வது பாடலில் கன்னியரும், ஆடவரும் விரும்பும் மணம் கைவரப் பெறும் தலம் இது என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார்.


உன்னியிரு போதுமடி பேணுமடி யார்தமிட ரொல்கவருளித்
துன்னியொரு நால்வருட னானிழ லிருந்ததுணை வன்றனிடமாம்
கன்னியரொ டாடவர்கண் மாமணம் விரும்பியரு மங்கலமிக
மின்னியலு நுண்ணிடைநன் மங்கைய ரியற்றுபதி வேதிகுடியே.

பொழிப்புரை: (www.thevaaram.org) காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும் தியானித்துத் தன் திருவடிகளைப் போற்றும் அடியார்களுடைய துன்பங்கள் நீங்கும்படி அருள்செய்பவன் சிவபெருமான். தன்னையடைந்த சனகர், சனந்தனர், சனாதனர், சனற் குமாரர் என்ற நான்கு முனிவர்கட்கும் கல்லால மரத்தின்கீழ் தட்சிணாமூர்த்தி கோலம் கொண்டு அறம் உரைத்தவன். அனைத்து உயிர்களுக்கும் பற்றுக்கோடாய் விளங்குபவன். அவன் உறைவிடம் கன்னியர்களும், ஆடவர்களும் சிறப்பான வகையில் திருமணம் செய்து கொள்ளும் மங்கலநாளில் திருமணத்திற்குரிய மங்கலச் சடங்குகளை மிகச் சிறப்புற நடத்துகின்ற மின்னலைப் போன்ற நுண்ணிடையுடைய மகளிர்கள் வாழும் திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும்.


திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்து பதிகம்

  1. நீறுவரி ஆடரவொ டாமைமன

திருநாவுக்கரசர் அருளிய இத்தலத்து பதிகம்

  1. கையது காலெரி நாகங்
வேதபுரீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்

3 நிலை கோபுரம்
வெளிப் பிராகாரம், சுவாமி கருவறை விமானம்
கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி
வள்ளி தெய்வானையுடன் முருகர்
தல விருட்சம், அருகில் லிங்கம்
அம்பாள் சந்நிதி
ஆலயத்திற்கு வெளியே பலிபீடம், நந்தி மண்டபம்
அம்பாள் மங்கையர்க்கரசி