Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருக்கண்டியூர்
இறைவன் பெயர்பிரம்ம சிரகண்டீஸ்வரர், வீரட்டானேஸ்வரர்
இறைவி பெயர்மங்கள நாயகி
பதிகம்திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது அஷ்ட வீரட்டான ஸ்தலங்களில் ஒன்றான திருக்கண்டியூர் மற்றொரு பாடல் பெற்ற தலமான திருவையாற்றில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலை வழியில் சுமார் 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது. சாலை ஓரத்திலேயே கோவில் உள்ளது. திருவையாற்றில் இருந்து நகரப் பேருந்து உண்டு.
ஆலய முகவரி அருள்மிகு பிரம்ம சிரகண்டீஸ்வரர் கோவில்
திருக்கண்டியூர்
திருக்கண்டியூர் அஞ்சல்
(வழி) திருவையாறு
தஞ்சை மாவட்டம்
PIN - 613202

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
Tirukandiyur mapதிருவையாறில் இருந்து கண்டியூர் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

திருக்கண்டியூர் சிவபெருமானின் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாகும். பார்வதிதேவியின் வேண்டுகோளுக்கு இணங்க சிவபெருமான் பிரம்மாவின் 5 தலைகளுள் ஒன்றைக் கிள்ளி எடுத்த தலம் என்றதால் இத்தலம் கண்டியூர் வீரட்டம் என ஆயிற்று.

கோவில் அமைப்பு: மேற்கு நோக்கி இக்கோவிலின் இராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சி தருகின்றது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே கவசமிட்ட கொடிமரம், நந்தி மற்றும், பலிபீடம் உள்ளன. கொடிமர விநாயகரும் காட்சி தருகின்றார். வெளிப் பிரகாரத்தில் இடதுபுறம் தண்டபாணி சந்நிதி தனிக்கோயிலாக வெளவால் நெத்தி அமைப்புடைய மண்டபத்துடன் உள்ளது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலம். அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்கள். பெயருக்கேற்ற மங்களப் பொலிவு. வலதுபுறம் விநாயகர் உள்ளார். உள் வாயில் கடந்ததும் இடதுபுறம் வள்ளி தெய்வயானையுடன் கூடிய சுப்பிரமணியர் காட்சி தருகிறார். அடுத்து மகாலட்சுமி சந்நிதியும் எதிரில் நடராஜ சபையும் உள்ளது. வலமாக வரும்போது விஷ்ணுதுர்க்கை சந்நிதி உள்ளது. பைரவரும், பலவகை விநாயகர்களும், (வெவ்வேறு வகை மூர்த்தங்கள்) சூரியனும், அமர்ந்த கோலத்திலுள்ள அர்த்தநாரீஸ்வரரும் அடுத்தடுத்துக் காட்சி தருகின்றனர். சண்டேஸ்வரர் சந்நிதி தனிக் கோயிலாகவுள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக பிரமன், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிட்சாடனர் மூர்த்தங்கள் உள்ளன.

உள்வலம் முடித்து, துவாரபாலகர்களை வணங்கி உட்சென்றால் இடதுபுறம் நவக்கிரகங்கள் உள்ளன. துவாரபாலகர்களுக்குப் பக்கத்தில் சாதாதாப முனிவர் உருவம் உள்ளது. அர்த்த மண்டபத்தில் வாயிலுக்கு வடபுறத்தில் சப்தஸ்தான தலங்களைக் குறிக்கும் 7 லிங்கங்கள், பஞ்சபூத தலங்களைக் குறிக்கும் 5 லிங்கங்கள், சாதாதாபருக்குக் காட்சி தந்த காளத்திநாதர் சந்நிதி முதலியவைகள் உள்ளன. நவக்கிரகங்களில் சூரியன் இரு மனைவியருடன் காட்சி தருகின்றார். மூலவர் பிரம்ம சிரகண்டீஸ்வரர் சுயம்பு லிங்கத் திருமேனியுடன் மேற்குப் பார்த்த நிலையில் எழுந்தருளியுள்ளார். மூலவர் பாணம் சற்று உயரமாகவுள்ளது. கருவறை நுழைவாயிலின் இருபுறமும் முருகப் பெருமான் எழுந்தருளியுள்ளார், இது ஒரு அபூர்வ படைப்பாகும். இத்தலத்தில் பிரம்மதேவருக்கும் சரஸ்வதிதேவிக்கும் தனி சந்நிதி இருக்கிறது. இங்குள்ள பிரம்மா, சரஸ்வதி மிகவும் விசேஷமான திருமேனியுடன் காட்சி அளிக்கின்றனர்.

மூலவர் பிரம்மசிரகண்டீசுவரர் சந்நிதிக்கு அருகில் கிழக்கு நோக்கியபடி இந்த பிரம்மாவின் சந்நிதி அமைந்திருக்கிறது. பிரம்மதேவன் தாமரை மலருடனும், ஜபமாலையுடனும் கம்பீரமாக காட்சி தருகிறார். அவரது வலதுபுறம் சரஸ்வதி அழகிய திருமேனியுடன் காட்சி அளிக்கிறாள். பிரமன் சிரம்கொய்த பின், அவன் வேண்டிட ஐம்முகங்களின் அழகினை சதுர்முகங்களில் (நான்கு முகங்களில்) இறைவன் அருளிச் செய்ய, பிரமன் பெற்றுப் பயனடைந்ததாக வரலாறு. பிரமன் சிரம் கொய்வதற்காக இறைவன் மேற்கொண்ட வடுகக் கோலம் சுவாமி சந்நிதிக்கு எதிரில் இடதுபுறம், பிரமன் சந்நிதிக்குச் செல்லும் வாயிலில் சுவரையொட்டிக் கதவோரமாகச் சிறிய சிலா ரூபமாகவுள்ளது.

இத்தலத்தில் சூரிய பூஜையும் நடைபெறுகின்றது. வருடந்தோறும் மாசி மாதம் 13, 14, 15 தேதிகளில் மாலையில் 5-45 முதல் 6-15 வரை சூரியனின் கிரணங்கள் வீரட்டேஸ்வரர் திருமேனியின் மீது படுகின்றன.

சப்த ஸ்தானத் தலம்: திருவையாறைத் தலைமை தலமாகக் கொண்டு விளங்கும் சப்த ஸ்தானத் தலங்களில் இத்தலம் ஐந்தாவது தலமாகும்.

இத்தலத்தில் முருகப் பெருமான் வலது கையில் ஜபமாலையும், இடது கையில் வஜ்ர சக்தியும் கொண்டு "ஞான சக்தீதராகக்" காட்சி தருகின்றார். இவரை ஞானஸ்கந்தர் என்று அழைக்கின்றனர்.

தலச் சிறப்பு: சாதாதாப என்ற முனிவருக்காக இறைவனால் வில்வமரம் கயிலையிலிருந்து கொண்டு வரப்பட்டதால் இத்தலத்திற்கு ஆதிவில்வாரண்யம் என்றும் பெயருண்டு. இம்முனிவர் பிரதோஷத்தில் காளத்தி சென்று தரிசனம் செய்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருமுறை கண்டியூர் வந்தபோது, காளத்திக்கு, நேரத்தில் செல்ல முடியாமற்போயிற்று. அப்போது இறைவன், அவருக்குக் காளத்தி தரிசனத்தை இத்தலத்திலேயே காட்டியருளினார் என்பது வரலாறு. சாதாதாப முனிவருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது. பிரமஹத்தி தோஷம் நீங்கும் தலமாகவும் திருக்கண்டியூர் சொல்லப்படுகிறது. பிரம்மாவின் தலையைக் கிள்ளியதால் ஈசனுக்கு ஏற்பட்ட பிரமஹத்தி தோஷம் இத்தலத்தில் மஹாவிஷ்னுவால் நீங்கியது.

Top
பிரம்ம சிரகண்டீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
5 நிலை இராஜகோபுரம்
கொடிமரம், நந்தி மண்டபம், பின்னால் 2வது வாயில்
நந்தி மண்டபம், கொடிமரம் - மற்றொரு தோற்றம்
2-வது நுழைவாயில்
மூலவர் கருவறை விமானம்
அம்பாள் மங்களநாயகி சந்நிதி