Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருப்பெரும்புலியூர் (தஞ்சாவூர் மாவட்டம்)
இறைவன் பெயர்வியாக்ரபுரீஸ்வரர்
இறைவி பெயர்சௌந்தர நாயகி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது திருவையாற்றில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் உள்ள திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்) சிவஸ்தலத்திலிருந்து வடக்கே 4 கி.மீ. தொலைவில் உள்ளது
ஆலய முகவரிஅருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில்
பெரும்புலியூர்
தில்லைஸ்தானம் அஞ்சல்
வழி திருவையாறு
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 613203
perumpuliyur route map

திருவையாற்றில் இருந்து பெரும்புலியூர் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

பஞ்ச புலியூர்த்தலங்களில் பெரும்புலியூர் தலமும் ஒன்றாகும். மற்ற 4 தலங்கள்: 1) திருப்பாதிரிப்புலியூர், 2) பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்), 3) எருக்கத்தம்புலியூர், 4) ஓமாம்புலியூர்..

புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர், தன் தந்தை மாத்தியந்தினரிடம் தில்லை நடராஜரின் பெருமையை கேட்டறிந்து, அங்கு வந்து திருமூலநாதரை வழிபட்டு வந்தார். அன்று மலர்ந்த பூக்களைப் பறித்து வந்து இறைவனுக்கு அர்ச்சிப்பது இவரது வழக்கம். பொழுது புலர்ந்தால் வண்டுகள் மலர்களிலுள்ள மகரந்தத்தை உண்பதால் பூக்களின் தூய்மை போய்விடுகிறது என்று நினைத்த அவர், முன் இரவிலேயே மரங்களில் ஏறி பூ பறிக்க புலிக்கால்களையும், அம்மலர்களை ஆராய்ந்து பார்த்து பறிக்க புலியின் கண்களையும் பெற்றார். அதனால் இவருக்கு வியாக்ரபாதர் (வடமொழியில் வியாக்ரம் என்றால் புலி) என்று பெயர் வந்தது. தமிழில் புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்பட்டார். இந்த வீயாகரபாதர் வழிபட்ட தலங்களில் பெரும்புலியூர் தலமும் ஒன்றாகும்.

கோவில் அமைப்பு: இவ்வாலயத்தின் இராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் மிகப் பழைமையானவை. கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால் நேரே கொடிமரம் இல்லை. பலிபீடம் மட்டுமே உள்ளது. வெளிப் பிராகார வலம் வரும்போது சூரியன், விநாயகர் சந்நிதிகள் உள்ளன. அடுத்து சுப்பிரமணியர் சந்நிதியும் உள்ளது. அடுத்து உள்ளே நுழைந்தால் நேரே மூலவர் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நான்கு அடுக்குகளால் ஆன தாமரை மலரின் மேல் சுவாமி மூலஸ்தானம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. கீழ்ப்பகுதி கருங்கல்லாலும் மேற்பகுதி சுதையாலும் ஆனது.

அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கியுள்ளது. நின்ற நிலையில் அம்பாள் அருட்காட்சி தருகிறாள். நவக்கிரக சந்நிதியில் எல்லா உருவங்களும் நடுவிலுள்ள சூரியனைப் பார்த்தவாறே அமைந்துள்ளது இத்தலத்தின் சிறப்பம்சம். கோஷ்ட மூர்த்தங்களாக தென் சுற்றில் தட்சிணாமூர்த்தியும், மேற்குச் சுற்றில் வழாக்கமாக லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரரும் காட்சி தருகிறார். வடக்குச் சுற்றில் சண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது. நடராஜர் சந்நிதியில் ஒருபுறம் வியாக்ரபாதரும், மற்றொரு புறம் பதஞ்சலி முனிவரும் உள்ளனர்.

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. முருகப்பெருமான் இத்தலத்தில் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார்.

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

Top
வியாக்ரபுரீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
மூலவர் வியாக்ரபுரீஸ்வரர்
ஆலயத்தின் முகப்பு வாயில்
முகப்பு வாயில் கடந்து பலிபீடம், நந்தி, 3 நிலை கோபுரம்
ஆலயத்தின் உட்புறத் தோற்றம்
இறைவி சௌந்தர நாயகி
வியாக்ரபுரீஸ்வரர் சந்நிதி