கோவில் அமைப்பு: ஆலயம் ஒரு ராஜகோபுரத்துடனும் அடுத்து ஒரு உள்கோபுரத்துடனும் அரைந்துள்ளது. கொடிமரமில்லை. பலிபீடம் நந்தி உள்ளன. வெளிப் பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. முன்மண்டபத்தில் வலப்பகுதி வாகன மண்டபமாகவுள்ளது. விநாயகரைத் தொழுது வாயிலைக் கடந்து உட்சென்றால் இடதுபுறம் பிராகாரத்தில் சப்த மாதர்கள், விநாயகர், வேணுகோபாலர் சந்நிதிகளும், பல்வகைப் பெயர்களில் அமைந்த சிவலிங்கங்களும், நடராச சபையும், பைரவர், நவக்கிரகமும் உள்ளன.
இரண்டாவது கோபுரம் வாசலில் இருந்து முதல் கோபுர தோற்றம்
உள்மண்டபத்தில் நுழைந்ததும் நேரே மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் இங்கு சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி, புரட்டாசி பௌர்ணமிகளிலும் அதற்கு முன்பின் இரண்டு நாட்களிலும் நிலா வெளிச்சம் சுவாமியின் மேல்படுகிறது. கருவறை தென்பற கோஷ்டத்தில் நடுவில் ஜடாமுடி, நெற்றிக் கண்ணுடன் சிவனும், இடதுபக்கம் தட்சிணாமூர்த்தியும், வலதுபுறம் கஜசம்ஹாரமூர்த்தியும் உள்ளனர். வெளிப்பிராகாரத்தில் அம்பாள் பெரியநாயகி சந்நிதி உள்ளது. பலாமரம், தலமரமான வாழை உள்ளன. ஆலயம் முழுவதும் அழகிய சிற்பங்ளுடன் விளங்குகிறது. திருப்பழனம் ஆலயத்தை ஒரு கலைப் பெட்டகம் என்றே கூறலாம்.
குபேரன், திருமால், திருமகள், சந்திரன், தர்மசர்மா என்னும் அந்தணன் முதலியோர் பூசித்து பேறு பெற்ற தலமான திருப்பழனம் திருவையாற்றைச் சார்ந்த சப்தஸ்தான தலங்களில் இரண்டாவதாகும்.
நவக்கிரக தலங்களில் சந்திரனுக்கு உரியதான திங்களூர் இங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இது அப்பூதி அடிகளின் அவதாரத் தலம். அப்பர் பெருமான் தனது பதிகங்களில் அப்பூதி அடிகளின் தொண்டினைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். ஆலயத்தின் இராஜகோபுரத்தில் சுதைச் சிற்பமாக "திருநாவுக்கரசர் தண்ணீர் பந்தல்" காட்சி அளிப்பதைப் பார்க்கலாம். விடம் தீர்த்த பதிகம் என்று போற்றப்படும் "ஒன்று கொலாம்" என்ற பதிக நிகழ்ச்சிக்கு இடமான தலம் திருப்பழனம்.
5 நிலை இராஜகோபுரம்
3 நிலை 2-வது கோபுரம்
2-வது கோபுரம் கடந்து உள் தோற்றம்
தலமரம்
அம்பாள் சந்நிதி தனி கோவில்
துர்க்கை அம்மன்
பலிபீடம்
நந்தி
கருவறை சுற்றுச் சுவர் சிற்பங்கள்