கோவில் தல வரலாறு: முன்னொரு காலத்தில் பூமியில் பிரளயம் எற்பட்டது. பிரளயத்திற்குப் பின் புதிய உலகம் படைக்க பிரம்மா கேட்ட போது சிவபெருமான் தன் சகதியால் வெப்பம் உண்டாக்கி அவ்வெப்பத்தால் பிரளய நீரை ஒற்றி எடுத்தார். அந்த வெப்ப கோள வடிவத்திலிருந்து ஒரு மகிழ மரத்தடியில் ஒரு சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியது. பிரளய நீரை ஒற்றி எடுத்தமையால் இத்தலத்திற்கு ஒற்றியூர் எனப் பெயர் அமையப் பெற்றது. மற்றொரு காரணமாக இறைவன் வாசுகி என்கிற பாம்பை தன்னுள் அடக்கிக் கொண்டதால் (ஒற்றிக் கொண்டதால்) அவர் ஒற்றீசர் என அழைக்கப்பட்டு இத்தலம் ஒற்றியூர் என அழைக்கப்பட்டது.
பிரளயத்திற்குப் பின் தோன்றிய முதல் சுயம்பு சிவலிங்கம் ஆனதால் இத்தல இறைவன் ஆதிபுரீஸ்வரர் என்றும்,வாசுகி என்ற பாம்பிற்கு அருள் புரிய புற்று வடிவில் எழுந்தருளி தன்னுள் அடக்கிக் கொண்டதால் படம்பக்கநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். புற்று மண்ணால் ஆன இந்த லிங்கத் திருமேனி வருடத்தில் 3 நாட்களைத் தவிர மற்ற நாட்களில் லிங்கம் பெட்டி போன்ற அமைப்பில் கவசம் சார்த்தப்பட்டு மூடியே இருக்கும். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத பெளர்ணமி நாளில் கவசம் திறக்கப்படும். பெளர்ணமியன்று மாலையில் இறைவனுக்கு புனுகு மற்றும் சாம்பிராணி தைலத்தால் அபிஷேகம் செய்கிறார்கள். தொடர்ந்து 3 நாட்களுக்கு இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். மூன்றாம் நாள் இரவில் மீண்டும் சுவாமிக்கு கவசம் சாத்தி விடுவர். இந்த 3 நாட்களில் இறைவனை புற்று வடிவமாகக் கண்டு தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இறைவன் இங்கு தீண்டா திருமேனியனாகக் காட்சி தருவதால், இவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் செய்கின்றனர்.
கோவில் விபரம்: இந்த ஆலயத்தின் ராஜகோபுரம் கிழக்கு நோக்கி 5 நிலைகளுடன் காட்சி தருகின்றது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன் விசாலமான வெளிப் பிரகாரம் உள்ளது. கிழக்குச் சுற்று வெளிப் பிரகாரத்தின் வலதுபுறம் இறைவி வடிவுடை அம்மன் சந்நிதி அமைந்திருக்கிறது. மேலும் கிழக்கு வெளிப் பிரகாரத்தில் நவக்கிரக சந்நிதி, விநாயகர் சந்நிதி, பாலசுப்ரமணியர் சந்நிதி மற்றும் குழந்தையீஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்திருக்கின்றன. மேற்கு வெளிச் சுற்றுப் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் அண்ணாமலையார் சந்நிதியும், பின்பு வரிசையாக ஜம்புலிங்கேஸ்வரர் சந்நிதி, நாகலிங்கேஸ்வரர் சந்நிதி, காளத்திநாதர் சந்நிதி, மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளன. வடமேற்கு மூலையில் ஒற்றீஸ்வரர் சந்நிதி தனி முகப்பு மண்டபத்துடன் அமைந்திருக்கிறது. வடக்கு வெளிச் சுற்றுப் பிரகாரத்தில் பைரவர் சந்நிதி, கல்யாணசுந்தரர் சந்நிதி இருக்கின்றன. பைரவர் வடக்கு நோக்கி நின்ற நிலையில் தனது வாகனமான நாய் இல்லாமல் காட்சி தருகிறார். தலமரம் மகிழமரம் இந்த வடக்கு வெளிப் பிரகாரத்தில் தான் உள்ளது.
அகஸ்தியர் தென் திசை வந்த போது பூஜித்து சிவபெருமானின் திருமணக்கோலத்தைக் கண்ட பிற ஸ்தலங்கள் - 1) குற்றாலம், 2) திருப்பனங்காடு, 3) திருக்கள்ளில், 4) திருவேற்காடு, 5) திருவான்மியூர்
ஆதிபுரீஸ்வரர் சந்நிதி: மூலவர் ஆதிபுரீஸ்வரர் சந்நிதி கிழக்கு ராஜகோபுர வாயிலுக்கு நேரே இல்லாமல் சற்று இடதுபுறம் தள்ளி அமைந்திருக்கிறது. தெற்கு வெளிச்சுற்றில் உள்ள வாயில் வழியாக மூலவர் கருவறையுள்ள பகுதியை அடையலாம். தெற்கு வெளிச்சுற்றில் உள்ள வாயில் அருகில் கிழக்கு நோக்கிய தியாகராஜர் சந்நிதி இருக்கிறது. உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறம் மூலவர் ஆதிபுரீஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறைப் பிரகாரம் சுற்றி வரும்போது வடக்குச் சுற்றில் இத்தலத்திற்கு பெருமை சேர்க்கும் வட்டப்பாறை அம்மன் சந்நிதி வடக்கு நோக்கி இருக்கிறது. இச்சந்நிதிக்கு நேர் எதிரே உள்ள வாயில் வழியாக வடக்கு வெளிச்சுற்றுப் பிரகாரத்தை அடையலாம். வடமொழியில் வால்மீகீ எழுதிய இராமாயணத்தை தமிழில் எழுதியது கவிச் சக்கரவர்த்தி என்று புகழப்படும் கம்பர். கம்ப இராமாயணம் எழுதியது இந்த திருவொற்றியூர் தலத்தில் தான். வட்டப்பாறை அம்மனை வணங்கிய பிறகே கம்பர் இராமாயணம் எழுத தொடங்குவார். அவர் எழுதுவதற்கு உதவியாக சாதாரண பெண் உருவில் கையில் தீப்பந்தம் ஏந்தி நின்று அருள் செய்தவள் இந்த வட்டப்பாறை அம்மன் என்பது ஒரு சிறப்புக்குரிய செய்தியாகும்.
தியாகராஜர் சந்நிதி: தொண்டை நாட்டில் தியாகராஜர் வீற்றிருக்கும் ஏழு சிவஸ்தலங்களில் திருஒற்றயூர் தலமும் ஒன்றாகும். இத்தலத்தில் தியாகராஜர் ஆடிய நடனம் ஆனந்த நடனம். இவர் ஆனந்த தியாகேசர் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் தியாகராஜர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
இச்சா சக்தி - திருவுடை அம்மன், ஞான சக்தி - வடிவுடை அம்மன், கிரியா சக்தி - கொடியிடை அம்மன் ஆகிய மூன்று சக்தி கோவில்கள் சென்னையில் அமைந்துள்ளன. மூன்று சக்திகளையும் ஒன்றன் பின் ஒன்றாக ஒரே நாளில் தரிசனம் செய்வது, குறிப்பாக பௌர்ணமி நாளில் & முடிந்தால் வெள்ளிக்கிழமையன்று வரும் பௌர்ணமி நாளில் தரிசனம் செய்வது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. மூன்று கோவில்களிலும் உள்ள தேவியின் வடிவம் ஒரே மாதிரியாக உள்ளது. இதில் இரண்டாவதாக தரிசிக்க வேண்டிய ஸ்தலம் திருவொற்றியூர் வடிவுடை அம்மன் - ஞான சக்தி ஆகும்.
தேவார மூவர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப்பெற்ற சிவஸ்தலங்கள் 44-ல் திருஒற்றியூர் தலமும் ஒன்று என்ற சிறப்பைப் பெற்றது இத்தலம். இத்தலத்திற்கு அப்பர் பெருமானின் பதிகங்கள் 5, ஞானசம்பந்தர் பநிகம் 1, சுந்தரர் பதிகங்கள் 2 என மொத்தம் 8 பதிகங்கள் உள்ளன.
27 நட்சத்திரங்கள் இங்கு வந்த நட்சத்திரங்களின் நாயகனான சிவபெருமானை வழிபட்டு ஒவ்வொன்றும் ஒரு சிவலிங்கமாக மாறி முக்தி பெற்று பக்தர்களுக்கு அருள் வழங்குகின்றன. அந்தந்த ராசிக்காரர்கள் பிறந்த நாளில் அந்த ராசி லிங்கத்தை வழிபடுவது இத்தலத்தில் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. தெற்கு வெளிப் பிரகாரத்தில் 27 நட்சத்திர லிங்கங்கள் வரிசையாக உள்ளன.
தல விருட்சம் அத்தி மரம். மகிழ மரமும் சுந்தரர் திருமணத்தால் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. திருவாரூரில் பரவையார் என்றொரு அழகிய பெண் இருந்தார். சுந்தரர் அப்பெண்ணைக் கண்டு, காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டார். சில காலத்திற்குப் பின்பு திருவொற்றியூருக்கு வந்தவர், அங்கு, 'ஞாயிறு' என்ற ஊரில் ஒருவரின் மகளான 'சங்கிலியார்' எனும் அழகிய பெண்ணைக் கண்டு காதல் கொண்டார். சுந்தரரின் நண்பனான சிவபெருமான் அவருக்காகத் தூது சென்று, திருமணத்தினை நடத்திவைத்தார். சுந்தரமூர்த்தி நாயனார் திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரை மகிழ மரத்தடியில் "உன்னைப் பிரியேன்" என்று சத்தியம் செய்து கொடுத்து திருமணம் செய்து கொண்டார். சிவபெருமானை சாட்சியாக வைத்து திருமணம் செய்து கொண்டு பின் திருவாரூர் செல்வதற்காக சங்கிலி நாச்சியாரைப் பிரிந்து திருவொற்றியூரில் இருந்து சத்தியத்தை மீறி புறப்பட்டதால் சுந்தரர் தனது இரு கண் பார்வையும் இழந்தார். அப்படி பார்வை இழந்த கண்களில் இடக்கண் பார்வையை சுந்தரர் காஞ்சீபுரம் தலத்தில் பதிகம் பாடி பெற்றார். வழியில், சுந்தரர் திருவெண்பாக்கம் வந்த போது இங்குள்ள இறைவன் ஊண்றீசுவரர் மேல் பதிகம் பாடி கண்ணொளி கேட்டபோது இறைவன் ஊண்றுகோல் கொடுத்து அருளினார்.