தல புராணம்: சிவபெருமான் பார்வதி திருமணம் கயிலாயத்தில் நடைபெற்ற போது தன்னுடைய திருமணத்தினால் வடநிலம் உயர்ந்து, தென்நிலம் தாழ்வதை தவிர்க்க இறைவன் அகத்தியரை தென்நிலப்பகுதிக்கு அனுப்பினார். அகத்தியர் சிவபெருமானின் திருமணத்தினைக் காண இயலாமல் போவது குறித்து வருந்தியமையால், விரும்பும் இடங்களிலெல்லாம் திருமணக் கோலத்தில் காட்சி தருவதற்கு சிவபெருமான் வரம் தந்தார். அவ்வறு அகைத்தியர் இத்தலம் வந்த போது இங்கு திருக்கண்டலம் பகுதியில் அகத்தியருக்கு திருமணக் கோலத்திலும், முருகப்பெருமான் மற்றும் உமையம்மையுடன் சோமாஸ்கந்தராகவும் காட்சியளித்தார். தனக்கு அருள் செய்த இறைவன் இத்தலத்திலேயே தங்கி அனைவருக்கும் அருள் புரிய வேண்டும் என்று இறைவனிடம் அகத்தியர் வேண்டிக் கொண்டார். இறைவனும் இத்தலத்தில் சுயம்புவாக எழுந்தருளி சிவானந்தேஸ்வரர் என்ற பெயருடன் காட்சி அளிக்கிறார்.
அகஸ்தியர் தென் திசை வந்த போது பூஜித்து சிவபெருமானின் திருமணக்கோலத்தைக் கண்ட பிற ஸ்தலங்கள் - 1) குற்றாலம், 2) திருப்பனங்காடு, 3) திருவொற்றியூர், 4) திருவேற்காடு, 5) திருவான்மியூர்
கோவில் அமைப்பு: கிழக்கில் ஒரு 5 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் காட்சி அளிக்கிறது. ஆலயத்திற்கு வெளியே நந்தி தீர்த்தம் என்ற திருக்குளம் உள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் எதிரே கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம் இருக்கிறது. அதையடுத்து நேரே இறைவனை கருவறை உள்ளது. சிவானந்தேஸ்வரர் சதுர ஆவுடையார் மீது லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். சுவாமி விமானம் தூங்கானை மாட அமைப்புடையது. இறைவன் சந்நிதிக்கு இடதுபுறம் சுப்பிரமணியர் சந்நிதியும், அதையடுத்து அம்பாள் ஆனந்தவல்லி அம்மை சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கின்றன. இந்த மூன்று சந்நிதிகளும் சோமஸ்கந்தர் வடிவில் அமைந்திருப்பது மிகவும் விசேஷம்.
ஆலயத்தில் ஒரு விசாலமான வெளிப் பிரகாரம் மட்டும் உள்ளது. தெற்கு வெளிப் பிரகாரத்தில் தென்மேற்குப் பகுதியில் விநாயகர் சந்நிதியும், காளத்தீஸ்வரர் சந்நிதியும் அமைந்திருக்கின்றன. வடக்குப் பிரகாரத்தில் சக்தி தட்சிணாமூர்த்தி சந்நிதி உள்ளது. இத்தலத்தில் உறையும் சிவானந்தேஸ்வரரை பிருகு முனிவர் ஆயிரம் கள்ளி மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்து வந்தார். இறைவன் ஆதிசக்தியை மடியில் அமர்த்தியபடி அவருக்கு சக்தி தட்சிணாமூர்த்தி வடிவில் காட்சியளித்து வரமளித்தார். நட்சிணாமூர்த்தியை இத்தகைய வடிவில் காண்பது மிகவும் அபூர்வம். எனவே இந்த சக்தி தட்சிணாமூர்த்தியை விசேஷ வழிபாடு செய்வதன் மூலம் இனிய இல்லறம், தம்பதிகள் ஒற்றுமை, நல்ல புத்திரப்பேறு, சிறந்த அறிவாற்றல், செல்வச் செழிப்பு ஆகிய அனைத்தையும் பெற்று சிவானந்தப் பேறு பெறலாம்.
இறைவன் கருவறை கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேஸ்வரர் சந்நிதியும் இறைவன் சந்நிதிக்கு வெளியே தெற்கு நோக்கியபடி அமைந்துள்ளது. நால்வர் சந்நிதியும், நவக்கிரக சந்நிதியும் உள்ளன.
திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.