Shiva Temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருவான்மியூர்
இறைவன் பெயர்மருந்தீஸ்வரர், பால்வண்ண நாதர்
இறைவி பெயர்திரிபுரசுந்தரி, சொக்க நாயகி
பதிகம்திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 2
எப்படிப் போவது இந்த சிவஸ்தலம் சென்னையின் தென் பகுதியில் திருவான்மியூரில் இருக்கிறது. சென்னையின் மற்ற பகுதிகளில் இருந்து திருவான்மியூருக்கு பேருந்து வசதிகள் இருக்கின்றன. திருவான்மியூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ½ கி.மீ. தொலைவில் உள்ளது.
ஆலய முகவரிஅருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில்
திருவான்மியூர்
சென்னை
PIN - 600041

இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இவ்வாலயம் காலை 5.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

படிக்கும் நேரம் - நிமிடங்கள்

கோவில் அமைப்பு: தொண்டை நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்களின் வரிசையில் உள்ள இவ்வாலயத்திற்கு கிழக்கில் 7 நிலை இராஜகோபுரம், அதையடுத்து 5 நிலை இரண்டாவது கோபுரம் மற்றும் மேற்கில் ஒரு 5 நிலை கோபுரம் அமைந்துள்ளன. மேற்கு கோபுரம் மகாபலிபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் இருப்பதால் இந்த வாயில் பிரதானமாக உள்ளது. கிழக்கிலுள்ள இராஜ கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடன் ஒரு விசாலமான திறந்த வெளியும் வலது புறத்தில் தியாகராஜ மண்டபமும் இடது பறத்தில் கோவில் தீர்த்தமும் உள்ளது. நேரே சென்று 2-வது கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் கிழக்கு வெளிப் பிரகாரம் அடையலாம். அதில் வலது புறம் அம்பாள் திரிபுரசுந்தரி சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு வெளிப் பிரகாரத்தில் விநாயகர், முருகன் சந்நிதிகள் காணப்படுகின்றன. மேற்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன. இவற்றையடுத்து உள்ள சிறிய வாயில் வழியாக இறைவன் மருந்தீஸ்வரர் கருவறையை அடையலாம். மருந்தீஸ்வரர் கருவறைக்குள் செல்வதற்கு தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள தியாகராஜர் மண்டபத்தின் வழியாக உள்ள தெற்கு வாயில் வழியாகவும் வர வசதி உள்ளது. கருவறையில் மூலவர் மருந்தீஸ்வரர் சுயம்பு லிங்க உருவில் தீண்டாத் திருமேனியாக மேற்கு நோக்கி காட்சி கொடுக்கிறார்.


பால்வண்ண நாதர், மருந்தீஸ்வர் ஆகிய பெயர்களால் இத்தலத்து ஈசன் அழைக்கப் பெறுவதற்குக் காரணங்கள் உள்ளன. ஒருசமயம் தேவலோகத்தைச் சேர்ந்த காமதேனு பிரம்மரிஷியான வசிஷ்டரிடம் சற்று அவமரியாதையாக நடந்து கொண்டது. அதனால் கோபம் கொண்ட வசிஷ்டர், "நீ பூவுலகில் பசுவாகப் பிறப்பாய்" என்று சாபமிட்டார். தன் தவறை உணர்ந்து வருந்திய காமதேனு வசிஷ்டரிடம் மன்னிப்பு கேட்டு, சாப விமோசனத்துக்கான வழியைக் கேட்க, "வான்மியூ ரில் எழுந்தருளியிருக்கும் சுயம்பு லிங்கத்திற்கு தினமும் பால் சொரிந்து அபிஷேகம் செய்து வா. சாப விமோசனம் கிட்டும்" என்று கூறினார். அதன்படியே செய்து ஈசன் அருளால் சாப விமோசனம் பெற்றது காமதேனு. பசு பால் சொரிந்து சிவலிங்கம் வெண்ணிறமாகக் காட்சி தந்ததால் இவர் பால்வண்ண நாதர் என்று பெயர் பெற்றார். அதுபோலவே, இத்தலத்திற்கு வந்து வழிபட்ட அகத்திய முனிவருக்கு, உலகத்திலுள்ள அனைத்து வகையான நோய்கள் பற்றியும், அதைப் போக்கும் மருந்துகள் பற்றியும் ஈசன் உபதேசித்தருளினார். அதன் காரணமாகவே மருந்தீஸ்வரர், ஔஷதநாதர் (ஔஷதம்- மருந்து) என்று இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார்.


மேற்கில் உள்ள சிறிய வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறம் கருவறை உட்பிரகாரம் மேற்குச் சுற்றில் கஜலட்சுமி, வள்ளி தெய்வானையுடன் செல்வ முத்துக்குமாரசாமி சந்நிதிகளும், வலதுபுறம் விநாயகர் சந்நிதி, நால்வர் சந்நிதி ஆகியவையும் உள்ளன. வடக்குச் சுற்றில் உற்சவ மூர்த்திகள் மண்டபம், அடுத்து நடராஜர் சந்நிதியும் அதையடுத்து 108 சிவலிங்கங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளதையும் காணலாம். வடக்குச் சுற்றின் முடிவில் தெற்கு நோக்கிய காலபைரவர் சந்நிதி உள்ளது. கிழக்குச் சுற்றில் வரிசையாக உள்ள கேதாரீஸ்வரர், இராமநாதேஸ்வரர், சுந்தரேஸ்வரர், அருணாசலேஸ்வரர் மற்றும் ஜம்புகேஸ்வரர் சந்நிதிகளைக் காணலாம். தெற்குச் சுற்றில் 63 நாயன்மார்களின் உருவச் சிலைகள் உள்ளன. கருவறை சுவற்றின் வெளிப்புறம் வடக்கில் பிரம்மா, துர்க்கை, கிழக்கில் மஹாவிஷ்ணு, தெற்கில் தட்சிணாமூர்த்தி, கணபதி ஆகியோர் கோஷ்ட மூர்த்தங்களாக அழகுடன் காட்சி தருகின்றனர்.



தல வரலாறு: கயிலை மலையில் சிவன் பார்வதி திருமணம் நடைபெறும் சமயம் திருமணத்தைக் காண எல்லோரும் அங்கு கூடியதால் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதனை சமன் செய்ய சிவபெருமான் அகத்திய முனிவரை தென்திசை அனுப்பினார். தென்புலம் சென்றால் தன்னால் தெய்வத் திருமணத்தைக் காண இயலாமல் போய்விடுமோ என்று சிவனிடம் முறையிட இறைவனும் அகத்தியர் விரும்பும் போது திருமணக் கோலம் காட்டி அருளுவதாக கூறினார். அதன்படி திருவான்மியூர் தலத்தில் அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டி அருளினார். அகத்தியர் திருவான்மியூர் தலத்தில் தங்கி இருந்த போது வயிற்று வலியினால் அவதிப்பட்டார். இறைவன் அகத்தியருக்கு காட்சி கொடுத்து மருந்துகள் பற்றியும், அதன் உபயோக முறைகளைப் பற்றியும் உபதேசம் செய்து அருளினார். அதனாலேயே இறைவன் மருந்தீஸ்வரர் என்ற பெயருடன் இத்தலத்தில் அறியப்படுகிறார். சூரியனும், சந்திரனும் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளதால், இங்கு நவக்கிரகங்களுக்கு என்று தனி சந்நிதி இல்லை.

அகஸ்தியர் தென் திசை வந்த போது பூஜித்து சிவபெருமானின் திருமணக்கோலத்தைக் கண்ட பிற ஸ்தலங்கள் - 1) குற்றாலம் , 2) திருப்பனங்காடு, 3) திருக்கள்ளில், 4) திருவொற்றியூர், 5) திருவேற்காடு.


ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் உள்ள வன்னி மரமே இத்தலத்தின் தல விருட்சமாகும். இந்த வன்னி மரத்தினடியில் தான் அகத்தியருக்கு இறைவன் திருமணக் காட்சி கொடுத்ததாக ஐதீகம். வான்மீக முனிவரும் முக்திப் பேறு வேண்டி நாரதரின் ஆலோசனைப் படி இத்தலம் வந்து இந்த வன்னி மரத்தடியில் தான் சுயம்பு லிங்கத்தைக் கண்டெடுத்து வழிபட்டதாக புராண செய்திகள் கூறுகின்றன. அகத்திய முனிவருக்காக ஒரு முறையும், வான்மீகி முனிவருக்காக ஒரு முறையும் ஆக இரண்டு முறை இறைவன் இந்த வன்னி மரத்தடியில் காட்சி கொடுத்துள்ளார். இந்த வன்னி மரத்தடியில் பங்குனி மாத பிரம்மோற்சவத்தில் ஒன்பதாம் நாள் இறைவன் அகத்தியருக்கு திருமணக் காட்சி கொடுத்த விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.


திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்து பதிகம்

  1. கரையு லாங்கட லிற்பொலி
  2. விரையார் கொன்றையினாய்

திருநாவுக்கரசர் அருளிய இத்தலத்து பதிகம்

  1. விண்ட மாமலர் கொண்டு விரைந்துநீர்

அருணகிரிநாதர் அருளிய இத்தலத்து திருப்புகழ்

  1. குசமாகி யாருமலை மரைமாநு ணூலினிடை
மருந்தீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்

மேற்கிலுள்ள 5 நிலை கோபுரம்
திரிபுரசுந்தரி அம்மன் சந்நிதி நழைவு வாயில்
தெற்கு வெளிப் பிரகாரம் - தியாகராஜ மண்டபம்
மேற்கு வெளிப் பிரகாரத்தில் கொடிமரம், பலீபீடம், நந்தி
கிழக்கு வெளிப் பிரகாரம் - மற்றொரு தோற்றம்
தல விருட்சம் வன்னி மரம்
வடக்கு வெளிப் பிரகாரம்
கிழக்கிலுள்ள 5 நிலை கோபுரம்
கிழக்கு வெளிப் பிரகாரம்
தெற்கு வெளிப் பிரகாரம்