Shiva Temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


கபாலீஸ்வரர் திருக்கோவில், திருமயிலை

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருமயிலை (சென்னை)
இறைவன் பெயர்கபாலீஸ்வரர்
இறைவி பெயர்கற்பகாம்பாள்
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது சென்னை நகரின் மத்தியில் மைலாப்பூரில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. சென்னை நகரின் பல பகுதிகளில் இருந்தும் திருமயிலைக்கு நகரப் பேருந்து வசதிகள் உண்டு. திருமயிலை புறநகர் ரயில் நிலையம் கோவிலுக்கு மிக அருகாமையில் உள்ளது.
ஆலய முகவரிஅருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில்
மைலாப்பூர்
சென்னை
PIN - 600004

இவ்வாலயம் காலை 6-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

பங்குனி மாத பிரம்மோற்ஸவம் சிறப்புபெற்ற - கபாலீஸ்வரர் கோவில், திருமயிலை, சென்னை.

மேலும் படிக்க....

படிக்கும் நேரம் - நிமிடங்கள்

கோவில் அமைப்பு: கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு திசைகளில் கோபுரஙகளைக் கொண்ட இவ்வாலயம் சென்னை நகரின் மையப் பகுதியான மைலாப்பூரில் அமைந்திருக்கிறது. கிழக்கில் உள்ள கோபுரமே இராஜகோபுரமாகும். 7 நிலைகளும் சுமார் 120 அடி உயரமும் உடையது. ஒரு விசாலமான வெளிப் பிரகாரமும் முக்கிய சந்நிதிகளைச் சுற்றி பிரகாரங்களும் அமைந்துள்ளன. கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் நாம் காணபது கிழக்கு வெளிப் பிரகாரம். இதில் வரிசையாக அண்ணாமலையார், நர்த்தன விநாயகர், ஜகதீசுவரர் மற்றும் நவக்கிரக சந்நிதிகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. தெற்குப் பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய நவராத்திரி மண்டபமும், மேற்கு நோக்கிய சிங்காரவேலர் சந்நிதியும் அமைந்துள்ளன. மேற்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் மேற்கு வெளிப் பிரகாரத்தில் சுவாமி சந்நிதி முன் உள்ள கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். இதைக் கடந்தவுடன் சுவாமி சந்நிதி நுழைவு வாயிலின் முன்னுள்ள மண்டபத்தில் இடதுபுறம் தெற்கு நோக்கிய இறைவி கற்பகாம்பாள் சந்நிதி உள்ளது. சுவாமி சந்நிதிக்குள் நுழைந்தவுடன் இத்தலத்தின் இறைவன் கபாலீஸ்வரர் மேற்கு நோக்கி சுயம்பு லிங்க உருவில் காட்சி தருகிறார். கருவறைச் சுற்றில் நாம் பைரவர், வீரபத்திரர், தேவார மூவர் மற்றும் 63 நாயன்மார்கள் ஆகியோரின் திருவுருவங்களைக் காணலாம்.


தலப் பெயர் வரலாறு: சிவனைப்போலவே பிரம்மாவிற்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதனால் தானும் சிவனுக்கு ஈடானவனே என்ற எண்ணம் பிரம்மாவுக்கு ஏற்பட்டது. இதனால் அவர் ஆணவத்துடன் இருந்தார். பிரம்மா ஒவ்வொரு யுகம் அழியும்போது அழிந்து விடுவார். மீண்டும் புது யுகம் உண்டாகும்போது, புதிதாக ஒரு பிரம்மா படைக்கப்படுவார். ஆக, பிரம்மா ஒவ்வொரு யுகத்திலும் அழிந்து மீண்டும் பிறப்பதால் அவர் நிலையில்லாதவர் ஆகிறார். சிவபெருமானோ ஆதியும், அந்தமும் இல்லாதவர். இதை உணராமல் பிரம்மா ஆணவம் கொண்டதால், அவரைத் திருத்த நினைத்த சிவபெருமான், அவரது ஒரு கபாலத்தை (தலையை) கிள்ளி கையில் ஏந்திக்கொண்டார். எனவே இவர், கபால ஈஸ்வரர் என்றழைக்கப்பட்டு கபாலீஸ்வரர் ஆனார். தலமும் கபாலீச்சரம் என்று பெயர் பெற்றது.


மேற்கு வேளிப் பிரகாரத்தில் அருணகிரிநாதரின் திருவுருவம் ஒரு சிறிய சந்நிதியில் சிங்காரவேலர் சந்நிதிக்கு நேர் எதிரே உள்ளது. வடக்கு வேளிப் பிரகாரத்தில் தலவிருட்சம் புன்னை மரமும் அதன் அருகில் புன்னைவனநாதர் சந்நிதியும் உள்ளது. அம்பிகை இத்தலத்தில் சிவனை வேண்டி தவமிருந்தபோது, சுவாமி அவளுக்கு புன்னை மரத்தின் அடியில் காட்சி கொடுத்தார். புன்னைவனநாதர் சந்நிதிக்குப் பின்புறம் ஒரு பாணத்தின் மத்தியில் சிவலிங்கம் ஒன்று புடைப்புச்சிற்பமாக இருக்கிறது. இச்சன்னதியில் அம்பாள் மயில் உருவில் வழிபட்ட சிலையும் இருக்கிறது. வடக்கு வேளிப் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் மேற்கு நோக்கிய தனி சந்நிதியில் சனி பகவான் அருள் புரிகிறார். தெற்குப் பிரகாரத்தில் இத்தலத்தில் முருகப்பெருமான் 6 திருமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் கொண்டு மேற்கு நோக்கி மயில் மீது எழுந்தருளியுள்ளார். தேவியர் இருவரும் யானை மீது அமர்ந்து காட்சி தருகின்றனர். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 10 பாடல்கள் உள்ளது.



தல வரலாறு:

1. பார்வதிதேவி சிவனிடம், சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் பொருளை உபதேசிக்கும்படி வேண்டினாள். சிவனும் உபதேசித்தார். அவ்வேளையில் மயில் ஒன்று நடன மாடவே, அதன் அழகில் மயங்கிய அம்பிகை உபதேசத்தை கவனிக்காமல் வேடிக்கை பார்த்தாள். பாடத்தைக் கவனிக்காத மாணவர்களுக்கு குரு தண்டனை கொடுப்பார். இப்போது குருவான சிவன், மாணவியான அம்பிகையை, எதன் அழகில் மயங்கினாயோ அதுவாகவே பிற என்று மயிலாக மாறும்படி செய்து விட்டார். அம்பிகை தன் குற்றத்திற்கு விமோசனம் கேட்டாள். பூலோகத்தில் தன்னை மயில் வடிவில் வழிபட்டுவர விமோசனம் கிடைக்கும் என்றார் சிவன். அதன்படி அம்பிகை மயில் வடிவில் இத்தலம் வந்தாள். சிவனை வணங்கி விமோசனம் பெற்றாள். இருவரும் இங்கேயே கோயில் கொண்டனர். பார்வதி மயில் உருவில் இத்தலத்தில் இறைவனை பூஜை செய்ததால் இத்தலம் திருமயிலை என்றும் பெயர் பெற்றது.

2. திருமயிலை தலத்தில் சிவநேசர் எனபவர் வாழ்ந்து வந்தார். சிவபெருமான் மீது அளவு கடந்த பக்தியுடைய அவருக்கு பூம்பாவை என்ற ஒரு மகள் இருந்தாள். திருஞானசம்பந்தரைப் பற்றியும் அவரின் சைவ சமய தொண்டைப் பற்றியும் கேள்விப்பட்ட சிவநேசர் தன் மகள் பூம்பாவையை சம்பந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தார். அவ்வாறு இருக்கையில் ஒரு சமயம் பூம்பாவை தோட்டத்தில் தன் தோழிகளுடன் மலர் பறித்துக் கொண்டு இருந்த போது பாம்பு தீண்டி இறந்து விடுகிறாள். மகள் இறந்து விட்ட போதிலும் அவள் சம்பந்தருக்கு உரியவள் என்ற எண்ணம் சிவநேசருக்கு வர மகளின் அஸ்தி மற்றும் எலும்புகளை ஒரு குடத்திலிட்டு கன்னி மாடத்தில் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தார்.

திருவொற்றியூர் வந்த சம்பந்தரைச் சந்தித்த சிவநேசர் அவரை வலம் வந்து தொழுதார். கன்னி மாடத்தில் வைத்திருந்த குடத்தைக் கொண்டு வந்து சம்பந்தர் முன் வைத்து பூம்பாவை பற்றிய விபரங்களைச் சொல்லி அழுதார். சம்பந்தர் திருமயிலை கபாலீஸ்வரரை தியானித்து மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை என்று தொடங்கும் பதிகம் பாடினார். பதிகம் பாடி முடித்ததும் குடத்தை உடைத்துக் கொண்டு வெளியே வந்த பூம்பாவை சம்பந்தரை வணங்கினாள். சிவநேசர் சம்பந்தரை வணங்கி பூம்பாவையை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். விஷம் தீண்டி இறந்த பூம்பாவைக்கு உயிர் கொடுத்ததின் மூலம் அவள் எனக்கு மகள் ஆகின்றாள் என்று கூறிய சம்பந்தர் சிவநேசரின் கோரிக்கையை நிராகரித்து விடுகிறார். பூம்பாவை தன் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே இருந்து இறைவன் தொண்டு செய்து வந்தாள்.

இக்கோயில் மேற்கு கோபுரம் அருகில் பூம்பாவைக்கு சந்நிதி இருக்கிறது. அருகில் சம்பந்தர் இருக்கிறார். சம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சி, பங்குனி பிரம்மோற்ஸவத்தின் 8ம் நாள் காலையில் நடக்கிறது. அப்போது சம்பந்தர், பூம்பாவை, சிவநேசர் மற்றும் உற்சவ மூர்த்திகள் கபாலி தீர்த்தத்திற்கு எழுந்தருள்கின்றனர். ஒரு கும்பத்தில் அஸ்திக்கு பதிலாக நாட்டுச்சர்க்கரை வைத்து, சம்பந்தரின் பதிகம் பாடப்படுகிறது. பின்பு பூம்பாவாய் உயிருடன் எழுந்ததை பாவனையாக செய்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை பார்த்தால் தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அறுபது, எண்பதாம் திருமணம் செய்ய ஏற்ற தலம் இது.


பங்குனி பிரம்மோற்ஸவத்தின்போது, இக்கோயிலில் நடக்கும் பன்னிருதிருமுறை விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இவ்விழாவின் 8ம் நாளில், 63 நாயன்மார்களும் வீதியுலா செல்கின்றனர். இதேபோல் மாசி பவுர்ணமியில் இங்கு நடக்கும் கடலாட்டு விழாவும் பிரசித்தி பெற்றது. அப்போது சிவன் கடலுக்குச் சென்று தீர்த்த நீராடி வருகிறார். சம்பந்தர் தனது பதிகத்தில் 6-வது பாடலில் கடலாட்டு விழாவைப் பற்றியும், பக்தர்கள் கடலாடுவதை இறைவன் பார்த்தபடி இருப்பதையும் குறிப்பிடுவதால் தேவார காலத்தில் இத்தலம் கடலருகே இருந்தது என்பது தெரிய வருகிறது. "பூம்பாவாய்! மடல்கள் நிறைந்த தென்னைமரங்கள் மிகுந்த மயிலாப்பூரில் மாசி மகநாளில் பக்தர்கள் கடலில் புனித நீராடிவதைக் கண்டு களிப்போடு கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளியிருப்பவனும், வலிமை பொருந்திய ஆனேற்றில் ஊர்ந்து வருபவனும் ஆகிய இறைவன் புகழ் பரவி அப்பெருமானது நடனமாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ" என்று தன் பதிகத்தில் குறிப்பிடுகிறார்.


திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. மூவரால் பாடப்பட்ட தேவாரப் பாடல்களில், சுவாமி மற்றும் தலத்தின் பெருமைகளை குறிப்பிட்டுத்தான் பெரும்பாலும் பதிகம் பாடப்பட்டுள்ளது. ஆனால், இத்தலம் வந்த சம்பந்தர், பூம்பாவையை உயிர்ப்பிக்க இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்களின் சிறப்புக்களை குறிப்பிட்டு 11 பதிகங்கள் பாடினார். சம்பந்தர் பாடிய பதிகத்தில் திருமயிலை கோவிலைப் பற்றியும், இங்கு சிறப்பாக நடக்கும் விழாக்களைப் பற்றியும் குறிப்பிட்டு இவைகளை எல்லாம் பார்த்து அனுபவிக்காமல் நீ இறந்து போகலாமா பூம்பாவை என்று தன் பதிகத்தில் பாடுகிறார். இவ்வாறு திருவிழா குறித்து பதிகம் பெற்ற பெருமையுடைய தலம் இது.


கபாலீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்

மேற்கு கோபுர நுழைவு வாயில்
மேற்கு கோபுர நுழைவு வாயில் -கபாலீச்சரம்
கிழக்கு வெளிப் பிரகாரம்
சிங்காரவேலர் சந்நிதி
கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம்
வடக்குப் பிராகாரத்திலிருந்து கிழக்கு கோபுரம் தோற்றம்
தலவிருட்சம் புன்னைமரம்
புன்னைவனநாதர் சந்நிதி
சனீஸ்வரர் சந்நிதி
தெற்கு பிரகாரத்திலுள்ள நவராத்திரி மண்டபம்

மேலும் கபாலீஸ்வரர் ஆலயத்தின் திருவிழாக்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் ஆகியவற்றை அறிய ஆலயத்தின் அதிகார பூர்வ இணையதளத்தை பார்க்க.