கோவில் அமைப்பு: கிழக்கு நோக்கி உள்ள இக்கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லை. முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயில் வழியாக உள்ளே சென்றவுடன் வெளிப் பிரகாரமும் நேரே பலிபீடம், கொடிமரம், நந்தி மற்றும் அதைத் தொடர்ந்து 3 நிலை கோபுரத்துடன் உள்ள இரண்டாவது நுழைவு வாயில். இதன் வழியாக உள்ளே சென்றவுடன் நாம் எதிரில் காண்பது கிருபாநாதேஸ்வரர் சந்நிதி. வெளிப் பிரகாரத்தில் உள்ள பலிபீடம், கொடிமரம், நந்தி ஆகியவற்றின் இடதுபுறம் மற்றுமொரு பலிபீடம், கொடிமரம், நந்தி உள்ளது. இந்த இரண்டாவது கொடிமரத்தின் எதிரே ஆலயத்தின் உள் மதிலில் ஒரு சாளரம் உள்ளது. உள் பிரகாரத்தில் கிருபாநாதேஸ்வரர் சந்நிதிக்கு இடதுபுறம் தாலபுரீஸ்வரர் சந்நிதி உள்ளது. இந்த சந்நிதிக்கு எதிரில் தான் உள் மதிலில் நாம் பார்த்த சாளரம் இருக்கிறது. இரண்டு மூலவர் சந்நிதிகளும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. இரு சுவாமி சந்நிதிகளும் கஜப்பிரஷ்ட விமான அமைப்புடன் மூன்று கலசங்களுடன் விளங்குகின்றன. இரண்டு மூலவர்கள் இவ்வாலயத்தில் இருப்பதைப் போலவே இரண்டு அம்பாள் சந்நிதிகளும் இருக்கின்றன.
கயிலை மலையில் சிவன் பார்வதி கல்யாணம் நடைபெறும் சமயம் தேவர்கள் எல்லோரும் அங்கு கூடியதால் பாரம் அதிகரித்து வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதனை சமன் செய்ய அகத்திய முனிவரை தென் திசை நோக்கிச் செல்லும் படி சிவபெருமான் பணித்தார். அதன்படி தென்திசை வந்த அகத்தியர் இத்தலத்தில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார். அகத்தியர் ஸ்தாபித்து வழிபட்ட ஈசன் தாலபுரீஸ்வரர் என்ற பெயரில் இஙகு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இச்சந்நிதி துவார வாயிலின் முன்னால் ஒரு புறம் அகத்தியர் உருவமும் மறுபுறம் பனைமரமும் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. தாலபுரீசுவரரின் கருவறையில் கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். இச்சந்நிதியில் சண்டேசுவரர் இல்லை.
அகஸ்தியர் தென் திசை வந்த போது பூஜித்து சிவபெருமானின் திருமணக்கோலத்தைக் கண்ட பிற ஸ்தலங்கள் - 1) குற்றாலம், 2) திருக்கள்ளில், 3) திருவொற்றியூர், 4) திருவேற்காடு, 5) திருவான்மியூர்
அகத்திய முனிவரின் சீடரான புலத்தியர் இத்தலம் வந்தபோது தாளபுரீஸ்வரருக்கு அருகில் மற்றொரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார். இந்த மூலவர் கிருபாநாதேஸ்வரர் என்று போற்றப்படுகிறார். கிருபாநாதேஸ்வரர் சந்நிதியிலும் துவார வாயிலின் முன்னால் ஒரு புறம் புலஸ்தியர் உருவமும் மறுபுறம் பனைமரமும் கல்லில் உள்ளன. கிருபாநாதேசுவரரின் கருவறையில் கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா உள்ளனர். சண்டேசுவரர் தனி விமானத்துடன் உள்ளார். கிருபாநாதேசுவரர் கருவறையில் உள்ள கோஷ்ட தட்சிணாமூர்த்தி அமைப்பு அற்புதமானது. வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலை மேலே உயர்த்திக் குத்துக்காலிட்டு, சின்முத்திரை பாவத்தில் அபயகரத்துடன் வரதகரமும் கூடி அற்புதமாகக் காட்சி தருகின்றார்.
அகத்தியர் ஸ்தாபித்து வழிபட்ட தாலபுரீஸ்வர் என்கிற பனங்காட்டீசரரை முதலில் வணங்கி பிறகு தான் புலத்தியர் ஸ்தாபித்து வழிபட்ட கிருபாநாதேஸ்வரரை வணங்க வேண்டும். அதுவே இக்கோவிலில் முறை. தேவாரத்தில் குறிப்பிடப்படுவர் பனங்காட்டீசரே ஆவார்.
அகத்தியர் தான் ஸ்தாபித்த ஈசன் தாலபுரீஸ்வரருக்கு பனம்பழம் படைத்து வழிபட்டதால் பனைமரமே தலமரமாக விளங்குகிறது. இதனாலேயே இறைவன் பனங்காட்டீசர் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் உயிருள்ள பனைமரங்களை வெட்டுபவர்கள் தண்டனைக்கும், தோஷத்திற்கும் உள்ளாவார்கள் என்று இத்தலத்திலுள்ள கலவெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதானத் தல விருட்சமாகிய ஆதி பனை மரங்கள் இரண்டும் கோயிலுக்கு வெளியில் உள்ள கோட்டை முனீஸ்வரர் கோயிலின் பின்புறம் உள்ளன.
பனையைத் தலமரமாகக் கொண்ட பாடல் பெற்ற தலங்கள் ஐந்தினுள் இதுவும் ஒன்று. ஏனையவை (1) திருப்பனந்தாள், (2) திருப்பனையூர், (3) திருவோத்தூர், (4) புறவார் பனங்காட்டூர் என்பன.
இரண்டு சுவாமி சந்நிதிகள் இருப்பதைப் போன்று இரண்டு அம்பிகைள் அமிர்தவல்லி, கிருபாநாயகி என்ற பெயர்களுடன் தனித்தனி சந்நிதிகளில் இவ்வாலயத்தில் வீற்றிருக்கின்றனர். அம்பாள் சந்நிதிகளை வலமாக வரும்போது பைரவர், சந்திரன் சந்நிதிகள் உள்ளன.
இக்கோயிலின் உள் மண்டபத்தில் கற்தூண்களில் மிக அரிய சிற்பங்கள் உள்ளன. அவற்றுள் சில:-
(1) அமிர்தவல்லி அம்பாள் சந்நிதியின் முன்புள்ள கல்தூணில் நாகலிங்கச் சிற்பம் உள்ளது.
(2) உள் வாயிலுக்கு வெளியில் உள்ள ஒரு தூணில் இராமருடைய சிற்பம் உள்ளது.
(3)உள்மண்டபத்தில் கிருபாநாதேஸ்வரர் சந்நிதிக்கு முன்புள்ள ஒரு தூணில் வாலி, சுக்ரீவர் போரிடும் சிற்பம் உள்ளது.
இராமர் சிற்பத்திடம் நின்று பார்த்தால் வாலி சுக்ரீவ போர்ச்சிற்பம் தெரிகிறது. ஆனால் வாலி சுக்ரீவ சிற்பத்திடம் நின்று பார்த்தால் பார்வைக்கு இராமர் சிற்பம் தெரியவில்லை. அவ்வாறு அருமையாக அமைந்துள்ளது.
சுந்தரர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது