தேவார காலத்தில் இருந்த பழைய கோயில் குசஸ்தலையாற்றின் கரையில் திருவிளம்பூதூரில் இருந்தது. திருவிளம்பூதூருக்குப் பத்ரிகாரண்யம் என்றும் பெயர். (இலந்தை மரக்காட்டுப் பகுதி). சுந்தரருக்கு ஊன்றுகோலை இறைவன் அளித்தருளிய தலம் இதுதான். 11ஆம் நூற்றாணைடைச் சேர்ந்த இக்கோயில் பல கல்வெட்டுக்களையும் கொண்டிருந்தது. சென்னை நகரின் குடிதீர் தேவைக்காக பூண்டி நீர்த்தேக்கம் அமைக்க குசஸ்தலையாற்றில் அணையைக் கட்ட 1942ல் அரசு முயற்சிகளை மேற்கொண்டது. அதற்காக அணைகட்ட நிலப்பகுதிகளை எடுத்துக் கொண்டபோது அப்பகுதியில் தேவார காலத்தில் இருந்த ஊண்றீஸ்வரர் ஆலயம் உள்ள திருவிளம்பூதூரும் அடங்கிற்று. ஆகவே அப்போதைய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த திரு எம். பக்தவத்சலம் அவர்கள், அப்போதைய அறநிலையத்துறை ஆணையராக இருந்த திரு. உத்தண்டராமப் பிள்ளை அவர்கள் ஆகியோரின் பெருமுயற்சியால் திருவிளம்பூதூர் கோயில் அங்கிருந்து எடுக்கப்பட்டு, தற்போதுள்ள இட்த்தில் - பூண்டியில் புதிய கோயிலாகக் கட்டப்பட்டு 5-7-1968 அன்று கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது. இச்செய்தி பற்றிய குறிப்பு கல்லிற்பொறித்து அம்பாள் சந்நிதி வாயிலில் பதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை 2000-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. பழைய ஆலயத்தில் இருந்த சிலைகள், சிற்பங்கள், மண்டபத் தூண்கள் ஆகியவை யாவும் பெயர்த்து எடுக்கப்பட்டு புதிய ஆலயம் நிர்மாணிக்கும் போது அதில் வைக்கப்பட்டன.
சுந்தரர் திருவொற்றியூரில் தங்கி இருக்கும் போது சங்கிலி நாச்சியாரை திருவொற்றியூரில் இருந்து பிரிய மாட்டேன் என்று சபதம் செய்து கொடுத்து திருமணம் செய்து கொண்டார். ஒரு சமயம் திருவாரூரில் உள்ள பரவை நாச்சியாரை நினைத்து திருவொற்றியூரில் இருந்து புறப்பட்டார். சங்கிலி நாச்சியாருக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறியதால் கண் பார்வை இழந்தார். பிறகு திருமுல்லைவாயில் இறைவனை தரிசித்து பின் திருவெண்பாக்கம் வந்த போது இங்குள்ள இறைவன் ஊண்றீசுவரர் மேல் பதிகம் பாடி கண்ணொளி கேட்டபோது இறைவன் ஊண்றுகோல் கொடுத்து அருளினார். கண்ணொளிக்குப் பதிலாக ஊண்றுகோல் கொடுத்த இறைவன் மேல் கோபம் கொண்ட சுந்தரர் இறைவனைப் பார்த்து நீர் உள்ளே இருக்கிறீரா என்று கேட்க இறைவனும் "உளோம் போகீர் " என்று பதில் அளிக்கிறார். ஊண்றுகோல் பெற்ற சுந்தரர் கோபத்தில் அதை வீசியெறிய அது நந்தியின் மேல் பட்டு அதன் கொம்பு உடைந்தது. இந்த சிவாலயத்தில் உள்ள சிவன் சந்நிதி முன் உள்ள நந்தியின் வலது கொம்பு உடைந்து காணப்படுகிறது. சுந்தரர் இழந்த கண் பார்வையை பதிகம் பாடி பெற்ற தலம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில், கச்சி ஏகம்பம் (காஞ்சீபுரம்)
கோவில் அமைப்பு; திருவெண்பாக்கம் ஊண்றீஸ்வரர் ஆலயம் திருவேற்காடு கருமாரியம்மன் ஆலய நிர்வாகத்தைச் சேர்ந்ததாக உள்ளது. இப்போதுள்ள ஆலயத்திற்கு கிழக்கிலும், தெற்கிலும் வாயில்கள் இருந்தாலும், பிரதான சாலையில் உள்ள தெற்கு நுழைவு வாயில் தான் முக்கிய வாயிலாக உள்ளது. கிழக்கு நுழைவு வாயில் முன் புதர்கள் மண்டிக் கிடப்பதால் அது உபயோகத்தில் இல்லை. தெற்கு நுழைவு வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறம் வெளிப் பிரகாரத்தில் வழித்துணை விநாயகர் ஒரு சிறிய சந்நிதியில் காணப்படுகிறார். கிழக்கு வெளிப் பிரகாரத்தில் சற்று உயரமான மண்டபத்தில் நந்தி மற்றும் பலிபீடம் இருக்கின்றன. சுவாமி சந்நிதி, அம்பாள் சந்நிதி மற்றும் இதர சந்நிதிகள் எல்லாம் சற்று உயரமான மண்டபத்தினுள் அமைந்திருக்கின்றன. கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்றால் நேர் எதிரே ஊண்றீஸ்வரர் சந்நிதி உள்ளது. இறைவன் கிழக்கு நோக்கி உள்ளார். தெற்கு வாயில் வழியாக உள்ளே சென்றால் நேர் எதிரே அம்பாள் மின்னொளி அம்மை சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. கண் பார்வை இழந்த சுந்தரருக்கு அவ்வப்போது மின்னலாகத் தோன்றி வழிகாட்டியதால் அம்பாளுக்கு மின்னொளி அம்மை என்று பெயர். சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதிகளை தனித்தனியாக வலம் வர வசதிகள் உள்ளன. சுவாமி சந்நிதி கருவறைச் சுற்றில் உள்ள விநாயகர், வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகர், மகாலட்சுமி சந்நிதிகள் பார்த்து பரவசமடைய வேண்டிவை. கருவறை கோஷ்டத்தில் கணபதி, லிங்கோத்பவர், தட்சினாமூர்த்தி, பிரம்மா, துர்கை ஆகியோரைக் காணலாம். சுவாமி சந்நிதி முன் நந்தி, பலிபீடம், அருகில் சுந்தரர் ஊண்றுகோலுடன் நின்று கொண்டிருக்கிறார். உள் மண்டபத்தில் பைரவர், நால்வர் சந்நிதி, அருணகிரிநாதர், சூரியன், நவக்கிரகங்கள் சந்நிதி ஆகியவை கிழக்குப பக்கம் இருக்கின்றன.
சுந்தரர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது