Shiva Temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


வலிதாயநாதர் திருக்கோவில், திருவலிதாயம்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருவலிதாயம் (சென்னை)
இறைவன் பெயர்வலிதாய நாதர், வல்லீஸ்வரர்
இறைவி பெயர்ஜகதாம்பாள், தாயம்மை,
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் சென்னை நகரின் மேற்குப் பகுதியில் பாடி என்னும் இடத்தில் இத்தலம் அமைந்துள்ளது.
ஆலய முகவரிஅருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோவில்
பாடி
சென்னை
PIN - 600050

இவ்வாலயம் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

திருமணத் தடை, குரு தோஷம் போக்கும் வலிதாயநாதர் கோவில், திருவலிதாயம்.

மேலும் படிக்க.....

படிக்கும் நேரம் - நிமிடங்கள்

கோவில்அமைப்பு: சென்னையின் ஒரு பகுதியான பாடி என்ற இடத்தில் அமைந்துள்ள வல்லீஸ்வரர் ஆலயம் தேவார காலத்தில் திருவலிதாயம் என்று வழங்கப்பட்டது. சென்னை - ஆவடி சாலையில் பாடி டிவிஸ் லூகாஸ் பேருந்து நிறத்தத்தில் இறங்கி எதிரே உள்ள கிளைப் பாதையில் சென்று இக்கோவிலை அடையலாம். பாரத்துவாஜ முனிவர் கருங்குருவி (வலியன்) யாக வந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டதால் இத்தலம் திருவலிதாயம் என்றும் இறைவன் வலிதாய நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். 3 நிலைகளை உடைய கிழக்கு வாசல் கோபுரமே பிரதான கோபுரம். கோபுர வாசல் வழியாக உள்ளே நுழைந்ததும் ஒரு விசாலமான வெளிப் பிரகாரம் உள்ளது. அதில் கொடிமரம், நந்தி சுவாமி சந்நிதிக்கு நேர் எதிரே உள்ளது. வலது புறத்தில் குரு பகவானுக்கு தனி சந்நிதி இருக்கிறது. குரு பரிகார தலங்களாக சொல்லப்படும் தலங்களில் திருவலிதாயமும் ஒன்றாகும். குரு பகவான் தன்னைப் பற்றி இருந்த தோஷம் நீங்க இத்தலத்தில் தவமிருந்தே சிவனருள் பெற்றார் என்பதால் இத்தலத்தில் குரு பகவானுக்கு தனி சிறப்புண்டு. வெளிப் பிரகாரத்தில் இருந்து உள் மண்டபத்தில் நுழைந்தவுடன் மூலவர் திருவலிதாயநாதர் சந்நிதி கிழக்குப் நோக்கி அமைந்திருக்கிறது. சுவாமி சந்நிதி கருவறை கஜப்பிரஷ்ட விமான அமைப்புடையது. உள் பிரகாரத்தின் வலது புறம் தெற்கு நோக்கிய அம்பாள் தாயம்மை சந்நிதி இருக்கிறது. அம்பாள் சந்நிதிக்கு நேர் எதிரே தெற்கு வெளிப் பிரகாரத்தில் சிம்ம வாகனம் அம்பாளை நோக்கியவாறு உள்ளது. ஈசன் கருவறையின் உள்ளேயும் ஒரு அம்பாள் திருவுருவம் உள்ளது. அம்பாள் திருவுருவம் ஒரு காலத்தில் பின்னப்பட, புதிய மூர்த்தம் செய்து அதை வெளியே தெற்கு நோக்கி இருக்குமாறு பிரதிஷ்டை செய்து, பின்னமான மூர்த்தத்தை ஈசன் கருவறைக்கு உள்ளே வைத்து விட்டதாக சொல்லப்படுகிறது.


உள் பிரகாரத்தில் சூரியன், 4 கரங்களுடன் உள்ள பாலசுப்ரமனியர், விநாயகர், தட்சினாமூர்த்தி, மஹாவிஷ்னு, பிரம்மா, துர்க்கை ஆகியோரின் உருவச்சிலைகள் இருக்கின்றன. ஈசன் கருவறை பின்புற கோஷ்டத்தில் அநேக தலங்களில் லிங்கோத்பவர் தான் இருப்பார். ஆனால் இங்கு மகாவிஷ்ணு காணப்படுகிறார். மகாவிஷ்ணு, அவரின் அம்சமான பரசுராமர், ராமர் ஆகியோர் சிவபெருமானை வழிபட்ட தலங்களில் எல்லாம் லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணு இருப்பார். அவ்வகையில் இத்தல இறைவனை இராமர் வழிபட்டுள்ளார். மேலும் சோமஸ்கந்தர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், அனுமன் பூஜித்த அனுமலிங்கம், இந்திரன் சாபம் நீக்கிய மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதிகள் உள்ளன. பாரத்வாஜ முனிவரால் பிரதிஷ்டை செய்து வணங்கப்பட்ட ஒரு சிவலிங்கமும் உள் பிரகாரத்தில் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் சுப்பிரமணியராக ஒரு திருமுகத்துடனும் 4 திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. கோவிலில் உள்ள தூண்களில் நடராஜர், முருகர், கோதண்டராமர், மச்சாவதாரமூர்த்தி, கூர்மாவதாரமூர்த்தி ஆகியோரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.



பாரத்வாஜ தீர்த்தம்: ஒரு சமயம் பாரத்வாஜ மஹரிஷி சாபம் காரணமாக கருங்குருவி ஆனார். அவர் திருவலிதாயம் வந்து ஒரு தீர்த்தம் உண்டாக்கி இத்தலத்து இறைவனை பூஜை செய்து சாபவிமோசனம் பெற்றார். நவக்கிரஹ சந்நிதிக்கு எதிரே உள்ள கிணறு அவரால் உருவாக்கப்பட்ட பாரத்வாஜ தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. பாரத்வாஜ மஹரிஷியால் இத்தல இறைவன் வழிபடப்பட்டுள்ளதால் இத்தலம் பாரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தலமாக விளங்குகிறது.


பிரம்மாவின் இரண்டு பெண்கள் கமலி, வல்லி என்பவர்கள் இத்தலத்து இறைவனை பூஜித்து, விநாயகரை இறைவன் ஆணைப்படி திருமணம் புரிந்து கொண்டனர் என்று தல புராணம் கூறுகிறது. விநாயகர் மணக்கோலத்தில் இருப்பதால், திருமணத்தடை உள்ளவர்கள் இவருக்கு மாலை அணிவித்து வணங்கி, அவர் அணிந்த மாலையை தாங்கள் அணிந்து கொண்டு கோயிலை வலம் வந்து வழிபடுகிறார்கள். இதனால், நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை. ஜோதிட ரீதியாக, குருவின் பார்வை வரும்வேளையில் தான் திருமணம் நிச்சயமாகும். நல்ல வரன் அமைய வியாழக்கிழமைகளில் இங்குள்ள குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம், கொண்டைக்கடலை மாலை அணிவித்தும் வழிபடுகிறார்கள்.

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.


திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்து பதிகம்

  1. பத்தரோடுபல ரும்பொலியம்மலர்

அருணகிரிநாதர் அருளிய இத்தலத்து திருப்புகழ்

  1. மருமல்லி யார்குழலின் மடமாதர்
வலிதாயநாதர் ஆலயம் புகைப்படங்கள்

கிழக்கு கோபுர நுழைவு வாயில்
கிழக்கு வெளிப் பிரகாரம்
தெற்கு வெளிப் பிரகாரம்
மேற்கு வெளிப் பிரகாரம்
வடக்கு வெளிப் பிரகாரம்
கிழக்கு வெளிப் பிரகாரத்தில் நவக்கிரக சந்நிதி
கிழக்கு வெளிப் பிரகாரத்தில் குரு பகவான் சந்நிதி
கிழக்கு வெளிப் பிரகாரத்தில் கொடிமரம், நந்தி, பலிபீடம்
அம்பாள் சந்நிதி முன் உள்ள சிம்ம வாகனம் மற்றும் பலிபீடம்
அம்பாள் சந்நிதி முன் உள்ள சிம்ம வாகனம் மற்றும் பலிபீடம்