சிவபெருமான் வீரச் செயல்கள் புரிந்த அட்டவீரட்டத் தலங்களில் அந்தாகாசுரனை வதைத்த தலம், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திரிவிக்ரமப் பெருமாள் வைணவ ஆலயமும், ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம் என்று சொல்லப்படும் முதல் மூன்று ஆழ்வார்களின் வரலாற்று நிகழ்ச்சி இடம் பெற்ற தலம், தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியவனும், திருமுறை கண்ட சோழன் என்று போற்றபடுவனும் ஆன ராஜராஜன் பிறந்த தலம் என்று பல பெருமைகளை உடையது திருக்கோவலூர் தலம். திருக்கோவலூர் மேலூர், கீழையூர் என இரு பிரிவுகளாக உள்ளது. அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்றான வீரட்டேஸ்வரர் கோவில் கீழையூர்ப் பகுதியில் தெண்பெண்ணையாற்றின் கரையிலும், மேலூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திரிவிக்ரமப் பெருமாள் வைணவ ஆலயமும் உள்ளன.
கோவில் அமைப்பு -வீரட்டேஸ்வரர் கோவிலும், அம்பாள் சிவானந்தவல்லி கோவிலும் தனித்தனி கோவில்களாக சுற்று மதிலுடன் மேற்கு நோக்கி அருகருகே அமைந்துள்ளன. சுவாமி கோவிலுக்கு இடதுபுறம் அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இரண்டு கோவில்களுக்கும் 3 நிலை கோபுரங்கள் உள்ளன. கோபுரங்களுக்கு முன்னால் விசாலமான வெளியிடம் உள்ளது.
சுவாமி கோவில் கோபுர வழியே உள்ளே நுழைந்ததும் கவசமிட்ட கொடிமரம், முன்னால் நந்தி உள்ளதைக் காணலாம். வெளிப்பிராகாரத்தில் சந்நிதி ஏதுமில்லை. முகப்பு வாயிலில் மேலே பஞ்சமூர்த்திகள் வைக்கப்பட்டுள்ளன. முன்தூணில் இடதுபுறம் மெய்ப்பொருள்நாயனார் சிற்பம் உள்ளது. வலதுபுறம் கணபதியின் சந்நிதி உள்ளது. ஒளவையாரால் வழிபடப்பட்ட விநாயகர் இவர். சுந்தரர் வெள்ளை யானை மீதேறியும், அவரது தோழரான சேரமான் பெருமாள் நாயனார் குதிரை மீதேறியும் கைலாயம் செல்லும் போது ஒளவையாரையும் உடன் வருமாறு அழைத்தனர். ஒளவையார் தானும் கயிலை செல்ல எண்ணி அவசரமாக பூஜை செய்ய, விநாயகர் காட்சி தந்து பொறுமையாக பூஜை செய்யும் படியும், கயிலைக்கு தான் அழைத்துச் செல்வதாகவும் அருளினார். இத்தல கணபதியை வழிபட்டுக்கொண்டிருந்த ஒளவையார் வழிபாட்டைத் தொடர்ந்து விநாயகர் அகவல் பாடி பூஜையை முடித்தார். வழிபாடு முடிந்த பிறகு ஒளவையாரை தனது துதிக்கையால் சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் கயிலையை அடைவதற்கு முன்பு சேர்த்து விட்டார். இவ்வாறு ஒளவையைத் தூக்கிவிட்ட கணபதி இவரே என்பர். விநாயகர் சந்நிதிக்கு முன்புறம் சுவரில் புடைப்புச் சிற்பமாக இந்த வரலாறு காணப்படுகிறது. வாயிலின் இடதுபுறம் வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகப்பெருமான் சந்நிதி உள்ளது. பக்கத்தில் கஜலட்சுமி சந்நிதியும், நடராசசபையும் உள்ளன.
திருப்புகழ் தலம்: திருக்கோவிலூர் ஒரு திருப்புகழ் தலமாகும். இத்தல முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். ஓரு திருப்புகழ் பாடல் இத்தலத்திற்கு உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறுமுகராக ஆறு திருமுகத்துடனும் 12 திருக்கரங்களுடனும் தேவியர் இருவருடம் மயில் மீது அமர்ந்து அருள்பாலிக்கின்றார்.
தலமூர்த்தியாகிய அந்தகாசுர சம்ஹார மூர்த்தி விசேஷமானது. பக்கத்தில் நரசிங்க முனையரையர், மெய்ப்பொருள் நாயனார் ஆகியோரின் உற்சவத் திருமேனிகள் உள்ளன. துவாரபாலகரை வணங்கி உள்ளே சென்றால் மூலவர் வீரட்டேஸ்வரர் சுயம்பு சிவலிங்கத் திருமேனி, பெரிய உருவத்துடன் தரிசனம் தருகிறார். கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோரைக் காணலாம். துர்க்கை எட்டுக் கரங்களுடன் காட்சியளிக்கின்ற நின்ற திருக்கோலம் மிகவும் விசேஷமாகவுள்ளது. விழிகள் மிகவும் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளன.
அம்பாள் கோயில் தனியே 3 நிலை கோபுரத்துடன் உள்ளது. முன்மண்டபத்தில் இருபுறமும் துவாரகாலகர்களாக விநாயகரும் சுப்பிரமணியரும் உள்ளனர். சந்நிதிக்கு முன்னால் நந்தி பலிபீடம் உள்ளன. அம்பாள் அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகிறாள்.
கடையேழு வள்ளல்களில் ஒருவனான பாரியின் மகள்கள் அங்கவை, சங்கவை இருவருக்கும் ஒளவையார் மற்றும் கபிலரும் திருமணம் நடத்திவைத்த திருத்தலம். பின்னாளில், கபிலர் திருக்கோவிலூர் கோவில் பின்புறம் உள்ள தென்பெண்ணை ஆற்றின் நடுவில் உள்ள குன்றில் வடக்கே உண்ணா நோன்பிருந்து இறைவனை நினைத்து உயிர் துறந்தார். அந்த இடம் கபிலர் குன்று என்று அழைக்கப்படுகிறது. கபிலர் குன்றின் உச்சியில் சித்த லிங்கமாக சிவ பெருமான் இருக்கிறார். கபிலர் குன்று தற்பொழுது தொல்லியல் துறையின் கீழ் இருக்கிறது. இங்கு இருந்து பார்க்கும் போது திருவண்ணாமலை மற்றும் அரகண்ட நல்லூர் மற்றும் திருக்கோவிலூர் கோவில் கோபுரங்களை தரிசிக்க முடியும்.