தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | திருப்பறியலூர் (தற்போது பரசலூர் என்று வழங்குகிறது) |
இறைவன் பெயர் | வீரட்டேஸ்வரர், தட்சபுரீசர் |
இறைவி பெயர் | இளம்கொம்பனையாள், வாலாம்பாள் |
பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
எப்படிப் போவது | மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி செல்லும் பாதையில் செம்பொன்னார் கோயிலை அடைந்து, அங்கிருந்து நல்லாடை செல்லும் பாதையில் (வலப்புறமாக) சிறிது தூரம் சென்று, "பரசலூர்" என்று கைகாட்டி உள்ள இடத்தில் வலதுபுறம் பிரியும் சாலையில் திரும்பி 2 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். கோயில் சாலையோரத்தில் உள்ளது. |
ஆலய முகவரி | அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் பரசலூர் கீழப்பரசலூர் அஞ்சல் வழி செம்பொனார்கோவில் தரங்கம்பாடி வட்டம் மயிலாடுதுறை மாவட்டம் PIN - 609309 இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
தல வரலாறு: திருப்பறியலூர் சிவபெருமானின் அட்டவீரட்ட தலங்களில் ஒன்று. மற்றவை கண்டியூர், திருக்கோவலூர், திருஅதிகை, திருவிற்குடி, வழுவூர், குறுக்கை, திருக்கடவூர் ஆகியவை. சிவபெருமானை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தையும், தட்சனையும் அழித்த தலம் ஆகும். சிவபெருமானின் மனைவியான தாட்சாயினியின் தந்தை தட்சன் மிகச்சிறந்த சிவ பக்தன். அவனுக்கு வரம் அளித்த சிவன் என்றும் கூட மதியாமல் அவருக்குரிய அவிர்பாகத்தையும் தான் நடத்தும் யாகத்தில் தராமல் ஆணவத்துடன் நடந்து கொண்டான் தட்சன். தட்சன் நடத்தும் யாகத்திற்கு தாட்சாயினி செல்ல ஈசன் அனுமதி கொடுக்கவில்லை. இருந்தும் யாகத்திற்குச் சென்ற தாட்சாயினியை மகள் என்றும் பாராமல் அவமரியாதை செய்தான் தட்சன். திரும்பிச் சென்று ஈசனை பார்க்க மனம் வராத தாட்சாயினியாக குண்டத்தில் கொழுந்து விட்டு எரியும் தீயில் வீழ்ந்து தன்னை மாய்த்துக் கொண்டாள். கோபமுற்ற ஈசன் வீரபத்திரரை அனுப்பி தட்சன் நடத்தும் யாகத்தை அழித்ததுடன் தட்சன் தலையைக் கொய்து அவனை தண்டித்த தலம் திருப்பறியலூர்.
தன்னை மதிக்காமல் தட்சன் நடத்திய அந்த யாகத்தில் கலந்து கொண்ட தேவாதி தேவர்களை எல்லாம் சிவபெருமான் தண்டித்தார். அப்போது சூரியனின் பல் உடைந்தது. இதனால் தான் இத்தலத்தில் சூரியன் தனி சன்னதியில் வீற்றிருந்து சிவனை தினமும் வணங்கி வருகிறார். எனவே இத்தலத்தில் நவக்கிரங்களுக்கு என்று தனி சந்நிதி இல்லை எனபது குறிப்பிடத்தக்கது.
கோவில் அமைப்பு: மேற்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரம், அதையடுத்துது 3 நிலை உள் கோபுரம். ஆலயம் இரண்டு பிரகாரங்களுடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. முதல் இராஜகோபுரம் வழியே உள்ளே நுழைந்தவுடன் நந்தி, பலிபீடம் உள்ளன. கொடிமர விநாயகர் உள்ளார். ஆனால் கொடிமரம் இல்லை. வெளிப் பிராகாரம் வலம் வரும்போது விநாயகர், முருகன், மகாலட்சுமி, பைரவர், தல விநாயகர், நால்வர் சந்நிதி ஆகியவைகளைக் காணலாம். 2வது கோபுரம் கடந்து உள் பிராகாரம் நுழைந்தால் விநாயகர், விசுவநாதர், பைரவர், சூரியன் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, ஆகிய மூர்த்தங்கள் உள்ளன. சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது. கருவறைச் சுவரில் தக்கன் ஆட்டுத் தலையுடன் சிவலிங்கத்தைப் பூசிக்கும் சிற்பம் உள்ளது. வீரபத்திரர் தெற்கு நோக்கி எட்டு கரங்களுடன் உள்ளார். இம்மூர்த்தியின் திருவடியில் தக்கன் வீழ்ந்து கிடப்பதைப்போன்று சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. கீழே செப்புத் தட்டில் தக்கன் யாகம் செய்வது போலவும் பிரமன் இருப்பது போலவும் சிற்பம் உள்ளது. இதைத் தகட்டால் மூடிவைத்துள்ளனர். சிவாசாரியரிடம் கேட்டு, அத்தகட்டைத் தள்ளச் செய்து, இச்சிற்பத்தைக் கண்டு தரிசிக்கலாம். சம்ஹாரமூர்த்திக்குப் பக்கத்தில் நடராசர் சபை உள்ளது. கருவறையில் சிவன் சுயம்பு மூர்த்தியாக வீரட்டேஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். மூலவர் பெரிய திருமேனியுடன் சதுர ஆவுடையார் மீது மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். மண்டபத்தில் உற்சவத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மயில்மீது ஒரு காலூன்றி நிற்கும் முருகன், சோமாஸ்கந்தர், விநாயகர், பிரதோஷ நாயகர் முதலியன சிறப்பாகவுள்ளன.
திருப்பகழ் தலம்: திருப்பறியலூர் திருப்பகழ் வைப்புத் தலங்களில் ஒன்று. இங்கு முருகப்பெருமான் ஒரு திருமுகமும் நானகு திருக்கரங்களும் கொண்டு விளங்குகிறார். வெளிமுன் மண்டபத்தில் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. இக்கோயிலில் பைரவருக்கு அர்த்த சாம பூஜை சிறப்பாக செய்யப்படுகிறது.
திருஞானசம்பந்தர் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. தனது பதிகத்தின் 9-வது பாடலில் இத்தல இறைவியின் பெயரைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.
9. வளங்கொள் மலர்மேல் அயனோத வண்ணன்
துளங்கும் மனத்தார் தொழத்தழ லாய்நின்றான்
இளங்கொம்பனாளோடு இணைந்தும் பிணைந்தும்
விளங்குந் திருப்பறியல் வீரட்டத்தானே.
Top