கோவில் அமைப்பு: இவ்வாலய ராஜகோபுரம் ஏழுநிலைகளை உடையது. ராஜகோபுரம் ஒரு பெரிய பாறையின் மீது கட்டப்பட்டுள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பிரகாரத்தில் வலம்புரி விநாயகர் உள்ளார். இவரே இத்தலத்தின் தலவிநாயகர். விநாயகருக்கு முன்பு இடதுபுறம் கையில் தாளமேந்திய நிலையில் ஞானசம்பந்தர் திருமேனி உள்ளது. விநாயகரின் பக்கத்தில் விஸ்வநாத லிங்கம் உள்ளது. அடுத்த வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் மூலவர் கருவறையை அடையலாம். கருவறையைச் சுற்றிலும் அகழி போன்ற அமைப்பு உள்ளது. கருவறைச் சுற்றில் நவக்கிரக சந்நிதி, பைரவர், கல்லில் வடித்துள்ள நாராயணர், நர்த்தன கணபதி, சக்கரதாரியாக நின்ற நிலையில் மகாவிஷ்ணு ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. சப்தமாதாக்கள் வரிசையாகக் கல்லில் வடிக்கப்பட்டுள்ளனர். மூலவர் அதுல்யநாதேஸ்வரர் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறைச் சுற்றில் நடராஜர் சபையும் உள்ளது. வெளிச் சுற்றில் அண்ணாமலையார் சந்நிதி உள்ளது. அம்பாள் தனிக்கோயிலில் தெற்கு நோக்கி நான்கு திருக்கரங்களுடன் கூடிய நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள்.
இத்தலத்திலுள்ள முருகன் திருமேனி ஒருமுகத்துடனும், ஆறுகரங்களுடனும் வள்ளிதெய்வயானை சமேதராக வடக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். கைகளில் ஆயுதங்கள் உள்ளன.
கோயிலுக்கு வெளியில் பாறைகளுக்கு இடையில் உள்ளது பீமன் குளம். பாஞ்சாலி நீராடுவதற்காக இக்குளத்தை பீமன் வெட்டியதாக புரணாச் செய்திகள் மூலம் தெரிய வருகிறது.. ராஜகோபுரத்தின் அடிவாயிலில் குடைவரைக் கோயில்களாக ஐந்து அறைகள் உள்ளன. பஞ்ச பாண்டவர் வனவாசத்தின் போது இங்கு தங்கி இருந்ததாகக் கூறுவர். இப்போது உள்ளே ஏதுமில்லை. வனவாசம் முடிந்து, 18 நாட்கள் போருக்குப் பின் நாட்டைத் திரும்பப் பெற்ற பாண்டவர்கள், பட்டாபிஷேகம் முடிந்ததும் குடும்பத்தினரோடு மீண்டும் இங்கு வந்து வழிபட்டுச் சென்றனராம்.
பாண்டவர்கள் இவ்விறைவனை வழிபட்டுச் சென்று இழந்த நாட்டை மீண்டும் பெற்றதுபோல, பதவி இழந்தவர்கள், சொத்து சுகங்களை இழந்தவர்கள் இங்கு வந்து வழிபட்டால் இறைவன் அருளால் மீண்டும் அவற்றைப் பெறலாம்.
திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. சம்பந்தர் தனது பதிகத்தில் அரகண்டநல்லூர் இறைவனை தலையினால் தொழும் பெருமை மிக்கவர் தடுமாற்றம் நீங்குவர் என்றும், பழிபாவங்கள் நீங்கப் பெறுவர் என்றும், அவரை அன்போடு நினைப்பவர்களின் வலிய வினைகள் மாயும் என்றும், பாவங்களும் கழியும் என்றும், சிவபிரான் திருவடிகளைத் தொழுது போற்ற குற்றமற்றவர் வாழும் சிவலோகத்தை அடைவர் என்றும் குறிப்பிடுகிறார்.