காசியில் இறக்க முக்தி, திருவாரூரில் பிறக்க முக்தி, சிதம்பரத்தைத் தரிசித்தால் முக்தி. ஆனால் நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. காசியில் இறப்பது எல்லோருக்கும் வாய்க்காது. திருவாரூரில் பிறப்பது நம் செயல் அன்று. சிதம்பரத்திற்கு நேரில் சென்று தரிசிப்பது என்பது எல்லோராலும் இயலாது. ஆனால் திருவண்ணாமலையை ஒரு முறையேனும் நினைப்பது யாவருக்கும் எளிதான செயலே. அவ்வாறு ஒரு முறை நினைத்தாலும் முக்தி எளிதில் வாய்க்கும் என்ற சிறப்பை உடையது திருவண்ணாமலை தலம். அண்ணாமலையானது கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறி வந்துள்ளது.
தல வரலாறு: ஒரு முறை படைப்புக் கடவுளான பிரம்மாவிற்கும், காக்கும் கடவுளான மஹாவிஷ்னுவிற்கும் அவர்கள் இருவரில் யார் உயர்ந்தவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களின் அறியாமையை அகற்றிட சிவபெருமான் அவர்கள் முன் சோதி வடிவம் கொண்டு ஓங்கி உயர்ந்து நின்றார். வராக அவதாரம் எடுத்த திருமால் பூமியைக் குடைந்து சென்றார். பிரம்மா அன்னப் பறவை உருவெடுத்து உயரப் பறந்து சென்றார். இருவராலும் சோதியின் அடி முடியைக் காண இயலவில்லை. சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்பதைப் புரிந்து கொண்ட இருவரும் அவரை வணங்கினர். சிவபெருமானும் அவர்களுக்கு சோதி வடிவிலிருந்து ஓர் மலையாக மாறி காட்சி கொடுத்தார். அதுவே இத்தலமான அண்ணாமலை. பின்பு தன்னை வழிபாடு செய்வதறகு ஏதுவாக லிங்கோத்பவராக காட்சி கொடுத்து அருளினார்.
ஆலயச் சிறப்பு: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயம் தமிழ்நாட்டில் உள்ள பெரிய கோவில்களில் ஒன்றாகும். ஆறு பிரகாரங்களும், 9 கோபுரங்களும், பல மண்டபங்களும், பல சந்நிதிகளும் கொண்ட இந்த ஆலயம் எல்லோராலும் தரிசிக்க வேண்டிய புண்ணியத் தலங்களில் முதண்மையானதாகும். இறைவன் இத்தலத்தில் சுயம்பு லிங்கத் திருமேனியாக நாகக் கிரீடம் அணிந்து தூய வெண்ணிற ஆடையுடன் அருணாசலேஸ்வரர் என்ற திருநாமத்துடன் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். கருவறை கோஷ்டத்தில் ஈசனின் பின்புறம் லிங்கோத்பவர் எழுந்தருளியிருக்கிறார். லிங்கோத்பவராக சிவபெருமான் முதன்முதலாக காட்சி கொடுத்தது இத்தலத்தில் என்பதால் மற்ற ஆலயங்களில் இல்லாத அளவிற்கு தனி அலங்காரத்துடன் இவர் காட்சி தருகிறார்.இறைவன் சந்நிதியை அடுத்து உண்ணாமலை அம்மை தனிக் கோவிலில் கருவறையில் சிறிய உருவில் அருட்காட்சி தருகிறாள்.
வெளிச்சுற்று மதிலில் திசைக்கு ஒன்றாக அமைந்துள்ள நான்கு கோபுரங்கள் பிரதான கோபுரங்களாகும். 5-ம் பிரகாரத்தில் இருந்து 4-ம் பிரகாரத்துக்குச் செல்லும் வகையில் திசைக்கு ஒன்றாக 4 கோபுரங்கள், 4-ம் பிரகாரத்தில் இருந்து 3-ம் பிரகாரத்துக்குச் செல்லும் வகையில் கிழக்கில் கிளி கோபுரம் என்று அழைக்கப்படும் கோபுரம் ஒன்று ஆக மொத்தம் 9 கோபுரங்களுடன் இவ்வாலயம் திகழ்கிறது. இவற்றில் கிழக்கு திசையிலுள்ள இராஜகோபுரம் தமிழகத்தின் 2வது பெரிய கோபுரமாகும். இது 11 நிலைகளுடன் 217 அடி உயரம் கொண்டது. தெற்கு திசை கோபுரத்திற்கு திருமஞ்சன கோபுரம் என்றும், மேற்கு திசை கோபுரத்திற்கு பேய் கோபுரம் என்றும், வடக்கு திசை கோபுரத்திற்கு அம்மணி அம்மாள் கோபுரம் என்றும் பெயர்.
இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர் உள்ளது. இம்மலையில் இன்றும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக வரலாறு. அதன் காரணமாக மலைவலம் வருவது சிறந்தது. குறிப்பாக பௌர்ணமி நாளன்று மலைவலம் வருவது மிகவும் சிறப்பான பலன்களைத்தரும். காரணம் பௌர்ணமி நாளில் விசேடமாக எண்ணற்ற சித்தர்கள் நடமாட்டம் இருப்பதாகவும், மூலிகைக் காற்றுகளின் மணம் வீசுவதால் மனத்திற்கு அமைதியும், உடல் நலத்திற்கு நன்மையும் ஏற்படுவதால், இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் பௌர்ணமியன்று மலைவலம் வந்தும் அருள்மிகு அண்ணாமலையாரை தரிசித்தும் எல்லா நலன்களும் பெறுகிறார்கள் என்பது கண்கூடாக காணும் உண்மை. மலைவலம் சுற்றி வரும் போது எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களைக் காணலாம். அஷ்டலிங்கங்கள் எனப்படுபவை இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம். தேவாரத்தில் புகழப்படும் தேவார வைப்புத் தலமாகிய ஆதி அண்ணாமலை திருக்கோயில் மலை வலப்பாதையில்தான் அமைந்துள்ளது.
மணிபூரகத்தலம்: ஆறு ஆதாலத் தலங்களில் திருவண்ணாமலை மணிபூரகத் தலமாக விளங்குகிறது. மனித உடலைப் பொறுத்த வரை மணிபூரகம் என்பது வயிற்றைக் குறிக்கும். வயிற்றுக்காகத்தான் இந்த உலகமே இயங்குகிறது. எனவே ஒட்டு மொத்த உலக இயக்கமும் அண்ணாமலையாருக்குள் அடக்கம் என்று சொல்லப்படுகிறது.
அருணாசலேஸ்வரர் திருக்கோவிலைப் பற்றிய மேலும் பல விபரங்கள் அறிய ஆலயத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்