Shiva Temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், திருஆலவாய், மதுரை

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருஆலவாய் (மதுரை)
இறைவன் பெயர்சுந்தரேஸ்வரர், சொக்கநாதர், சோமசுந்தரர்
இறைவி பெயர்மீனாட்சி, அங்கயற்கண்ணி
பதிகம்திருநாவுக்கரசர் - 2
திருஞானசம்பந்தர் - 9
எப்படிப் போவது மதுரை தமிழ்நாட்டில் உள்ள ஒரு முக்கிய நகரம். கோவில் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 Km தொலைவில் உள்ளது. தமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களில் இருந்தும் மதுரைக்கு ரயில் மற்றும் சாலை போக்குவரத்து வசதிகள் உண்டு.
ஆலய முகவரிஅருள்மிகு மீனாட்சி சோமசுந்தரர் திருக்கோவில்
மதுரை
PIN - 625001
சக்தி பீடம்மதுரை மீனாட்சி (மந்திரிணி பீடம்)
அருகில் உள்ள திவ்ய தேசம்1. கூடல் அழகர் பெருமாள்
2. கள்ளழகர் பெருமாள்
3. காள மேக பெருமாள்
பஞ்ச சபைவெள்ளிசபை

படிக்கும் நேரம் - நிமிடங்கள்

தமிழ்நாட்டில் உள்ள பல சிறந்த கோவில்களில் ஒன்றாகவும், பெரிய திருக்கோவில்களில் முதன்மைச் சிறப்பு உடையதாகவும் அமைந்து விளங்குவது பாடல் பெற்ற சிவஸ்தலமான மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் ஆலயமாகும். சிவபெருமான் தமது சடையிற் சூடிய பிறையினிடத்துள்ள அமிர்தமாகிய மதுவைத் தெளித்து. நாகம் உமிழ்ந்த விஷத்தை நீக்கிப் புனிதமாக்கியதால் மதுரை எனப் பெயர் பெற்றது.சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக்கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது. மதுரையை அழிக்க வருணன ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டு சிவபெருமான் தன் சடையிலிருந்து விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு.

64 சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குவது மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவிலாகும். இத்தலத்தில் மீனாக்ஷி அம்மன் சந்நிதியே முதன்மை பெற்றது. ஆகையால் இத்தலத்தில் முதலில் மீனாட்சியை வணங்கி விட்டே பிறகு சுந்தரேஸ்வரர் சந்நிதி சென்று அவரை வழிபடுவது மரபாக இருந்து வருகிறது.


கோவில் அமைப்பு: எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடைய இத்திருக்கோவில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உள்ள ஒரு பெரிய கோவிலாகும். இக்கோவிலின் ஆடி வீதியில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் வானளாவி காட்சி தருகின்றன. இவற்றுள் 160 அடி உயரமுள்ள தெற்கு கோபுரம் மற்ற கோபுரங்களை விட உயரமானது. கிழக்கு கோபுரத்தின் உயரம் 153 அடி. வடக்கு கோபுரத்தைத் தவிர மற்ற மூன்று கோபுரங்களிலும் பல அற்புதமான சுதை சிற்பங்களைக் காணலாம்.

மீனாக்ஷி அம்மன் சந்நிதியின் முன்பகுதியாக அஷ்டசக்தி மண்டபம் அமைந்துள்ளது. வாயிலில் விநாயகர், முருகன் உருவங்களுக்கு இடையே மீனாக்ஷி கல்யாணம் சுதை வடிவில் காட்சி அளிக்கிறது. உள்ளே மண்டபத்தில் அமைந்துள்ள தூண்களில் எட்டு சக்தியின் வடிவங்கள் அழகுற அமைந்துள்ளன. அடுத்து உள்ள நாயக்கண் மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால் இத்தலத்தின் இறைவி மீனாக்ஷி அம்மையின் சந்நிதி இருக்கிறது. கருவறையில் அம்மை இரண்டு திருக்கரங்களுடன் ஒரு கையில் கிளியை ஏந்தி அருட்காட்சி தருகிறாள். இங்குள்ள மீனாட்சி அம்மன் விக்கிரகம் மரகதக் கல்லால் ஆனது. அம்மனுக்கு மரகதவல்லி என்றே ஒரு பெயர். மேலும் தடாதகை, கோமளவல்லி, பாண்டியராஜகுமாரி, மாணிக்கவல்லி, சுந்தரவல்லி என்றெல்லாம் அழைக்கப்படுவது இந்த அன்னை மீனாட்சியே. மீன் போன்ற கண்கள் உடையவள் என்பதால் மீனாட்சி. மீன் முட்டையிட்டு தனது பார்வையாலேயே அடை காத்து குஞ்சை பொரிக்க வைத்துவிடுமாம், அதுபோல அன்னை மீனாட்சி தன் அருள் கண்களாலேயே பக்தர்களை காக்கிறாள்

சுவாமி சந்நிதியில் கருவறையில் இறைவன் சுந்தரேஸ்வரர் சிவலிஙகத் திருமேனியாக அருட்காட்சி தருகிறார். இது கடம்ப மரத்தடியில் தோன்றிய ஒரு சுயம்பு லிங்கமாகும். குலசேகர பாண்டியன் காலத்தில் முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்யு லிங்கத்தை கண்டறிந்து முதலில் இந்த கோவிலையும், பின் நகரத்தையும் அந்த மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு. இந்த சிவலிங்கம் பிற தலங்களாகிய மேருமலை, வெள்ளிமலை, திருக்கேதாரம், வாரணாசி மற்றும் பல பெருமை பெற்ற தலங்கள் எல்லாவற்றிலும் உள்ள சிவலிங்கங்கள் எல்லாவற்றிற்கும் முன்னே தோன்றியதாகும். எனவே இதற்கு மூலலிங்கம் என்ற பெயரும் உண்டு. இதனை திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப் பாடலில் குறிப்பிடுகிறார்.


முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி
முதிருஞ் சடைமுடிமேல் முகிழ்வெண் டிங்கள்
வளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும்
வரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துத்
துளைத்தானைச் சுடுசரத்தாற் றுவள நீறாத்
தூமுத்த வெண்முறுவல் உமையோ டாடித்
திளைத்தானைத் தென்கூடற் றிருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

கம்பத்தடி மண்டபம்: சுவாமி சந்நிதிக்கு எதிரில் உள்ள இந்த மண்டபத்தில் ஏராளமான சிற்பங்கள் உள்ளன. மண்டபத்தின் நடுவில் தங்கக் கொடி மரமும், நந்தியும், பலிபீடமும் உள்ளன. சுற்றிலும் உள்ள எட்டுத் தூண்களிலும் அற்புதமான சிலைகள் உள்ளன. சங்கரநாராயணர், சோமாஸ்கந்தர், அர்த்தநாரீஸ்வரர் போன்ற தோற்றங்களும் திருமாலின் தசாவதாரக் காட்சிகளும் அற்புதமானவை. இவற்றுக்கு எல்லாம் சிகரம் வைத்தால் போல் அமைந்திருப்பது மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணச் சிற்பமாகும். கம்பத்தடி மண்டபத்திற்குப் பக்கத்தில் இரு பெரிய தூண்களில் வடிக்கப்பட்டுள்ள அக்கினி வீரபத்திரர், அகோர வீரபத்திரர் சிலாரூபங்களும், அடுத்துள்ள தூண்களிலுள்ள ஊர்த்துவதாண்டவர், காளியின் சிலாரூபங்களும் மிகவும் அழகுடன் காட்சி அளிக்கின்றன.

நவக்கிரங்களில் புதனுக்குரியதாக கூறப்படுகிறார் சுந்தரேஸ்வரர், சொக்கநாதர் என்று அறியப்படும இத்தல இறைவன். புதனுக்கான பரிகாரங்களை இக்கோவிலில் உள்ள சிவனுக்கு செய்வது வழக்கம்.

விருத்தாசுரன் என்ற அசுரனை வென்ற தேவேந்திரன், தனது பிரம்மகத்தி தோஷம் நீங்க கடம்பவனத்தில் இருந்த இந்த சிவலிங்கத்தை பூசித்து தனது தோஷத்தை போக்கிக் கொண்டதாக வரலாறு. அவன் பெயரிலேயே இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.



சித்ரா பௌர்ணமி: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சித்ராபௌர்ணமி விழா கொண்டாடப்பட்டாலும், மதுரையில் தான் சித்ரா பௌர்ணமி விழா விசேஷமாக கருதப்படுகிறது. ஒருமுறை விருத்த்ராசுரன், விஸ்வரூபன் என்ற இருவரை தேவேந்திரன் கொன்றான். அவர்கள் பிறப்பால் அந்தணர்கள் ஆனதால் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அதிலிருந்து விடுபட தன் குருவை நாடி உபாயம் கேட்டான். குருபகவான் அவனிடம் பூலோகம் சென்று பல்வேறு சிவஸ்தலங்களில் வழிபட்டால் ஓரிடத்தில் உன் தோஷம் நீங்கும் என்று கூறினார். அதன்படி இந்திரன் காசி முதலிய பல ஸ்தலங்களில் வழிபட்டு தெற்கு நோக்கி வந்தான். ஓரிடத்தில் கடம்ப மரத்தின் கீழ் சென்றவுடன் தன்னைப் பற்றியிருந்த தோஷம் விலகக் கண்டான். இந்திரன் மகிழ்ச்சியடைய அவன் முன் கடம்ப மரத்தடியில் சிவபெருமான் திருஆலவாய் சோமசுந்தரர் அவனுக்கு காட்சி கொடுத்தார். இந்திரன் சிவபெருமானுக்கு கோவில் கட்ட நினைத்து தேவலோகத்தில் இருந்து ஒரு விமானம் வரவழைத்தான். இத்தலத்து இறைவனுக்கு இந்திரன் விமானம் அமைத்ததால் அதற்கு இந்திர விமானம் என்றும், விண்ணில் இருந்து வந்ததால் விண்ணிழி விமானம் என்றும் சொல்லப்படுகிறது. ஆலயம் எடுத்த இந்திரனிடம் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் என்னை இங்கு வந்து வழிபடுக என்று கட்டளையிட்டார். அதன்படி ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் இந்திரன் இங்கு வந்து வழிபடுகிறான் என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது. அதனால் தான் சித்ராபௌர்ணமி மதுரையில் விசேஷமாகக் கருதப்படுகிறது.


ஈசனின் 64 திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடந்தவை. சுவாமி சந்நிதி பிராகாரங்களில் 64 திருவிளையாடல் காட்சிகள் சிற்பங்களாக இருக்கின்றன. இக்கோவிலின் தல விருட்சம் கடம்ப மரம், தீர்த்தம் பொற்றாமரை குளம், மற்றும் வைகை. பல நூறு வருடங்களுக்கு முன் இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் கிடைக்கப்பெற்ற ஸ்படிக லிங்கம், இன்றும் மதுரை ஆதீனத்தில் வழிபாட்டில் உள்ளது. இறைவனின் 5 சபைகளில் இத்தலம் வெள்ளி சபை. மற்ற பிற தலங்களில் எல்லாம் இடது காலைத் தூக்கி நடனமாடும் நடராஜர், வெள்ளியம்பலத்தில் மட்டும் வலக்காலைத் தூக்கி வைத்து நடனமாடுகிறார். இந்த சந்நிதியே வெள்ளியம்பலம் எனப்படுகிறது. நடனக் கலையைக் கற்ற பாண்டிய மன்னன் இராஜசேகர பாண்டியன், நடனமாடுவதில் உள்ள சிரமத்தை உணர்ந்தான். வெள்ளியம்பலத்தில் உள்ள நடராசர் ஒரு காலில் எப்பொழுதும் நின்றபடி ஆடுவதால் அவருக்குக் கால் வலிக்குமே என்று கருதி அவரிடம் காலை மாற்றி ஆடும்படி வேண்டிக் கொள்ள நடராசரும் அவனுக்காக இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி ஆடினதாகத் திருவிளையாடற் புராணம் கூறுகிறது.


முக்குறுணி விநாயகர்: தெற்கு கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் நேரே நாம் காண்பது முக்குறுணி விநாயகர் சந்நிதி. கி.பி. 1623-1659 வரை மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் தனக்கு அரண்மனை கட்டுவதற்காக வண்டியூர் தெப்பக்குளம் அருகே மண்ணை வெட்டியபோது, மண்ணில் புதையுண்டிருந்த இந்த விநாயகர் திருவுருச் சிலையை கண்டெடுத்து இங்கே கி.பி. 1645ல் பிரதிஷ்டை செய்தார். ஒரே கல்லினால் ஆன இவ்விநாயகரின் உயரம் 7 அடி. ஒவ்வொரு விநாயக சதுர்த்தியின் போதும் இந்த விநாயகருக்கு 18 படி (முக்குறுணி) அரிசியால் கொழுக்கட்டை தயார் செய்து படைக்கப்படுவதால் இவ்விநாயகர் முக்குறுணி விநாயகர் என அழைக்கப்படுகிறார்.


    மீனாட்சி அம்மன் கோவிலின் மற்ற சிறப்புகள்:

  • ஈசனே தருமி என்ற புலவருக்காக இறையனாராக வந்து நக்கீரருடன் வாதிட்ட தலம். நக்கீரர் தன்னுடன் வாதாடுவது இறைவன் என்று தெரிந்தும் "நெற்றிக்கன் திறப்பினும் குற்றம் குற்றமே" என்று வாதிட்ட தலம்.
  • இத்தலத்தில் தான் முருகன் திருவருளால் ஊமைத் தன்மை நீங்கிய குமரகுருபரர் மீனாட்சி பிள்ளைத்தமிழ் அரங்கேற்றியதும், , திருவாதவூராருக்கு மாணிக்கவாசகர் என்ற பெயரை இறைவன் கொடுத்ததும் நிகழ்ந்தது.
  • திருஞானசம்பந்தர் அனல் வாதம், புனல் வாதம் செய்து சைவத்தை பாண்டிநாட்டில் நிலைபெறச் செய்த தலம்.
  • சிவனின் 64 திருவிளையாடல்களை நிகழ்த்திய தலம்.
  • சிவனே எல்லாம் வல்ல சித்தராக எழுந்தருளியிருக்கும் அதி அற்புத தலம்
  • வருடம் முழுவதும் எப்போதும் திருவிழாக்கள் நடந்த வண்ணமே இருக்கும் சிறப்பு வாய்ந்த தலம்.
  • பாணபத்திரருக்கு தன் கைப்பட பாசுரம் எழுதிக்கொடுத்து சேரனிடம் இறைவன் நிதி பெற வைத்த தலம்
  • இராமர், லட்சுமணர் மற்றும் பிற தேவர்களும் முனிவர்களும் பூசித்துப் பேறு பெற்ற தலம்.
  • இத்தலத்திலுள்ள பொற்றாமரைக் குளமும், தெற்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் நேரே காட்சியளிக்கும் முக்குறுணி விநாயகரும் மிகவும் தரிசிக்கத் தக்கவையாகும்.

பதிகம் பகுதி செல்ல

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பற்றி மேலும் விபரங்கள் அறிய ஆலயத்தின் அதிகாரபூர்வ இணைய தளத்தை பார்க்கவும்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்
புகைப்படங்கள்

முக்குறுணி விநாயகர்
ஆலயத்தின் தெற்கு கோபுரம்
ஆலயத்தின் தெற்கு கோபுரம் -மற்றொரு தோற்றம்
பொற்றாமரைக் குளம்
மீனாட்சி அம்மன்

திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்து பதிகம்

  1. நீல மாமிடற் றால வாயிலான்
  2. மந்திர மாவது நீறு
  3. மானின்நேர்விழி மாதராய்
  4. காட்டு மாவ துரித்துரி
  5. செய்ய னேதிரு ஆலவாய் மேவிய
  6. வீடலால வாயிலாய் விழுமியார்கள்
  7. வேத வேள்வியை நிந்தனை
  8. ஆலநீழ லுகந்த திருக்கையே
  9. மங்கையர்க் கரசி வளவர்கோன்

திருநாவுக்கரசர் அருளிய இத்தலத்து பதிகம்

  1. முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி
  2. வேதியா வேத கீதா

அருணகிரிநாதர் அருளிய இத்தலத்து திருப்புகழ்

  1. அலகில வுணரைக் கொன்ற தோளென
  2. ஆனைமுக வற்கு நேரிளைய பத்த
  3. ஏலப்பனி நீரணி மாதர்கள்
  4. சீத வாசனைம லர்க்குழல்பி லுக்கி
  5. சைவமுதற் குருவாயே சமணர்களைத்
  6. நீதத் துவமாகி நேமத் துணையாகிப்
  7. பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய
  8. பழிப்பர் வாழ்த்துவர் சிலசில பெயர்தமை
  9. புருவச் செஞ்சிலை கொண்டிரு
  10. மனநினை சுத்தஞ் சூது காரிகள்
  11. முகமெ லாநெய் பூசித் தயங்கு
  12. முத்துநவ ரத்நமணி பத்திநிறை