மதுரையில் இருந்து வடக்கே வைகை நதியின் கரையோரம் அமைந்துள்ள சிவஸ்தலம் திருவேடகம். இங்கு வைகை நதி தெற்கு வடக்காக ஓடுவதால் காசிக்கு நிகரான சிறப்பு உடையதாக இத்தலம் கருதப்படுகிறது. இத்தலத்தில் ஒரு நாள் தங்கி இருந்து இறைவனை முழுமனதுடன் பூஜை, அர்ச்சனை முதலியன செய்து வழிபட்டால் காசியில் ஆயுள் முழுவதும் வாழ்ந்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பிரம்மா, பராசரர், வியாசர் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். இக்கோவிலில் உள்ள காலபைரவர் சந்நிதியும் மிகவும் விசேஷமானது.
தல வரலாறு: மதுரையை அரசாண்டு வந்த கூன்பாண்டியன் சமண சமயத்தைச் சார்ந்தவன். அவன் மனைவி மங்கையர்க்கரசி ஒரு சிறந்த சிவ பக்தை. 63 நாயன்மார்களில் ஒருவராகத் திகழ்பவள். சைவத்தைக் காப்பாற்ற மங்கையர்க்கரசி அழைப்பின் பேரில் திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்தபோது திருநீறு பூசி அரசன் கூன்பாண்டியனின் வெப்ப நோய் நீங்க உதவினார். அங்கிருந்த சமணர்கள் ஆத்திரமுற்று சம்பந்தருடன் அணல் வாதம் புணல் வாதம் புரிந்தனர். சமணர்கள் தங்கள் ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆயிற்று. ஆனால் சம்பந்தர் திருநள்ளாற்றுப் பதிகம் எழுதிய ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆகாமல் பச்சையாகவே இருந்தது. பின்பு புணல் வாதத்தின் போது சமணர்கள் எழுதிய ஏட்டை ஆற்றில் விட்ட போது அது ஆற்றுடன் சென்றது. ஆனால் சம்பந்தர் "வாழ்க அந்தணர் " என்று தொடங்கும் பதிகம் எழுதியிட்ட ஏட்டை வைகை ஆற்றில் விட்ட போது அது வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து சென்றது. மதுரை பாண்டிய மன்னனின் மந்திரி குலச்சிறையார் என்பவர் குதிரையின் மீதேறி வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து செல்லும் ஏட்டைப் பின் தொடர்ந்து செல்ல அது ஓரிடத்தில் வைகை ஆற்றின் கரையில் ஒதுங்கியது. பாண்டிய மன்னன் ஏடு ஒதுங்கிய இடத்தில் ஒரு சிவலிங்கத்தைக் கண்டு அங்கு ஒரு ஆலயம் எழுப்பினான். அதுவே திருவேடகம் என்ற இந்த பாடல் பெற்ற ஸ்தலம்.
கோயில் அமைப்பு - ஸ்வாமி மற்றும் அம்பாள் சந்நிதிகளுக்கு தனி தனியாக கோபுரங்களுடன், இவ்வாலயம் வைகை நதியின் வடகரையில் அமைந்துள்ளது. ஸ்வாமி சந்நிதி நிலை ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் கம்பத்தடி மண்டபம் உள்ளது. இங்கு கொடிமரம், பலிபீடம், ஒரு உயர்ந்த மேடையில் நந்தி இருப்பதைக் காணலாம். உள் வாயில் வழியே இறைவன் கருவறையை அடையலாம். கருவறை சுற்று பிரகாரத்தில் 63 மூவர், சப்தமாதர்கள், இரட்டை விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர் ஆகிய சந்நிதிகள் உள்ளன. மூலவர் ஏடகநாதர் கருவறையில் சுயம்பு லிங்க திருமேனியாக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கருவறை சுற்று சுவரில் கோஷ்ட மூர்த்தங்களாக தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பகவர், துர்கை, பிரம்மா ஆகியோர் உள்ளனர்.
அம்பாள் சந்நிதி தனியே உள்ளது. அம்பாள் கோவில் வாயிலில் உள்ள மணி மலேயாவிலிருந்து வரவழைக்கப்பட்டதாக தல புராணம் கூறுகிறது. அம்பாள் கருவறை சுற்று பிரகாரத்தில் சண்டிகேஸ்வரி சந்நிதி உள்ளது . அம்பாள் சந்நிதியில் உள்ள ஒரு கல் தூணில் திருஞானசம்பந்தர் சிற்பம் இருப்பதைக் காணலாம்.
செவி சாய்த்த விநாயகர் - இத்தலத்தில் உள்ள ஏடகநாதர் கோவிலில் ஒரு தூணில் மூஞ்சுறு வாகனத்தில் அமர்ந்த நிலையில் உள்ள விநாயகரின் சிற்பம் மிகவும் வித்தியாசமாக உள்ளது. இவரை 'செவி சாய்த்த விநாயகர்' என்கின்றனர். தம்மிடம் வரும் அன்பர்களின் வேண்டுகோளையும் மனக்குறைகளையும் கேட்கும் விதத்தில் தன் காதினை நமக்கு காட்டி அமர்ந்திருப்பதால் இந்த பெயர் ஏற்பட்டது.
இத்தலத்திற்கான சம்பந்தரின் பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. பதிகத்தின் கடைசி பாடலில் ஏடு வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து சென்றது குறிப்படப்பட்டு உள்ளது. இத்தல வரலாற்றின் சான்றாக கூறப்பட்டுள்ள இப்பாடலின் பொழிப்புரையைக் கீழே காண்க.
கோடுசந் தனமகில் கொண்டிழி வைகைநீர் ஏடுசென் றணைதரும் ஏடகத் தொருவனை நாடுதென் புகலியுள் ஞானசம் பந்தன பாடல்பத் திவைவல்லார்க் கில்லையாம் பாவமே.
பொழிப்புரை - யானையின் தந்தம், சந்தனம், அகில் ஆகியவற்றை அலைகள் வாயிலாகக் கொண்டுவரும் வைகை நீரில் எதிர் நீந்திச் சென்ற திருவேடுதங்கிய திருவேடகம் என்னும் திருத்தலத்திலுள்ள ஒப்பற்ற இறைவனை நாடிப் போற்றிய, அழகிய புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இப்பத்துப் பாடல்களையும் பக்தியுடன் ஓதவல்லவர்களுக்குப் பாவம் இல்லை. அவர்கள் தீவினைகளில் இருந்து நீங்கப் பெற்றவர்கள் ஆவர்.