தல வரலாறு - நடு நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கில் 23 ஆவதாக உள்ள இத்தலம் அகஸ்திய முனிவரால் பூஜிக்கப்பட்ட ஒரு ஸ்தலமாகும். இறைவன் அகஸ்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் நந்திகேஸ்வரர் இறைவி அகிலாண்டேஸ்வரியை மஹாசிவராத்திரி அன்று வழிபடுவதாக ஐதீகம். சுகப்ரஹ்ம மகரிஷி வயிற்று வலி நீங்க வழிபட்ட ஸ்தலம். ஆதிஷேஷனும் இத்தல இறைவனை வழிபட்டதாக ஸ்தல புராணம் கூறுகிறது.
கோவில் அமைப்பு - 1500 வருடம் பழமையான இவ்வாலயம் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது . சோழ மன்னர்களுக்கு 'கிள்ளி' என்கிற பட்டப்பெயர் சூட்டுவது மரபு. கிள்ளியனுர் என்னும் பெயர் இவ்வூருக்கு இதன் தொடர்பாக வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவ்வாலயத்திற்கு ராஜகோபுரம், கொடிமரம் இல்லை. அகஸ்தீஸ்வரர் சந்நிதியின் நுழைவாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் உருவம் உள்ளது. இறைவி அகிலாண்டேஸ்வரி தனி சந்நிதியில் அருள் பாலிக்கிறாள். வெளி பிரகார சுற்றில் குரோதன பைரவர், கால பைரவர் சந்நிதி அடுத்தடுத்து உள்ளன. இத்தலத்து இறைவனை பூஜித்த அகஸ்திய முனிவருக்கு தனி சந்நிதி உள்ளது. கருவறை சுற்றில் கோஷ்ட மூர்த்தங்களாக தக்ஷிணாமூர்த்தி, துர்கை உள்ளனர். விநாயகர், கஜலக்ஷ்மி, வள்ளி தெய்வானை சமேத முருகன், மஹாவிஷ்ணு , ப்ரஹ்மா, நவகிரஹம், சூர்ய, சந்திர முதலிய மூர்த்தங்கள் உள்ளன. இத்தலத்தின் ஸ்தல வ்ருக்ஷம் வன்னி மரம்.
திருஞானசம்பந்தர் பாடியருளிய இத்தலத்திற்கான பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது