பசுபதீஸ்வரர் திருக்கோவில், ஆவூர் பசுபதீச்சரம்
சிவஸ்தலம் பெயர்: ஆவூர் பசுபதீச்சரம்
இறைவன் பெயர்: பசுபதீஸ்வரர்
இறைவி பெயர்: மங்களாம்பிகை, பங்கஜவல்லி
பதிகம்: திருஞானசம்பந்தர் - 1
பசுபதீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்



எப்படிப் போவது
கும்பகோணத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் கோவிந்தகுடி, மெலட்டூர் வழியாக தஞ்சாவூர் செல்லும் சாலையில் கோவிந்தகுடியை அடுத்து ஆவூர் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உண்டு. கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பட்டீஸ்வரம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து தெற்கே சுமார் 6 கி.மீ. தொலைவில் இருக்கிறது.
ஆலய முகவரி
ஆவூர்
ஆவூர் அஞ்சல்
வலங்கைமான் வட்டம்
தஞ்சை மாவட்டம்
PIN - 612701.
ஆலய நேரம்
காலை: 6:00 - 11:00
மாலை: 4:00 - 8:30
அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்
1 | திருசக்கரப்பள்ளி - 18.7 கிமி | |
2 | திருக்கருகாவூர் - 8.2 கிமி | |
3 | திருப்பாலைத்துறை - 10 கிமி | |
4 | திருநல்லூர் - 8 கிமி | |
5 | திருசத்திமுத்தம் - 4.4 கிமி |
தல வரலாறு
ஒருசமயம் ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் தமக்குள் யார் வலியவர் என்பதில் போட்டி எழுந்தது. ஆதிசேடன் கயிலையைத் தன் ஆயிரம் மகுடங்களாலும் இறுகப்பற்றிக் கொள்ள, வாயுதேவன் சண்டமாருதமாக மலையை அசைக்க முற்பட்டு பலத்த காற்றை வீசினார். இந்த இருவரின் போட்டியால் தேவர்கள் அஞ்சினர். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி ஆதிசேடன் தன்பிடியைச் சிறிது தளர்த்தினார். இது தான் தக்க சமயமென்றெண்ணி வாயு இரு சிகரங்களைப் பெயர்த்துக் கொண்டு வந்து தென்னாட்டில் ஒன்றை ஆவூரிலும், மற்றொன்றை அருகிலுள்ள திருநல்லூரிலும் விடுவித்தான் என்று தலபுராணம் தெரிவிக்கிறது.
வசிஷ்டரால் சாபம் பெற்ற காமதேனு, பிரம்மாவின் அறிவுரைப்படி உலகிற்கு வந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டு தன் சாபம் நீங்கப் பெற்ற தலம். ஆ (பசு) வழிபட்டதால் இத்தலம் ஆவூர் என்று பெயர் பெற்றது. காமதேனு இவ்வுலகிற்கு முதலில் வந்தடைந்த கோவிந்தகுடி என்ற இடம் அருகிலுள்ளது. ஆலயத்தின் கொடிமரத்தில் பசு சிவலிங்கத்தின் மீது பால் சொரிந்து வழிபடும் சிற்பமுள்ளது.
கோவில் அமைப்பு
மாடக்கோவில்
கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோவில்களில் ஆவூர் பசுபதீஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். 5 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன நம் கண்ணில் படுவது கிழக்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம். இறைவன் சந்நிதி ஒரு கட்டுமலை மீது அமைந்துள்ளது. தெற்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள படிகள் மூலம் ஏறி இறைவன் குடிகொண்டுள்ள கட்டுமலையை அடையலாம். கட்டுமலை ஏறி உள்ளே நுழைந்தால் மகாமண்டபம், அர்த்த மண்டபம், அதையடுத்து கருவறையில் மூலவர் பசுபதீஸ்வரர் சுயம்பு லிங்கத் திருமேனி உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.
அம்பாள் சந்நிதி
மகாமண்டபத்தில் வடபுறம் தெற்கு நோக்கி மங்களாம்பிகை, பங்கஜவல்லி என இரண்டு அம்பாள் சந்நிதிகள் அமைந்துள்ளன. இதில் மங்களாம்பிகை குளத்திலிருந்து எடுத்துப் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும். பங்கஜவல்லி அம்மன் மிகவும் பழைமையானது. சம்பந்தர் தனது தேவாரப் பதிகத்தில் 3-வது பாடலில் பங்கய மங்கை விரும்பும் ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடுநாவே என்று குறிப்பிட்டிருந்தாலும், இத்தலத்தில் சிறப்பு வாய்ந்த சந்நிதி மங்களாம்பிகை அம்பாள் சந்நிதியே.
சந்நிதிகள்
இத்தலத்தில் தசரதர் சிவபெருமானை வழிபட்டுள்ளார். தசரதர் ஈசனை வழிபடும் சிற்பத்தை உட்பிரகாரத்தில் நாம் காணலாம். சப்த மாதர்களின் திருஉருவங்களும் உட்பிரகாரத்திலுள்ளன. நவக்கிரக சந்நிதியும் இங்குள்ளது. இத்தல முருகன் வில்லேந்திய வேலனாகக் காட்சியளிக்கிறார். வள்ளி தெய்வானையுடன் வில்லேந்தி காட்சி தரும் முருகனின் சந்நிதி மேற்கு வெளிப் பிரகாரத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
தலவிருட்சம்
தலவிருட்சமாக அரசமரமும், தீர்த்தங்களாக பிரம்ம தீர்த்தம், காமதேனு தீர்த்தம் ஆகியவை உள்ளன. காமதேனு தீர்த்தம் வழக்கில் தேனுதீர்த்தம் என்று சொல்லப்படுகிறது. பிரம்மா, சப்தரிஷிகள், தேவர்கள், இந்திரன், சூரியன், நவக்கிரகங்கள், வசிஷ்டர் ஆகியோர் வழிபட்ட இத்தலத்தை நீங்களும் சென்று வழிபடுங்கள்.
பஞ்ச பைரவர்
இத்தலம் ஒரு பஞ்ச பைரவத் தலம் என்ற சிறப்பைப் பெற்றது. மகாமண்டபத்தில் மேற்கு நோக்கு 4 பைரவ மூர்த்திகளும், வடக்கு நோக்கி ஒரு பைரவ மூர்த்தியும் சுயம்புவாக அமைந்த திருக்கோலத்தை நாம் தரிசிக்கலாம். பைரவ மூர்த்தி வழிபாடு இங்கு மிகவும் சிறப்புடையதாகும். அஷ்டமி திதியன்று கூட்டு எண்ணையால் விளக்கேற்றி வழிபாடு செய்து வந்தால் பில்லி, சூன்யம், ஏவல் மற்றும் செய்வனையால் ஏற்படும் சகலவித கோளாறுகளும் நீங்கும். மரண பயம், வாகன விபத்து அபாயம் நீங்கும், பெற்றோர் பிள்ளகளுக்கு இடையில் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை நிலவும. தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிணக்குகள் நீங்கி நல்ல முறையில் சேர்ந்து வாழ்வர். இந்த பைரவர்கள் அசிதாங்க பைரவர், குரு பைரவர், சண்ட பைரவர், கால பைரவர் மற்றும் உன்மத்த பைரவர் எனப்படுவர்.
சம்பந்தர் பதிகம்
சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. தனது பதிகத்தின் ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் "ஆவூர்ப் பசுபதி யீச்சரம் பாடு நாவே" என்று தனது நாவிற்கு கட்டளையிடுகிறார்.
மேலும் புகைப்படங்கள்






