பாலைவனநாதர் திருக்கோவில், திருப்பாலைத்துறை - Paalaivananathar Temple, Thiruppalaithurai
சிவஸ்தலம் பெயர்: திருப்பாலைத்துறை
இறைவன் பெயர்: பாலைவனநாதர்
இறைவி பெயர்: தவளவெண்ணகையம்மை, தவளாம்பிகை, தவளாம்பாள்
பதிகம்: திருநாவுக்கரசர் - 1
பாலைவனநாதர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது
தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் NH 45C தேசீய நெடுஞ்சாலையில் உள்ள பாபநாசத்தை அடுத்து 2 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. சாலை அருகிலேயே கோவில் உள்ளது. தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய ஊர்களில் இருந்து பாபநாசம் வர பேருந்து வசதிகள் உண்டு.
ஆலய முகவரி
திருப்பாலைத்துறை
பாபநாசம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 614205
ஆலய நேரம்
காலை: 7:00 - 12:30
மாலை: 4:30 - 8:30
பூஜை காலங்கள்
காலை சந்தி 9:00 - 9:30
உச்சி காலம் 12:00 - 12:30
சாயரக்ஷை 6:00 - 6:30
அர்த்த ஜாமம் 8:00 - 8:30
🔔 குறிப்பு: அக்டோபர் 2025 ல் கோவிலுக்குச் சென்று பார்வையிட்டதன் பின்னர் அனைத்து தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்
| 1 | திருசக்கரப்பள்ளி - 10 கிமி | |
| 2 | திருக்கருகாவூர் - 8 கிமி | |
| 3 | திருநல்லூர் - 4 கிமி | |
| 4 | ஆவூர் பசுபதீச்சரம் - 10 கிமி |
பயண குறிப்பு
கும்பகோணத்தில் இருந்து தனியார் வாகனம், சொந்த வாகனம் அல்லது வாடகை வாகனம் போன்றவற்றில் பயணம் தொடங்கினால், SCT019 முதல் SCT023 வரை உள்ள 5 சிவஸ்தலங்களை ஒரே சுற்றில் வழிப்படலாம், ஏனெனில் இவை அனைத்தும் ஒரே பாதையில் அமைந்துள்ளன. காலை அல்லது மாலை வேளையில் பயணத்தை திட்டமிட்டால், முதலில் திருப்பாலைத் துறையில் தொடங்கி, கடைசியாக பட்டீஸ்வரம் கோவிலில் தரிசனம் செய்யலாம். பட்டீஸ்வரம் ஒரு முக்கியமான திருத்தலம் என்பதால், அது பொதுவாக நீண்ட நேரம் திறந்திருக்கும்.
காலை நேரத்தில் பயணத்தை தொடங்கினால், அனைத்து கோவில்களையும் மதிய உணவு நேரத்திற்குள் தரிசித்து முடிக்கலாம். அதேபோல், மாலை நேரத்தில் கும்பகோணத்தில் இருந்து மூன்று மணி முப்பது நிமிடம் அளவில் பயணத்தை தொடங்கினால், அனைத்து கோவில்களையும் இரவு உணவு நேரத்திற்குள் தரிசித்து முடிக்கலாம்.
SCT019 முதல் SCT024 வரை இணைக்கும் வரைபடம்தலப்பெருமை
தாருகாவனத்து முனிவர்கள், இறைவனைப் புறக்கணித்து அவரையே அழிக்க எண்ணி, தீயவேள்வி செய்து புலியை வரவழைத்தனர். அதை இறைவன் மீது அவர்கள் ஏவ, இறைவனும் அப்புலியின் தோலை உரித்து அதன் தோலை இடையில் ஆடையால உடுத்திக் கொண்ட செயலைச் செய்த தலம் என்ற சிறப்பை திருப்பாலைத்துறை பெற்றுள்ளது. இராமர், லட்சுமணன், சீதை, கெளமியர், அருச்சுனன் ஆகியோர் வழிபட்ட தலம் என்ற சிறப்பும் இத்தலத்திற்குண்டு.
கோவில் அமைப்பு
கோபுரங்கள்
ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறது. ராஜகோபுரத்தில் சிற்பங்களில்லை. கீழ்ப்பகுதி கருங்கல்லிலும், மேற்பகுதி செங்கற் கட்டமைப்பிலும் காணப்படுகிறது. உள்ளே நுழைந்தால் கொடிமரம், விநாயகர், பலிபீடம், நந்தி மண்டபம் உள்ளன. உள்கோபுரம் மூன்று நிலைகளையுடையது.
நெற்களஞ்சியம்
வெளிப் பிரகாகாரத்தின் வலதுபுறம் ஒரு பெரிய செங்கல்லால் கட்டப்பட்ட 36 அடி உயரம் கொண்ட(கிபி 1600-1634) நெற்களஞ்சியம் காட்சி தருகிறது. வட்ட வடிவில் கூம்பு முனையுடன் கட்டப்பட்டுள்ள இக்களஞ்சியம் சுமார் 3000 கலம் நெல் கொட்டி வைக்கும் அளவு பெரியதானது. இவ்வளவு அதிகமான நெல் வருவாயைக் கொண்டதாக இக்கோயில் விளங்கியதென்பது நமக்கு இதனால் தெரிய வருகின்றது. இன்று இது பயன்படுத்தப்படாமல் உள்ளது.
அம்பாள் சந்நிதி
வெளிப் பிரகாரத்தில் இடதுபுறம் அம்பாள் சந்நிதி தனிக்கோயிலாக, சுவாமி சந்நிதிக்கு வலதுபுறம் அமைந்துள்ளபடி உள்ளது. இதுவும் கிழக்கு நோக்கிய சந்நிதியே. அம்பாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள்.
சந்நிதிகள்
உள்நுழைந்து கருவறை சுற்றுப் பிரகாரத்தில் வலம் வரும்போது விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், வசிஷ்டர் பூசித்த சிவலிங்கம், மகாலட்சுமி, பார்த்திபன், மலையத்துவசன் ஆகியோர் வழிபட்ட இலிங்கங்கள் ஆகியவை உள்ளன. அறுபத்துமூவர் மூலவர்த் திருமேனிகள் உள்ளன. நடராசசபை உள்ளது. காலபைரவர், சூரியன் சந்நிதிகளும் உள்ளன.
மூலவர் சந்நிதி
மூலவர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், ஊர்த்துவ தாண்டவர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேஸ்வரர் சந்நிதியும் தனியே உள்ளது.
திருமணத் தலம்
சுவாமி சந்நிதிக்கு வலதுபுறம் அம்பாள் சந்நிதி அமைந்துள்ளதால் இத்தலம் திருமணத் தலமாக விளங்குகிறது. இப்பகுதி மக்கள் திருமண நிச்சயதார்த்தம், திருமணம் ஆகியவற்றை இக்கோவிலில் நடத்துகின்றனர்.
பதிகம் சிறப்பு
திருநாவுக்கரசு சுவாமிகள் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இப்பதிகத்தின் நடுப்பாடலாக உள்ள விண்ணினார் பணிந்து ஏத்த வியப்புறும் என்று தொடங்கும் பாடலின் நடுவில் சூட்சும பஞ்சாட்சரம் (சிவாய) விளங்குகிறது. இச்சிறப்பினையுடைய பதிகத்திற்கு உரிய தலம் இதுவேயாகும்.
விண்ணினார் பணிந்து ஏத்த வியப்புறும்
மண்ணினார் மறவாது சிவாய என்று
எண்ணினார்க்கு இடமா எழில் வானகம்
பண்ணினார் அவர் பாலைத் துறையரே.
ஆலய காணொலி
மேலும் புகைப்படங்கள்