Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருகருப்பறியலூர் ( தற்போது தலைஞாயிறு என்று வழங்குகிறது )
இறைவன் பெயர்குற்றம் பொறுத்த நாதர், அபராத க்ஷமேஸ்வரர்
இறைவி பெயர்கோல்வளைநாயகி, விசித்ர பாலாம்பிகை
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
சுந்தரர் - 1
எப்படிப் போவது மயிலாடுதுறை - மணல்மேடு சாலையில் அமைந்துள்ள பட்டவர்த்தி என்ற சிற்றூரில் இருந்து வடகிழக்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. வைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில், "தலைஞாயிறு" என்று கைகாட்டி உள்ள இடத்தில், வலதுபுறம் பிரிந்து செல்லும் சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம். வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது.
ஆலய முகவரிஅருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோவில்
தலைஞாயிறு
தலைஞாயிறு அஞ்சல்
வழி இளந்தோப்பு
மயிலாடுதுறை வட்டம்
மயிலாடுதுறை மாவட்டம்
PIN - 609201

இவ்வாலயம் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
Tirukaruppariyalur route map

வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து திருகருப்பறியலூர் செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

இத்தலம் இந்நாளில் தலைஞாயிறு என்று வழங்குகிறது. இங்குள்ள ஆலயம் கொகுடிக்கோயில் என்று பெயர் பெறும். கொகுடி என்பது ஒருவகை முல்லை. இதன் வடிவில் அமைந்த கோயில் ஆதலால் இப்பெயர் பெற்றது. சீகாழிக்கு மேற்கில் இருப்பதால் மேலைக்காழி என்றும், சூரியன் வழிபட்டதால் தலைஞாயிறு என்றும், ஆதித்யபுரி என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது.

தருமையாதீனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இவ்வாலயம் கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. உள்மண்டபம் வெளவால் நெத்தி மண்டப அமைப்பில் காணப்படுகிறது. பிராகாரத்தில் சீர்காழியிலிருப்பது போல உயர்ந்த தனிக்கோயிலாகச் சட்டைநாதர் சந்நிதி உள்ளது. மேலேறிச் சென்று தோணியப்பரைத் தரிசித்து அதற்கும் மேலே சென்று சட்டை நாதரைத் தரிசிக்க செங்குத்தான மரப்படிகளை ஏறவேண்டும். இதனாலேயே இத்தலம் மேலைக்காழி என்றழைக்கப்படுகிறது. தோணியப்பர் சந்நிதியை இத்தலத்தில் கர்ப்பஞானேஸ்வரர் கர்ப்பஞானபரமேஸ்வரி சந்நிதி என்றழைக்கின்றனர். தலமரமான கொகுடிமுல்லை லிங்கோத்பவருக்கு எதிரில் காணப்படுகிறது.

ஒருமுறை இந்திரன் இறுமாப்புடன் கயிலைக்குச் சென்றான். அப்பொழுது இறைவர் பூதவடிவாய் அவன்முன் தோன்றினார். இந்திரன் இறைவன் என்றறியாமல் அவர் மீது வச்சிராயுதத்தை எறிந்தான். அதன்பின் இறைவர் என்று அறிந்து தன்பிழையைப் பொறுத்தருளுமாறு வேண்டினான். இறைவனும் இந்திரனின் குற்றத்தைப் பொறுத்தருள் செய்தமையால் குற்றம் பொறுத்த நாதர் என்று இத்தல இறைவனுக்கு பெயர் ஏற்பட்டது என்று தலவரலாறு கூறுகிறது. மேலும் இத்தல இறைவன் அனுமனால் பூஜிக்கப்பட்டவர். தான் லிங்கத்தை கொண்டு வருவதற்குள் சீதை மணலால் லிங்கம் செய்து இராமேஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்ததை அறிந்த அனுமன் வருந்தினான். அத்துடன் அந்த லிங்கத்தை தன் வாலினால் கட்டி இழுத்தான். ஆனால் முடியவில்லை. இப்படி செய்ததால் அனுமனுக்கு சிவஅபராதம் ஏற்பட்டது. இந்த தோஷத்தைப் போக்கிக் கொள்ள சிவனைக் குறித்து தவம் செய்யும்படி இராமர் அனுமனுக்கு ஆலோசனை கூறினார். அனுமனும் அவ்வாறே செய்ய, சிவன் தோன்றி அனுமனிடம் "தலைஞாயிறு எனப்படும் இத்தலம் சென்று வழிபாடு செய்தால் இந்த தோஷம் விலகும்" என்று அருள்பாலித்தார். அனுமனும் அதன் படி தலைஞாயிறு தலம் வந்து வழிபட்டு தோஷம் நீங்க பெற்றார். அதன் பிறகு சிவனின் கருணைக்கு வியந்து இத்தலத்தின் வடகிழக்கில் தன்பெயரால் ஒரு லிங்கம் அமைத்து அதை வழிபாடு செய்ய ஆரம்பித்தார். இத்தலம் தற்போது "திருக்குரக்குக்கா"' என வழங்கப்படுகிறது.

திருஞானசம்பந்தர், சுந்தரர் இருவருமே தங்கள் பதிகங்களில் இக்கோவிலை "கொகுடிக்கோயில்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

Top
குற்றம் பொறுத்த நாதர் ஆலயம் புகைப்படங்கள்
3 நிலை இராஜகோபுரம்
கோஷ்டத்தில் விநாயகர்
தோணியப்பர், உமையம்மை
சட்டைநாதர்
வள்ளி தெய்வானையுடன் முருகர்
சட்டைநாதர் சந்நிதிக்குச் செல்லும் வழி
சட்டைநாதர் சந்நிதி விமான சிற்பங்கள்