Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருக்குரக்குக்கா (தற்போது திருக்குரக்காவல் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்குந்தளநாதர், குந்தளேஸ்வரர், குண்டலகர்ணேஸ்வரர்
இறைவி பெயர்குந்தளநாயகி
பதிகம்திருநாவுக்கரசர் - 1
எப்படிப் போவது வைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் "இளந்தோப்பு" என்ற ஊரை அடைந்து, ஊரிலுள்ள மருத்துவமனைக் கட்டிடத்திற்குப் பக்கத்தில் செல்லும் திருக்குரக்காவல் சாலையில் 3 கி.மீ. உள்ளே சென்றால் கோயிலையடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும்.
ஆலய முகவரிஅருள்மிகு குந்தளநாதர் திருக்கோவில்
திருக்குரக்காவல்
இளந்தோப்பு அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
மயிலாடுதுறை மாவட்டம்
PIN - 609201

இவ்வாலயம் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
Tirukurakkukka route map

வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து திருக்குரக்குக்கா செல்லும் வழி வரைபடம்
Map courtesy by: Google Maps

பஞ்ச(கா) தலங்களில் திருக்குரக்குக்கா தலமும் ஒன்று. மற்ற தலங்கள் திருவானைக்கா, திருகோடிக்கா, திருநெல்லிக்கா, திருகோலக்கா. குரங்கு வழிபட்டதால் இத்தலம் திருக்குரக்குக்கா என்று பெயர் பெற்றது. இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது. முகப்பு வாயிலைக் கடந்து சென்றால் பலிபீடம் நந்தி உள்ளன. கொடிமரமில்லை. வெளிப் பிராகாரத்தில் விநாயகர், வள்ளி, தெய்வயானை சமேத ஆறுமுகர் சந்நிதிகள் உள்ளன. முன்மண்டபத்தில் வலதுபுறம் பைரவர், சூரியன், அநுமன் மூர்த்தங்கள் உள்ளன. வாயில் முகப்பில் அநுமன் சுவாமியைப் பூசிப்பதுபோல வண்ண ஓவியம் தீட்டப்பட்டுள்ளது.

முன் மண்டபம் வழியே உள்ளே சென்றால் நேரே சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கியும், வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதியும் உள்ளன. சிவன் சந்நிதி கருவறை வாயிலில் ஆஞ்சனேயர் கைகூப்பி நிற்கும் மூர்த்தம் உள்ளது. அனுமனுக்கு தனி சந்நிதி இவ்வாலயத்தில் உள்ளது. இக்கோவிலை ஆஞ்சனேயர் உருவாக்கி சிவனை பூஜித்தார் என்று தலபுராணம் கூறுகிறது. இராமேஸ்வரத்தில் சீதை பிரதிஷ்டை செய்த மணல் லிங்கத்தை தன் வாலினால் கட்டி அகற்ற முற்பட்ட போது அனுமனின் வால் அறுந்து போயிற்று. சிவஅபராதம் நீங்க இராமர் அறிவுரைப்படி ஆஞ்சனேயர் இத்தலத்திற்கு வந்து ஒரு லிங்கத்தை நிறுவி இறைவனை பூஜித்தார். இத்தலத்தின் பிரசித்தி பெற்ற மூர்த்தி இந்த அனுமனே. ஒவ்வொரு அமாவாசையன்றும் இவரது சன்னதியில் ஹோமம் நடக்கிறது. வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதத்தில் இரண்டு குரங்குகள் இத்தலத்திற்கு வந்து, சிவலிங்கம் மீது வில்வ இலை தூவி வழிபடுகிறது. இது ஊர் மக்கள் இன்றளவும் பார்க்கும் உண்மை சம்பவமாகும்.

ஆஞ்சனேயர் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதால், சூரியன் மற்றும் சனியினால் ஏற்படக்கூடிய தோஷம் உடையவர்கள் இத்தலம் வந்து இறைவனையும் ஆஞ்சனேயரையும் வழிபட தோஷங்கள் நீங்கி நலமுடன் வாழ்வார்கள். ஆலய தீர்த்தம் கணபதி நதி எனப்படும் பழவாறு. இதில் நீராடினால் புத்திர பாக்கியம் ஏற்படும், திருமணத் தடை நீங்கும்.

திருநாவுக்கரசர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. குரக்குக்காவில் உள்ள ஐயனைத்தொழும் அடியார்களுக்கு அல்லல் இல்லை, குரக்குக்கா பெருமானைப் போற்றிப் புகழ்வார் வினை நாசமாகும், குரக்குக்காவில் விருப்பமாய் இருப்பவர்களுக்கு இடர்கள் இல்லை, குரக்குக்கா தலத்தில் வாழ்வோராய்த் இருப்பவர்களுக்குப் பாவம் இல்லை, குரக்குக்காவிலுள்ள வரம் அருளும் இறைவனை துதிப்போர் வானுலகு ஆள்வர் என்று எல்லாம் அப்பர் பெருமான் தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார்.

குந்தளநாதர் ஆலயம் புகைப்படங்கள்
ஆலயத்தின் முகப்பு வாயில் தோற்றம்
மூலவர் குண்டலகர்ணேஸ்வரர் சந்நிதி வாயில்
கோஷ்டத்தில் துர்க்கை
கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி
ஆஞ்சனேயர் சந்நிதி
மூலவர் கருவறையில் ஆஞ்சனேயர்
அம்பாள் குந்தளநாயகி