Shiva temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பாடல் பெற்ற தலம் கோவில் விபரங்கள் தமிழ்நாடு வர ஆலோசனைகள்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருவாளொளிப்புத்தூர்
இறைவன் பெயர்மாணிக்கவண்ணர், ரத்னபுரீஸ்வரர்
இறைவி பெயர்வண்டமர் பூங்குழலி, பிரம குந்தளாம்பாள்
பதிகம்திருஞானசம்பந்தர் - 2
சுந்தரர் - 1
எப்படிப் போவது மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் சாலையில் 16 கி.மீ. தொலைவில் உள்ளது. வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் இளந்தோப்பு தாண்டி மேலும் சென்றால் திருவாளப்புத்தூர் ஊர் வரும். ஊரில் இடப்புறமாகச் செல்லும் பாதையில் சென்று கோடியிலுள்ள கோயிலை அடையலாம்.
ஆலய முகவரிஅருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோவில்
திருவாளப்புத்தூர் அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
மயிலாடுதுறை மாவட்டம்
PIN - 609205

இவ்வாலயம் காலை 7-30 மணி முதல் 11-30 மணி வரையும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு: பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுக்க தேவர்களும், அசுரர்களும் மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி நாகத்தைக் கயிராக்கி முயற்சி செய்தனர். அந்த சமயத்தில் கயிறாக இருந்து பாற்கடலைக் கடைய உதவிய வாசுகி நாகம் உடல் வாடி வருந்தியது. தனது உடல் நலம் பெற சிவபெருமானை ஆராதனை செய்து நலிவு நீங்கி பொலிவு பெற்றது. இத்தலத்தில் சிவபூஜை செய்ய வாகை மரத்தடியில் வாசுகி நாகம் ஒரு புற்றில் குடி கொண்டாள். அந்த நாகம் இத்தலத்தில் ஒரு புற்றில் வாழ்ந்திருந்த காரணத்தால் இத்தலம் புற்றூர் என்று அழைக்கப்பட்டது.

பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்ட போது, அர்ஜுனன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். பல தலங்களுக்குச் சென்ற அவன் வாசுகி நாகம் சிவபெருமானை பூஜித்த இத்தலத்திற்கும் வந்தான். அச்சமயம் அவனுக்கு மிகுந்த தாகம் ஏற்பட்டது. தண்ணீருக்காக அலைந்து திரிந்தான். அப்போது இறைவன் அவன் முன் ஒரு வயோதிகராகத் தோன்றி, ஒரு தண்டத்தை அவன் கையில் கொடுத்து அதனை வாகை மரத்திடியில் ஊன்றுமிடத்தில் நல்ல நீர் கிடைக்கும் என்று கூறினார். அர்ஜுனன் தன் கையில் இருந்த வாளை அந்த வயோதிகரிடம் கொடுத்து தான் நீர் அருந்திவிட்டு திரும்பி வரும் வரை வாளை பத்திரமாக் வைத்துக் கொள்ளும்படி கூறிவிட்டுச் சென்றான். இறைவன், அர்ஜுனன் திரும்பி வருவதற்குள், அந்த வாளை வாசுகி நாகம் குடியிருந்த புற்றில் ஒளித்து வைத்துவிட்டு மறைந்தார். நீர் அருந்தி திரும்பி வந்த அர்ஜுனன் வயோதிகரைக் காணாமல் திகைத்து நின்றான். இறைவன் சற்று நேரம் கழித்து வெளிப்பட்டு மறைத்து வைத்திருந்த வாளை வெளிப்படுத்தி அருளினார். இதன் காரணமாக் இத்தலம் வாள் ஒளி புற்றூர் என வழங்கப்பட்டது. தற்போது மக்கள் வழக்கில் இத்தலம் திருவாளப்புத்தூர் என்று வழங்குகிறது. மகாவிஷ்ணு ஒரு மாணிக்க லிங்கத்தை ஸ்தபித்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டதால் இறைவன் மாணிக்கவண்ணர் என்ற் பெயர் பெற்றார்.

கோவில் அமைப்பு: திருவாளொளிப்புத்தூரில் உள்ள இரத்தினபுரீசுவரர் ஆலயம் தான் வாசுகி வழிபாடு செய்த ஆலயம். இவ்வாலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலின் முன் ஆலயத்தின் பிரம தீர்த்தம் அமைந்துள்ளது. முகப்பு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் இடதுபுறம் தலமரம் வாகை மரம் உள்ளது. வெளிப் பிரகாரத்தில் குறிப்பிடும் படி வேறு சந்நிதிகள் ஏதுமில்லை. வெளவால் நெத்தி மண்டபத்தில் வலதுபுறம் அம்பாள் வண்டமர் பூங்குழலி சந்நிதி உள்ளது. உட்பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, சரஸ்வதி, நால்வர், பைரவர் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. நால்வர் சந்நியும் உள்ளது. இத்தலத்திலுள்ள நடராஜர் சபை தரிசிக்க வேண்டிய ஒன்று. இத்தலத்தில் கோஷ்டத்தில் எழுந்தருளியுள்ள துர்க்கையை விசேஷமாக வழிபடுகின்றனர். இங்கேயுள்ள துர்க்கை மிகவும் சாந்தமானவள். மகிஷாசுரமர்த்தினியாக அவதரித்த துர்க்கை மகிஷாசுரன் வதம் முடிந்ததும் இத்தலத்தில் தான் சாந்தமாக உருக்கொண்டாள் என்று கூறப்படுகிறது. மூலவர் மாணிக்கவண்ணர் சற்று உயரமான பாணத்துடன் லிங்க உருவில் காட்சி தருகிறார். அர்த்த மண்டப துழைவாயிலில் இடதுபுறம் நிருதி விநாயகரும் வலதுபுறம் வாசுகியும் உள்ளனர்.

வாகை மரம் இத்தலத்தின் தல விருட்சமாக விளங்குகிறது. துர்க்கை மகிஷாசுரனை அழித்து வெற்றி பெற்ற அடையாளமாக தல விருட்சமான "வாகை" போற்றி வணங்கப்படுகிறது. .இங்குள்ள வாகை மரத்தைச் சுற்றி வந்து வணங்கினால், குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Top
மாணிக்கவண்ணர் ஆலயம் புகைப்படங்கள்
ஆலயத்தின் முகப்பு வாயில்
ஆலயத்தின் உட்புறத் தோற்றம்
ஆலயத்தின் உட்புறத் தோற்றம்
விநாயகர், அஷ்டநாகர் சந்நிதி
வெளிப் பிரகாரம்
சுவாமி சந்நிதி விமானம்
கோஷ்டத்தில் துர்க்கை