கோவில் அமைப்பு: இவ்வாலயம் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு இராஜகோபுரத்துடனும் இரண்டு பிராகாரங்களுடனும் அமைந்துள்ளது. கோபுரம் கடந்து உள்ளே நுழைந்தால் சுந்தரர் வழக்கு நடந்த வழக்கு தீர்த்த மண்டபம் உள்ளது. அடுத்து செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமர விநாயகர், பலிபீடம் ஆகியவை உள்ளன. நேரே உயரத்தில், மேலே, சுந்தரருக்கு இறைவன் ரிஷபாரூடராகக் காட்சி தந்த விமானக் கோயில் உள்ளது. அதற்கு எதிரில் கீழே சுந்தரர் சந்நிதி உள்ளதையும் காணலாம். இவ்வுருவத்தில் சுந்தரர் கையில் ஓலையுடன் காட்சியளிக்கிறார். இத்தல மூலவர் சுயம்பு லிங்கமாக கிருபாபுரீஸ்வரர் என்ற பெயருடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அம்மன் மங்களாம்பிகை சந்நிதியும் கிழக்கு நோக்கியே உள்ளது. கோவிலின் தென்புறம் தண்டதீர்த்தம் உள்ளது. உட்பிராபாரத்தில் பொள்ளாப் பிள்ளையார், முருகன், சுந்தரர் சந்நிதிகள் உள்ளன.
கோஷ்ட மூர்த்தங்களாகப் பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், மகாவிஷ்ணு, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. வெளிச்சுற்றில் அறுபத்துமூவர் திருமேனிகளையடுத்து வரிசையாக சப்தமாதர்களும், சம்பந்தர், மகாவிஷ்ணு, அருணந்திசிவம், மெய்கண்டதேவர் திருமேனிகளும் உள்ளன. உட்புறத் தூண்களில் பைரவர், தட்சிணாமூர்த்தி சிற்பங்கள் உள்ளன.
இளைவன் நஞ்சுண்ட காலத்தில் அந்நஞ்சு அவரை துன்புறுத்தாமலிருக்க உமையம்மை இத்தலத்தில் பசு வெண்ணெயால் கோட்டை கட்டி அதில் பஞ்சாக்கினி வளர்த்து அதன் நடுவிலிருந்து தவம் செய்த காரணத்தால் இத்தலம் வெண்ணெய்நல்லூர் எனப் பெயர் பெற்றதெனத் தலபுராணம் கூறுகிறது.
இறைவன் சிவபெருமான் சுந்தரரை தடுத்தாட்கொண்ட சிறப்புடையது இத்தலம். இறைவன் முதிய வேதியராய் வந்து வழக்குரைத்து சுந்தரர் தனக்கு அடிமை என்று நிரூபித்து தன்னுடன் அழைத்துச் சென்று அவரை ஆட்கொண்டார். இறைவன் அடியெடுத்துத் தர சுந்தரர் பித்தா பிறைசூடி பெருமானே என்ற திருப்பதிகத்தை அருளிய தலம். ஆகையால் இறைவனுக்கு தடுத்து ஆட்கொண்ட நாதர் என்ற பெயரும் உண்டு. தலத்தின் பெயர் திருவெண்ணெய்நல்லூர் என்றும் கோவிலின் பெயர் அருட்டுறை என்றும் பதிகத்தில் குறிப்பிடப் பெறுகிறது. இறைவன் சுந்தரரை ஆட் கொள்ள வந்த போது அவர் அணிந்து வந்த காலணிகளை கோவிலின் வெளியில் விட்டு சென்றார். அந்த காலணிகளை மூலவர் அருகில் உள்ள கண்ணாடி கூண்டில் இன்றும் தரிசிக்க முடியும்.
சுந்தரர் வழக்கு தீர்த்த மண்டபம்

அருணகிரிநாதர் இத்தலத்தில் முருகப் பெருமான் மயில்மீது நடனம் புரிதலைக் கண் குளிரக் கண்டு திருப்புகழ் ஒன்றும் பாடியுள்ளார்.
சுந்தரர் பாடிய இத்தலப் பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இவர் பாடிய முதல் பதிகம் என்ற சிறப்பும் இப்பதிகத்திற்கு உண்டு.