கோவில் அமைப்பு : இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. வாயிலைக் கடந்தால் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். உள்வாயிலைத் தாண்டி மண்டபத்தையடைந்தால் இத்தலத்தின் இறைவன் சிஷ்டகுருநாதர் மேற்கு நோக்கிய சந்நிதியில் சுயம்பு லிங்கமாக அருட்காட்சி தருகிறார். அம்பாள் வடக்கு நோக்கிய சந்நிதியில் அருட்காட்சி தருகிறாள். இவ்வாறு வடக்கு நோக்கிய அம்பாள் சந்நிதி காண்பது மிகவும் அரிது. உட்பிரகாரத்தில் நர்த்தன கணபதி, பாலசுப்பிரமணியர், நடராஜர், நால்வர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டேச்வரர், வரதராஜப் பெருமாள் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன. இதில் தட்சிணாமூர்த்திக்குப் பக்கத்தில் உமா மகேஸ்வரர் சுந்தரருக்குத் தவநெறி தந்த காட்சி, சாட்சி விநாயகருடன் கல்லில் சிற்பமாக உள்ளது. அம்பாள் சந்நிதிக்கு எதிரில் தலமரம் கொன்றை உள்ளது. பக்கத்தில் உள்ளது அகத்தியர் வழிபட்ட இலிங்கம். இத்தலத்தின் தீர்த்தம் சூரியபுஷ்கரணி கோவிலுக்கு வெளியே உள்ளது. இத்தல இறைவனை சூரியன், பிரம்மா, விஷ்ணு, இராமர், சீதா, பீமன், அகத்தியர் நாரதர் ஆகியோர் வழிபட்டுள்ளனர்
கோவிலுக்கு வெளியில் உள்ள அஷ்டபுஜ பத்திரகாளி சந்நிதி மிகவும் விசேஷமான பிரார்த்தனை சந்நிதி. பௌர்ணமி விழா சிறப்பாக நடைபெறுகிறது. தேரடியிலுள்ள விநாயகர் மூன்றடி உயரமான மூர்த்தியாவார். கோயிலுக்கு நேர் எதிரில் அருணந்தி சிவாசாரியாரின் சமாதிக்கோயில் உள்ளது. இது திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்தது. ஆண்டுதோறும் புரட்டாசி பூரத்தில் குருபூஜை நடத்தப் பெறுகிறது. அருணந்தி சிவாசாரியாரின் மரபினரே இக்கோயிலில் பூசை செய்யும் குருக்கள் ஆவார்.
திருவெண்ணெய் நல்லூரில் இருந்து சுந்தரர் இத்தலத்திற்கு வந்தார். அப்போது தென்பெண்ணையாறு குறுக்கிடவே, கரையில் இருந்தே சிவனை வேண்டி பதிகம் பாடினார். அப்போது வயதான தம்பதியர் உருவில் வந்த சிவபெருமானும், பார்வதியும் சுந்தரரை படகில் ஏற்றிக்கொண்டு மறு கரைக்கு அழைத்து வந்தனர். கரையில் இறங்கிய பிறகு இறைவன் சுந்தரர் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து கொண்டார். சுந்தரர் சுற்றிலும் தேடிப்பார்த்தார். ஆனாலும் வயதான் தம்பதியைக் காணவில்லை. அப்போது "நீங்கள் தேடுபவர் மேலே இருக்கிறார்" என்று அசரீரி வாக்கு கேட்க, சுந்தரர் மேலே பார்த்தபோது சிவன், அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் காட்சி தந்தார். சுந்தரர் இறைவனை வணங்கி தனக்கு உபதேசம் செய்யும்படி கூறினார். சிவபெருமானும் சுந்தரருக்கு குருவாக இருந்து தவநெறி உபதேசம் செய்தார். எனவே தான் இறைவனுக்கு தவநெறி ஆளுடையார், சிஷ்டகுருநாதேஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது.
இத்தலத்திலுள்ள முருகப் பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்பகழில் பாடியுள்ளார். திருப்புகழில் ஒரு பாடல் உள்ளது. இத்தல முருகப் பெருமான் இரு தேவியருடன் கிழக்கு நோக்கியவாறு நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
இவ்வூருக்குக் அருகில் கீழப்பாக்கம் என்றொரு ஊர் உள்ளது. இஙுகு ஒரு சிவலிங்கமும் உள்ளது. இவ்விடத்தில் தான் இறைவன் முதியவர் உருவில் சுந்தரருக்கு காட்சி கொடுத்து அருள் புரிந்ததாகவும் பின்பு ரிஷபாரூடராக ஆலய விமானத்தில் காட்சி கொடுத்ததாகவும் தல புராணம் தெரிவிக்கிறது.
சுந்தரர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. சுந்தரர் தனது பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் உன்பால் அடியேன் தவ நெறியையே வேண்டிக் கொள்வேன், வேறொன்றையும் வேண்டேன் என்று மனமுருகிப் பாடியுள்ளார். திருத்துறையூரில் உள்ள இறைவன் மீது சுந்தரர் பாடியனவாகிய இப்பதிகத்திலுள்ள பாடல்களை நன்கு பாடவல்லவர் தவநெறியைத் தப்பாது பெறுவர் என்று சுந்தரர் குறிப்பிடுகிறார். பெண்ணையாற்றின் சிறப்பைப் பற்றியும் ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிடுகிறார்