Shiva Temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


பஞ்சநாதீஸ்வரர் திருக்கோவில், வடுகூர்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்வடுகூர் (திருவாண்டார் கோவில் என்று தற்போது வழங்குகிறது)
இறைவன் பெயர்பஞ்சநாதீஸ்வரர், வடுகூர்நாதர், வடுகீஸ்வரர்
இறைவி பெயர்திரிபுரசுந்தரி, வடுவகிர்க்கன்னி அம்மை
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது விழுப்புரம் - பாண்டிச்சேரி சாலையில் விழுப்புரத்தில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் வடுகூர் சிவஸ்தலம் உள்ளது. அருகில் உள்ள நகரங்கள் விழுப்புரம் மற்றும் பாண்டிச்சேரி. விழுப்புரத்திலிருந்து கோலியனூர், கண்டமங்கலம் வழியாக பாண்டிச்சேரி செல்லும் தேசீய நெடுஞ்சாலையில் (NH45A) புதுவை மாநில எல்லைக்குள் நுழைந்து, திருபுவனை என்ற ஊரைக் கடந்து சிறிது தூரம் சென்றால் சாலையோரத்திலுள்ள சற்று உட்புறமாக உள்ள திருவாண்டார் கோயிலை அடையலாம்.
ஆலய முகவரிஅருள்மிகு
பஞ்சநாதீஸ்வரர் திருக்கோவில்
திருவாண்டார் கோவில் அஞ்சல்
வழி கண்டமங்கலம்
புதுச்சேரி மாநிலம்
PIN - 605102


படிக்கும் நேரம் - நிமிடங்கள்

இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இவ்வாலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. அழகிய சுற்றுமதில்களுடன் கிழக்கு நோக்கிய ஒரு நுழைவாயில் மட்டுமே உள்ளது. நுழைவாயிலுக்கு வெளியே நந்தி ஒன்று காணப்படுகிறது. முகப்பு வாயிலைக் கடந்ததும் உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம், நந்தி மற்றும் 18 கால் மண்டபம் உள்ளது. இங்கு தெற்கு நோக்கியவாறு இறைவி வடுவகிர்க்கன்னி அம்மை சந்நிதி உள்ளது. அம்பாள் 4 கரங்களுடன் எழிலாகக் காட்சி தருகிறாள். இந்த மண்டபத்தைக் கடந்தவுடன் அர்த்த மண்டபம் உள்ளது. அர்த்த மண்டபத்தின் நுழைவாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் உருவம் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக காணப்படுகிறது. அர்த்த மண்டபத்தை அடுத்து மூலவர் பஞ்சநாதீஸ்வரர் கருவறை இருக்கிறது. மூலவர் ஒரு சுயம்பு லிங்கம். வெளிப் பிரகாரத்தில் தென் திசையில் தனி விமானத்துடன் உள்ள நால்வர் சந்நிதி, கன்னி மூலையில் விநாயகர் சந்நிதி, நிருதி மூலையில் வள்ளி தெய்வானையுடன் கூடிய ஆறுமுகன் சந்நிதி ஆகியவை இருக்கின்றன.

திருப்புகழ் தலம்: இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறு திருமுகங்களுடனும் 12 திருக்கரங்களுடனும் மயில் மீது அமர்ந்த கோலத்தில் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார்.



அர்த்த மண்டபத்தையும், கருவறையையும் உள்ளடக்கிய சுவர்களின் வெளிப்பிரகாரத்தில் கல்வெட்டுக்கள் பல காணப்படுகின்றன. மேலும் தெற்கு நோக்கிய பிச்சாடனர், தட்சினாமூர்த்தி, மேற்கு நோக்கிய லிங்கோத்பவர், வடக்கு நோக்கிய துர்க்கை, அர்த்தநாரீசுவரர் ஆகியோரின் உருவங்கள் உள்ளன. இக்கோவிலின் கருவறை விமானம் தஞ்சை பெரிய கோவில் பாணியில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள கல்வெட்டுகள் மூலம் இத்தலம் முதலாம் பராந்தக சோழன் காலத்தைச் சேர்ந்தது என்று அறியப்படுகிறது. மேலும் முதலாம் ராஜராஜ சோழன், முதலாம் ராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்க சோழன் ஆகியோர் கலத்து கல்வெட்டுகளும் கணப்படுகின்றன.

வெளிப் பிராகாரம் சுற்றி வரும்போது மேற்குப்புற மதில் சுவற்றில் ஆமை, மீன் ஆகியவற்றின் ஒரு புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. இது பற்றிய விபரம் தெரியவில்லை.


ஆமை, மீன் புடைப்புச் சிற்பம்

தல வரலாறு: முண்டாசுரன் என்பவன் சிவனை நோக்கி கடுந்தவம் செய்து அவரிடமிருந்து தேவாசுரர்களாலும், பிறரால் சாகாமலும் இருக்க வரங்கள் பெற்றான். வரங்கள் பெற்ற முண்டாசுரன் தேவர்கள், பிரம்மா ஆகியோருடன் போர் புரிந்து வெற்றி பெற்றான். பிரம்மா முதலியோர் சிவனிடம் சரனடைந்தனர். சிவனின் ஆணைப்படி வடுகபைரவர் தோன்றி முண்டாசுரனை வதம் செய்கிறார். ஆகையால் இத்தலத்தில் சிவபெருமான் வடுகநாதர் என்றும், வடுகபைரவர் அசுரனைக் கொன்ற கொலைப்பழி தீர தவம் செய்து பேறு பெற்றதால் இத்தலம் வடுகூர் என்றும் பெயர் பெற்றது. ஆண்டார் கோயில் என்பது கோயிலுக்குப் பெயர். கோயிலின் பெயரே பிற்காலத்தில் ஊருக்குப் பெயராயிற்று. ஆண்டார் கோயில் என்பது இன்று வழக்கில் திருவாண்டார் கோயில் என்றாயிற்று. பார்க்க - கொடுங்குன்றநாதர் கோவில், கொடுங்குன்றம்

ஆலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும். நாள் தோறும் இருகால வழிபாடுகள் நடைபெறுகின்றன. கார்த்திகை அஷ்டமியில் பைரவருக்கு இங்கு விசேஷமான பூஜைகள் நடைபெறுகின்றன. இது தவிர, ஞாயிறு தோறும் அன்பர்களின் உபயமாகப் பைரவருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. சித்திரைப் பெருவிழா ஏக தின உற்சவமாக நடைபெறுகிறது.

சம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.


திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்து பதிகம்

  1. சுடுகூ ரெரிமாலை யணிவர்

அருணகிரிநாதர் அருளிய இத்தலத்து திருப்புகழ்

  1. அரியய னறியா தவரெரி
பஞ்சநாதீஸ்வரர் ஆலயம்
புகைப்படங்கள்

ஆலயத்தின் வெளிப்புறத் தோற்றம்
ஆலயத்தின் நுழைவாயில்
கிழக்கு வெளிப் பிரகாரத்தில் பலிபீடம், நந்தி
ஆலயத்தின் உள்ளே
பிட்சாண்டவர் சிற்பம்
இறைவன் கருவறை விமானம்
நவக்கிரக சந்நிதி
நால்வர் சந்நிதி