பஞ்ச புலியூர்த்தலங்களில் திருஎருக்கத்தம்புலியூர் தலமும் ஒன்றாகும். மற்ற 4 தலங்கள்: 1)திருப்பாதிரிப்புலியூர், 2) பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்), 3) திருப்பெரும்புலியூர்4) ஓமாம்புலியூர். புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர், தன் தந்தை மாத்தியந்தினரிடம் தில்லை நடராஜரின் பெருமையை கேட்டறிந்து, அங்கு வந்து திருமூலநாதரை வழிபட்டு வந்தார். அன்று மலர்ந்த பூக்களைப் பறித்து வந்து இறைவனுக்கு அர்ச்சிப்பது இவரது வழக்கம். பொழுது புலர்ந்தால் வண்டுகள் மலர்களிலுள்ள மகரந்தத்தை உண்பதால் பூக்களின் தூய்மை போய்விடுகிறது என்று நினைத்த அவர், முன் இரவிலேயே மரங்களில் ஏறி பூ பறிக்க புலிக்கால்களையும், அம்மலர்களை ஆராய்ந்து பார்த்து பறிக்க புலியின் கண்களையும் பெற்றார். அதனால் இவருக்கு வியாக்ரபாதர் (வடமொழியில் வியாக்ரம் என்றால் புலி) என்று பெயர் வந்தது. தமிழில் புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்பட்டார். இந்த வீயாகரபாதர் வழிபட்ட தலங்களில் திருஎருக்கத்தம்புலியூர் தலமும் ஒன்றாகும். எருக்கினைத் தல விருட்சமாக உடைய புலியூராதலின் திருஎருக்கத்தம்புலியூர் என்று பெயர் பெற்றது.
ராஜராஜசோழ மன்னனுக்கு புத்திர பாக்கியத்தையும், அவனுடைய மகன் ராஜேந்தர சோழனுக்கு திருமண வரத்தையும் தந்தருளிய தலம் என்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு. இராஜேந்த சோழ மன்னன் இவ்வாலயத்திற்கு ஏராளமான திருப்பணிகள் செய்திருக்கிறான். ஆதலால் இத்தலத்திற்கு இராஜேந்தப் பட்டிணம் என்று இவ்வூர் மக்கள் பெயர் சூட்டியதாக வரலாறு.
இவ்வாலயத்தின் ராஜகோபுரம் 5 நிலைகளையுடையது. கோபுர வாயில் கடந்து உள்ளே சென்றால் பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் உள்ளன. வலதுபுறம் சிறிய விநாயகர் சந்நிதி உள்ளது. வெளிச்சுற்றில் இடதுபுறத்தில் நவக்கிரகமும் நால்வரும் உள்ளனர். 63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட யாழ்ப்பாணருடைய அவதாரத்தலம் திருஎருக்கத்தம்புலியூர். இவரது திருவுருவம் மதங்க சூளாமணியாருடன் கூடியுள்ளது. மகாகணபதி, விசுவநாதர் விசாலாட்சி, முருகர், இலக்குமி ஆகிய சந்நிதிகளை வணங்கி உட்சென்றால் இறைவன் திருநீலகண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது. கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். மார்ச் மாதம் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரையிலும் சூரியஒளி மூலவர் மீது படுவது இவ்வாலயத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று. கருவறைச் சுற்றில் வள்ளி, தெய்வானை சமேத முருகர் சந்நிதி உள்ளது.
தலப்பெருமை: கைலாயத்தில் சிவன் வேதங்களின் உட்பொருளை பார்வதிக்கு உபதேசித்துக் கொண்டிருக்கும் போது பார்வதியின் கவனம் சிதறியது. அதனால் அவளை பரதவர் குலத்தில் மீனவப் பெண்ணாகப் பிறக்குமாறு இறைவன் சபித்தார். இதனால் கோபமடைந்த முருகன், தன் தாயை சிவபெருமான் சபிப்பதற்கு காரணமாக இருந்த வேதாகம நூல்களை கடலில் வீசி எறிந்தார். முருகனின் இச்செயலுக்காக இறைவன் அவரை மதுரையில் தனபதி என்பவரின் மகனாக உருத்திரசர்மர் என்ற பெயரில் ஊமைப்பிள்ளையாக பிறக்கும்படி சபித்தார். உரிய வயது வந்த போது பல சிவத்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தார். கடைசியாக எருக்கத்தம்புலியூர் வந்து சிவலிங்கம் அமைத்து வழிபட்டு பேசும் திறன் பெற்றார். குமரன் வழிபட்டதால் சிவன் திருக்குமாரசாமி என்ற் பெயரிலும் இத்தலத்தில் விளங்குகிறார். உருத்திரசன்மரின் உருவம் இக்கோவிலில் உள்ளது. அறிவில் சிறந்த முருகப்பெருமானுக்கு ஊமைத்தன்மை நீங்கியது போல், திறமையிருந்தும் பயம், கோபம் முதலியவற்றால் பேசத் தெரியாதவர்கள் இங்கு வந்து பூஜை செய்து நிவாரணம் பெறலாம்.
இத்தலத்தின் பெருமையை கேட்ட தேவர்களும், முனிவர்களும் இங்கு வந்து பறவையாகவும், மரங்களாகவும் மாறி ஈசனை வழிபட்டு வந்தனர். அங்கே வந்த வேடர்கள் பறவைகளை கொல்லவும், மரங்களை வெட்டவும் முயன்றனர். தேவர்களும், முனிவர்களும் இறைவனிடம் முறையிட, அவர்களை யாருக்கும் பயன்படாத வெள்ளெருக்கு மரங்களாக மாறி வழிபடும்படி கூறி மறைந்தார். அவ்வாறே அவர்கள் யாருக்கும் பயன்படாத வெள்ளெருக்கு மரங்களாக மாறி, இத்தலத்தில் இறைவனை வழிபட்டனர். அத்தம் என்பது காடு, எனவே எருக்கத்தம் என்பது எருக்கங்காடாகும். எருக்கஞ் செடிகள் நெருக்கமாக நிறைந்திருந்த காட்டில் எழுந்த ஊர் எருக்கத்தம்புலியூர் என்று அழைக்கப் பெற்றது. சிவபெருமானுக்கு இனிய வெள்ளெருக்கு இன்னும் அவ்வூர்க் கோவிலின் மூலஸ்தானத்தருகே தல விருட்சமாக விளங்குகின்றது.