கோயில் அமைப்பு: இவ்வாலயத்தின் இராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கி விளங்குகிறது. கோபுர வாயில் வழி உள் நுழைந்தால் நேரே கவசமிட்ட கொடிமரம். நந்தி, பலிபீடம் ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் அம்பாள் சந்நிதி உள்ளது. மேலும் இந்த பிராகாரத்தில் நால்வர், விநாயகர், சுப்பிரமணியர், வீரசேன மன்னன் ஆகியோரின் சந்நிதிகளும், தலமரமாகிய கொன்றையும், பைரவர், சூரியன் திருமேனிகளும் உள்ளன. பிரகார வலம் முடித்து, தெற்கிலுள்ள பக்கவாயில் வழியாக உள்ளே சென்றால் நேரே நடராச சபை உள்ளது. நடராச மூர்த்தியின் கீழே பீடத்தில் மகாவிஷ்ணு, சங்கை வாயில் வைத்து ஊதுவது போலவும், பிரம்மா பஞ்சமுக வாத்யம் வாசிப்பது போலவும், சிறிய மூர்த்தங்கள் உள்ளன. திருமால், பிரம்மா இருவரது இசைக்கேற்ப சிவன் நடனமாடும் இக்காட்சியை காண்பது மிகவும் அபூர்வம். இந்த தரிசனம் விசேஷ பலன்களை தரக்கூடியது. நடனம், இசை பயில்பவர்கள் இச்சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்து வேண்டிக்கொள்கின்றனர். இதனால், கலைகளில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை. உள் மண்டபத்தில் இடதுபுறம் நோக்கினால் மூலவர் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இறைவன் மீது பங்குனி மாதம் 20, 21, 22 ஆகிய மூன்று நாட்களில் சூரியன் ஒளி விழுகிறது. கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோரைக் காணலாம். லிங்கோத்பவருக்கு இருபுறமும் பிரம்மா, விஷ்ணு நின்று தரிசிக்கும் இறைவனை தரிசிக்கும் கோலத்தில் காணப்படுகின்றனர். சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது.
தல வரலாறு: முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த ஒரு விவசாய தம்பதியினரான பெரியான் என்னும் பள்ளனும் அவன் மனைவியும் சிவன் மீது அதிக பக்தியுடன் இருந்தனர். தினமும் ஒரு சிவபக்தருக்கு உணவளித்து விட்டு அதன்பின்பு உண்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஒரு சமயம் சிவன் அவர்களது பக்தியை சோதிக்க எண்ணி, எந்த சிவபக்தரையும் அவர் வீட்டுப்பக்கம் செல்லாதபடி செய்தார். எனவே, விவசாயி தோட்டத்தில் உள்ள பணியாளர்களுக்கு உணவு கொடுக்கலாம் என்று நினைத்து, தன் மனைவியுடன் தோட்டத்திற்கு சென்றான். ஆனால் அங்கும் பணியாளர்கள் யாரும் இல்லை. எனவே அவர்கள் நீண்ட நேரம் அங்கேயே காத்திருந்தனர். அப்போது இறைவன் அடியவராக வந்து அன்னம் கேட்க, விவசாயி வீட்டிற்குச் சென்று உணவு எடுத்து வருவதாகக் கூறினான். அடியவராக வந்து இறைவன் அவனிடம் "நான் உழைக்காமல் எதுவும் சாப்பிட மாட்டேன். எனவே, உன் தோட்டத்தில் எனக்கு ஏதாவது வேலை கொடு! அதற்கு கூலியாக வேண்டுமானால் சாப்பிடுகிறேன்" என்றார். விவசாயியும் ஒத்துக்கொண்டு, தன் தோட்டத்தை உழும்படி கூறினான். இறைவன் வயலில் இறங்கி உழுதார். தம்பதியர் இருவரும் வீட்டிற்கு சென்று, உணவை எடுத்துக்கொண்டு திரும்பினர். அப்போது, தோட்டத்தில் அன்று விதைக்கப்பட்டிருந்த திணைப் பயிர்கள் அனைத்தும் நன்கு விளைந்து, கதிர்கள் முற்றி, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. ஆச்சர்யமடைந்த விவசாயி சந்தேகத்துடனே அடியவருக்கு அருகிலிருந்த கொன்றை மரத்தின் அடியில் அன்னமிட்டான். அடியவர் சாப்பிட்ட பின்பு, அவரிடம் ஒரே நாளில் திணைப்பயிர் விளைந்தது எப்படி? என தன் சந்தேகத்தை கேட்டான். அடியவராக வந்த முதியவர் மறைந்து, சிவபெருமானாக அவனுக்கு காட்சி தந்து, தானே அடியவராக வந்ததை உணர்த்தினார். சிவதரிசனம் கண்டு மகிழ்ந்த விவசாயி இறைவனை அங்கேயே எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டான். இறைவனும் சுயம்பு லிங்கமாக அவ்விடத்தில் எழுந்தருளினார். அதிசயமாக ஒரே நாளில் தினை விளைந்ததால் இத்தலம் தினைநகர் என்று பெயர் பெற்றது.
சுந்தரர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் ஏழாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. தலத்தின் பெயர் மற்றும் இறைவன் பெயரை இவ்வூர்ப் பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் சுந்தரமூர்த்தி நாயனார் எடுத்து ஆண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.