கோவில் அமைப்பு: வெள்ளாறு மற்றும் மணிமுத்தாறு ஆகிய இரண்டு நதிகள் கூடும் இடத்தில் அமைந்த தலம். ஆதலால் திருக்கூடலையாற்றூர் எனப் பெயர் பெற்றது. இத்தலத்தை தட்சிணப் பிரயாகை என்று கூறுவர். இவ்வாலயத்தின் பழமையான ராஜகோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நந்திதேவர் மட்டும் காணப்படுகிறார். கொடிமரம் பலிபீடம் இல்லை. வெளிச் சுற்றில் பக்கவாயில் உள்ளது. அமுத விநாயகர், விசுவநாத லிங்கம், ஆறுமுகர், ஞானசக்தி, அம்பாள் முதலிய சந்நிதிகள் உள்ளன. அம்பாள் நின்ற திருக்கோலம். மூலவர் விமானம் இரு தள அமைப்புடையது. படிகளேறி மேலே சென்றால் அழகிய மண்டபம் உள்ளது. துவார கணபதியை வணங்கி உட்சென்றால் மூலவரைத் தரிசிக்கலாம். கம்பீரமான சுயம்பு சிவலிங்கத் திருமேனி. கோஷ்டமூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, அஷ்டபுஜ துர்க்கை முதலியவைகள் உள்ளன. சண்டேசுவரர் சந்நிதி எதிரில் உள்ளது. சுவாமிக்கு வலதுபுறம் பராசக்தி அம்பாள் சந்நிதி உள்ளது. இதுவும் நின்ற திருக்கோலமே. நடராச சபையில் சிவகாமி மூர்த்தமும் உள்ளது. சித்திரை மாதம் முதல் மூன்று தேதியில் மூலவரின் மீது சூரிய ஒளிபட்டு சூரியபூஜை நடக்கிறது.
எமதர்மராஜாவின் உதவியாளரான சித்திரகுப்தருக்கு சந்நிதி இருப்பது ஒரு சில கோயில்களில் மட்டுமே. அந்த சிறப்பையும் இக்கோயில் பெற்றுள்ளது. இங்குள்ள சித்ரகுப்தர் உற்சவ மூர்த்தியாக ஒரு கையில் எழுத்தாணியும், மறு கையில் ஏடும் கொண்டு காட்சி தருகிறார். இக்கோயிலில் நவக்கிரக சந்நிதியில்லை. மூலவரைத் தரிசித்து விட்டு வரும்போது வலதுபுறம் சனிபகவான் சந்நிதி மட்டும் உள்ளது. பொதுவாக சிவன் கோயில்களில் சிவனுடன் ஒரு அம்மன் சந்நிதி இருப்பது வழக்கம். ஆனால் திருக்கூடலையாற்றூரில் உள்ள நர்த்தன வல்லபேஸ்வரர் கோயிலில் இரண்டு அம்மன் சந்நிதிகள் உள்ளன. ஞானசக்தி, பராசக்தி என்ற பெயர்களில் இரண்டு அம்மன் அருள்பாலிக்கிறாள். ஞானசக்தி சந்நிதியில் குங்குமமும், பராசக்தி சந்நிதியில் விபூதியும் பிரசாதமாக தரப்படுகிறது. இவர்களை வழிபடுவதன் மூலம் கல்வி அறிவு விருத்தியாகும். ஆற்றல் பெருகும் என்பது நம்பிக்கை.
தலப்பெருமை: மகரிஷி அகத்தியர் இத்தலத்தில் தான் கற்ற வித்தைகள் மறக்காமல் இருக்க இறைவனை பிரார்த்தித்தார். எனவே, இங்கு குழந்தைகளை அழைத்து வந்து, படித்த பாடங்கள், கற்ற கலைகள் மறக்காமல் இருக்க இறைவனை வேண்டிக் கொள்கின்றனர். மேலும் பிரம்மாவும் சரஸ்வதியும் விஜயம் செய்த தலம் இது. எனவே கல்விக்கு தொடர்பான பிரார்த்தனைகளைச் செய்ய ஏற்ற தலமாக இதைக் கருதுகின்றனர். சிதம்பரத்தில் வியாக்ரபாத முனிவருக்கும், பதஞ்சலி முனிவருக்கும் தனது நடனக் காட்சியை காட்டி அருளினார் சிவபெருமான். அந்த நடனக் காட்சியைத் தானும் காண விரும்பி பிரம்மா இத்தலத்தில் இறைவனை வழிபட்டு வேண்டினார். அவர் வேண்டுதலை ஏற்று பிரம்மாவிற்கும் சரஸ்வதிக்கும் நர்த்தனம் ஆடி அருள் செய்தார். எனவேதான் இத்தல இறைவன் நர்த்தன வல்லபேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
திருப்புகழ் தலம்: இத்தலத்திலுள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் ஒரு பாடல் உள்ளது. இங்கு முருகர் பன்னிரு திருக்கரங்களுடன் தனது இரு தேவியர் வள்ளி, தெய்வானையுடன் மயில் மீது கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.