தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | திருச்சிராப்பள்ளி |
இறைவன் பெயர் | தாயுமானவர், மாத்ருபூதேஸ்வரர், செவ்வந்திநாதர் |
இறைவி பெயர் | சுகந்த குந்தளாம்பிகை, மட்டுவார் குழலியம்மை |
பதிகம் | திருநாவுக்கரசர் - 1 திருஞானசம்பந்தர் - 1 |
எப்படிப் போவது | திருச்சி நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை என்று சொல்லும் ஒரு குன்றின் மேல் அமைந்திருக்கிறது. திருச்சி தமிழ்நாட்டில் உள்ள ஒரு முக்கிய நகரம். தமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களில் இருந்தும் திருச்சிக்கு ரயில் மற்றும் சாலை போக்குவரத்து வசதிகள் உண்டு. |
ஆலய முகவரி |
அருள்மிகு தாயுமானவசுவாமி திருக்கோயில் மலைக்கோட்டை திருச்சி திருச்சி மாவட்டம் PIN - 620002 இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
நிருச்சி நகரை எந்த திசையிலிருந்து நெருங்கும் போதும் கம்பீரமாக காட்சி தரும் மலைக்கோட்டையில் அமைந்துள்ள கோவில் தான் தாயுமானவர் கோவில். மலைக்கோட்டை என்று சொல்லப்படும் ஒரு குன்றின் மேல் 273 அடி உயரத்திலும், 417 படிகளும் கொண்டு அமைந்திருக்கும் இந்த ஆலயம் தென் கயிலாயம் என்று போற்றப்படுகிறது. திரிசரன் என்ற அரக்கன் இங்கே ஆட்சி புரிந்து இறைவனைப் பூசித்து பேறு பெற்றான். அதனால் இத்தலம் திரிசிரபுரம் என்றும் பெயர் பெற்றது. தென் கயிலாயம் என்று பெயர் வரக் காரணமும் சுவையானது. ஒருமுறை கைலாயத்தில் சிவபெருமானை வணங்க வந்தவர்களுள் ஆதிசேஷனும் வாயுபகவானும் இருந்தனர். ஆதிசேஷன் வருகையைப் பலரும் புகழ்ந்து கொண்டாடியதைக் கண்டு வாயுவுக்குப் பொறாமை ஏற்பட்டது. வாயு ஆதிசேஷனை எதிர்க்க, இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் ஆதிசேஷன் கைலாய மலையைத் தன் உடலால் இறுக்க, அதைத் தகர்ப்பதற்காக வாயுதேவன் பலத்த காற்றை வீச கைலாயம் அதிர்ந்தது. அதிலிருந்து மூன்று துண்டுகள் புறப்பட்டு திருக்காளத்தி, திருச்சி, இலங்கையில் உள்ள திரிகோணம் எனும் மூன்று இடங்களில் வீழ்ந்தன. இப்படித்தான் திருசிரமலை தென் கயிலாயம் என்ற பெயர் பெற்றது.
இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்குப் பார்த்த நிலையில் ஒரு பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். மலையில் உள்ள பாறைகள் மீது மூன்று அடுக்குகளாக கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம் பழங்கால கட்டிடக் கலைக்கு ஒரு எடுத்துக் காட்டாக விளங்குகிறது. முதல் தளத்தில் இறைவி மட்டுவார் குழலம்மை சந்நிதியும், இரண்டாம் தளத்தில் இறைவன் தாயுமானசுவாமியின் சந்நிதியும் அமைந்துள்ளன. இறைவன், இறைவி இருவர் சந்நிதியும் மேற்குப் பார்த்தவாறு அமைந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய சிவலிங்கத் திருமேனிகளில் தாயுமானவர் லிங்கத் திருமேனியும் ஒன்றாகும். லிங்கத் திருமேனி சுமார் 5 அடி உயரம் உள்ளது. கி.பி. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகேந்திரவர்மனால் குடையப் பெற்ற இரண்டு குடவரைக் கோவில்கள் இங்கு உள்ளது. மலையின் உச்சியில் உச்சிப் பிள்ளையார் கோவில் இருக்கிறது.
தல வரலாறு: இரத்தினாவதி என்ற பெண்ணிற்கு அவள் தாய் வடிவில் வந்து இறைவனே சுகப் பிரசவம் செய்வித்து அருளிய தலம் இதுவாகும். இத்தலத்தில் வசித்து வந்த இரத்தினாவதி என்ற பெண் ஒரு சிவபக்தை. அவளின் பிரசவ காலத்தில் அவளுக்கு உதவி செய்ய அவள் தாயார் வெளியூரில் இருந்து வந்த போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. காவிரி நதியின் அக்கரையில் இருந்த இரத்தினாவதியின் தாயாரால் இக்கரை வரமுடியவில்லை.இங்கு இரத்தினாவதிக்கு பிரசவ நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. தனது பக்தையின் துயரம் கண்டு இறைவன் அவளது தாய் உருவில் வந்து இரத்தினாவதிக்கு சுகப்பிரசவம் ஆக அருள் செய்தார். இதனாலேயே இறைவன் தாயுமானசுவாமி என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளார். குழந்தைப் பேறு, சுகப்பிரசவம் ஆக இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொள்ளும் தலமாக இந்த சிவஸ்தலம் விளங்குகிறது. கர்ப்பமுற்ற பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்காக தாயுமானவர் சந்நிதியில் வாழைத்தார் வாங்கிக் கட்டுவதாக வேண்டிக் கொள்வார்கள். பிரசவம் ஆன பிறகு தாயுமானவர் சந்ந்தியில் வாழைத்தாரைக் கட்டி அதை அர்ச்சகர் சற்று நேரம் ஊஞ்சல் போல ஆடவிட்டு பிறகு அங்கு வரும் பக்தர்களுக்கு வாழைப்பழங்களை பிரசாதமாக விநியோகிப்பார்கள்.
மூலவர் கருவறை தெற்குச் சுற்றில் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி எட்டு முனிவர்களுடன் தர்ப்பாசனத்தில் அமர்ந்து அருள் பாவிப்பது மற்ற தலங்களில் இல்லாத சிறப்பாகும். இவரை வழிபட்டால் கல்வியும், ஞானமும் கிட்டும். இத்தலத்தில் நவக்கிரகங்கள் அனைத்தும் சூரிய பகவானைப் பார்த்தவாறு எழுந்தருளியுள்ளதால் இங்கு வந்து வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும். பங்குனி மாதம் 23, 24, 25 ஆகிய நாட்களில் சூரியனின் கிரணங்கள் சிவலிங்கத் திருமேனி மீது படுவது இத்தலத்தின் மற்றொரு சிறப்பாகும். மேலும் சிவபெருமானின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான கங்காள மூரத்தம் இத்தலத்தில் உள்ளது. மலையில் பல்லவர் காலத்திய இரண்டு குகைகள் உள்ளன.
இத்தலத்தில் முருகப் பெருமான் குத்துக்குமாரசாமியாக பன்னிரு திருக்கரங்களும், ஆறு திருமுகமும் கொண்டு மயில் மீதமர்ந்து கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். வள்ளி, தெய்வசேனா தேவியர் இருபுறமும் விளங்குகின்றனர். மற்றொரு சந்நிதியில் முருகப் பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு தனது இரு தேவியருடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். இத்தலத்து முருகர் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றவராவார். திருப்புகழில் 16 பாடல்கள் உள்ளன.
அகத்தியர், அனுமன், அர்ச்சுனன், ராமர், இந்திரன், சப்தரிஷிகள், பிரம்மா, ஜடாயு ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர்.
இங்குள்ள தீர்த்தம் சிவதீர்த்தம். இது கோயிலுள் உள்ளது. திருப்பராய்த்துறையில் இருந்து வாழ்ந்து வந்த அன்பரொருவர் திருநீற்றைப் பெற்று வாயால் ஊதிய பாவத்திற்காகக் காட்டுப் பன்றியாய்ப் பிறந்தார். பல்காலம் அலைந்து திரிந்து கடைசியில் வில்வவனமாகிய இத்தலத்தை அடைந்து அதை அழிக்கத் தொடங்கியபோது வேடர்கள் அதுகண்டு துரத்தினர். அப்போது அப்பன்றி ஓடமாட்டாது இங்குள்ள சிவதீர்த்தத்தில் வீழ்ந்தது. இத் தீர்த்தத்தில் வீழ்ந்தமையால் அப் பன்றி பேறு பெற்று உய்ந்தது. அத்தகைய உயர்ந்த தீர்த்தம் இத் தீர்த்தமாகும்.
இச்சிறப்பினை விளக்கும் சிற்பம், இத் திருக்குளத்தில் இறங்கும் போது வலப்புறத்தில் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.
திருநாவுக்கரசர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. தலப்பெயரைச் சொன்னாலே தீவினை நீங்கிவிடும் என்று அப்பர் தன்னுடைய பதிகத்தில் குறிப்பிடுகிறார்.
Top