Shiva Temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


உஜ்ஜீவனேஸ்வரர் திருக்கோவில், கற்குடி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்கற்குடி (தற்போது உய்யக் கொண்டான் மலை என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்உஜ்ஜீவனேஸ்வரர், உஜ்ஜீவ நாதர்
இறைவி பெயர்அஞ்சனாட்சி, பாலாம்பிகை
பதிகம்திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 1
சுந்தரர் - 1
எப்படிப் போவது திருச்சியில் இருந்து தென்மேற்கே 5 கி.மீ. தொலைவில் ஒரு சிறிய குன்றின் மேல் இத்தலம் அமைந்திருக்கிறது.
அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்1. திருப்பராய்த்துறை - 16 கிமி -
2. திருமூக்கிச்சரம் (உறையூர்) - 4.5 கிமி -
3. திருச்சிராப்பள்ளி - 7 கிமி -
4. திருவெறும்பூர் - 14 கிமி -
ஆலய முகவரி அருள்மிகு உஜ்ஜீவநாதசுவாமி திருக்கோயில்
உய்யக்கொண்டான் மலை
உய்யக்கொண்டான் மலை அஞ்சல்
(வழி) சோமரசம்பேட்டை. S.O.
திருச்சி மாவட்டம்
PIN - 620102

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஆலய தொடர்புக்கு: உஜ்ஜீவனேஸ்வரர் திருக்கோவில் தேவஸ்தானம், தொலைபேசி: 0431 2702472, கைபேசி: 94436 50493

நீண்ட ஆயுள் பெற மற்றும் எம பயம் போக்கும் உஜ்ஜீவநாதர் கோவில், கற்குடி.

மேலும் படிக்க.....

படிக்கும் நேரம் - நிமிடங்கள்

தேவாரப் பாடல் பெற்ற காலத்தில் கற்குடி என்றும், தற்போது உய்யக்கொண்டான் மலை என்றும் வழங்கும் சிவஸ்தலம் 50 அடி உயரமுள்ள ஒரு சிறிய குன்றின் மீது அமைந்திருக்கிறது. குன்றின் அடிவாரத்தில் முருகப் பெருமானின் சந்நிதி உள்ளது. கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுர வாழில் வழியே உள்ளே நுழைந்தால் இடதுபுறம் ஞானவாவி தீர்த்தம் உள்ளது. இத்தீர்த்தத்திற்கு எதிரே ஒரு முகப்பு வாயிலுடன் குன்றின் மேலே ஏற படிகள் தொடங்குகின்றன. குன்றின் பாறைகளில் நன்கு அமைந்துள்ள சுமார் 65 படிகள் ஏறி ஆலயத்தை அடையலாம். படிகள் செல்லும்போது இடதுபுறம் விநாயகர் உள்ளார். குன்றின் மீது ஒரு 3 நிலை கோபுரம், 5 பிராகாரங்களுடன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோபுரம் வழியே உள்ளே நுழைந்தவுடன் எதிரே கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம். குன்றின் மீது சுற்றிலும் உயர்ந்த மதிற்சுவருடன் கூடிய ஆலயம் அழகுற அமைந்திருக்கிறது. கொடிமரம் முன்பு மார்க்கண்டனைக் காப்பதற்காக, எமனைத் தடுப்பதற்காகக் கருவறை விட்டு நீங்கி வந்து நின்ற சுவாமியின் பாதம் உள்ளது. படிகளேறி உட்சென்றால் முதலில் அஞ்சனாட்சி அம்பாள் சந்நிதி உள்ளது. மேற்கு நோக்கிய சந்நிதியில் காட்சி தரும் இவள் பழைய அம்பாள். இத்திருமேனியின் திருக்கரத்திலுள்ள பூவின் இதழ் உடைந்து போய் உள்ளது. எனினும் அம்பாள் கனவில் வந்து உணர்த்தியவாறு இப்பழைய அம்பாளை அப்புறப்படுத்தாது அப்படியே வைத்துள்ளனர். இதனால் புதிய அம்பாள் பாலாம்பிகை பிரதிஷ்டை செய்துள்ளனர். புதிய அம்பாள் பாலாம்பிகை சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இரு அம்பாளுக்கும் நித்திய பூசை நடைபெற்று வருகின்றது. அம்பிகை சந்நிதிக்கு அருகில் சண்முகர் தனி சந்நிதி அழகானது.


உள் நுழைந்ததும் நேரே கோஷ்ட தட்சிணாமூர்த்தி தரிசனம் தருகிறார். வலமாக வரும்போது நால்வர் பிரதிஷ்டையும், அம்பாளுடன் காட்சி தரும் விநாயகர் சந்நிதியும், மறுபுறம் வள்ளி தெய்வயானையுடன் சுப்பிரமணியர் சந்நிதியும் உள்ளன. கஜலட்சுமி, ஜ்யேஷ்டாதேவி, பைரவர், சூரியன், சனிபகவான் சந்நிதிகளும் உள்ளன. கோஷ்டமூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியுடன் துர்க்கையும், பிரம்மாவும், அர்த்தநாரீஸ்வரரும் உள்ளனர். மூலவர் உஜ்ஜீவனேஸ்வரர் மேற்குப் பார்த்த சந்நிதியில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அருகில் இறைவி அஞ்சனாட்சி சந்நிதி உள்ளது. இறைவன், இறைவி சந்நிதி தவிர பைரவர், மஹாலக்ஷ்மி, சக்திகணபதி, சூரியன், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. கோவிலின் உட்புறச் சுவர்களில் சோழ மன்னர்கள் உத்தம சோழன், ராஜராஜ சோழன் ஆகியோர் அளித்த தானங்கள் பற்றிய விபரங்கள் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. பல்லவ மன்னன் நந்திவர்ம பல்லவன் இக்கோவில்லுக்கு பல தானங்களும், திருப்பணிகளும் செய்திருக்கிறான். இத்தலம் நந்திவர்ம மங்கலம் என்றும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. நந்திவர்ம பல்லவனுக்கு இத்தலத்திலுள்ள ஜேஷ்டாதேவியே குலதெய்வம். இந்த ஜேஷ்டாதேவியை தரிசித்தால் விபத்துகளிலிருந்து நம்மை காப்பாற்றுவாள். எப்போதும் விழிப்புடன் இருக்கச் செய்வாள். இராவணனுடைய சகோதரர்களில் ஒருவனான கரன் இத்தல இறைவனை வழிபட்டு அருள் பெற்றான்.



இத்தலம் ஒரு திருப்புகழ் தலம். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது இரு பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

இத்தலம் பற்றிய புராணச் செய்தி: மிருகண்டு முனிவர் தனக்கு சந்தான பாக்கியம் இல்லாத குறையை நீக்கும் படி சிவபெருமானிடம் முறையிட்டு தவமிருந்தார். அவரின் தவத்திற்கு இரங்கி சிவபெருமான் அவர் முன் தோன்றி "உனக்கு உபயோகமில்லாத அறிவற்ற 100 குழந்தைகள் வேண்டுமா அல்லது 16 வயது மட்டுமே வாழக்கூடிய அறிவும், படிப்பும், இறை வழிபாட்டில் சிறந்தும் விளங்கும் ஒரு மகன் வேண்டுமா" என்று கேட்ட போது, அறிவில் சிறந்த ஒரு மகன் போதும் என்று வரம் பெற்றார். அதன்படி பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயர் சூட்டினார். மார்க்கண்டேயனுக்கு 16 வயது நெருங்கும் போது மிருகண்டு முனிவர் அவனுடைய ஆயுள் விபரத்தைக் கூறி இறைவன் சிவபெருமானைத் தஞ்சம் அடைந்து பூஜிக்கும்படி கூறினார். மார்க்கண்டேயன் பல சிவஸ்தலங்களுக்குச் சென்று ஈசனை வழிபட்டு பின்பு கற்குடி சிவஸ்தலம் வந்து சேர்ந்தான். இத்தலத்தில் தான் இறைவன் உஜ்ஜீவனேஸ்வரர் மார்க்கண்டேயனுக்குக் காட்சி கொடுத்து அவன் என்றும் 16 வயதுடன் சிரஞ்ஜீவியாக வாழ வரம் கொடுத்தார்.

இத்தலத்தில் வசிப்போர் நீண்ட ஆயுளையும், நிறைந்த செலவங்களையும் பெறுவர். வழிபடுவோர்க்கு எம பயமில்லை என்று தலபுராணம் கூறுகிறது.

தேவார மூவர் என்று போற்றப்படும் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற பெருமையுடைய சிவஸ்தலங்களில் இத்தலமும் ஒன்று. திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் கற்குடி இறைவன் உஜ்ஜீவ நாதரைக் கண்ணாரக் கண்டதை குறிப்பிட்டுப் பாடியுள்ளார். இப்பதிகம் 6-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.


திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்து பதிகம்

  1. வடந்திகழ் மென்முலை யாளை

திருநாவுக்கரசர் அருளிய இத்தலத்து பதிகம்

  1. மூத்தவனை வானவர்க்கு மூவா மேனி

சுந்தரர் அருளிய இத்தலத்து பதிகம்

  1. விடையா ருங்கொடியாய்

அருணகிரிநாதர் அருளிய இத்தலத்து திருப்புகழ்

  1. குடத்தைத் தகர்த்துக் களிற்றைத் துரத்தி
  2. நெறித்துப் பொருப்புக் கொத்த
உஜ்ஜீவனேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்

உஜ்ஜீவ நாதர் ஆலய நுழைவாயில்
குன்றிலேற முகப்பு வாயில்
முகப்பு வாயில்
ஞானவாவி தீர்த்தம்
நந்தி, பலிபீடம், கொடிமரம்
வெளி சுற்றுப் பிராகாரம்
3 நிலை கோபுரம் மற்றும் மண்டபம்
கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி
நால்வர் சந்நிதி
பைரவர், சூரியன், சனி பகவான்