தகவல் பலகை | |
---|---|
சிவஸ்தலம் பெயர் | திருவெறும்பூர் |
இறைவன் பெயர் | எறும்பீஸ்வரர், பிப்பிலிகேஸ்வரர், மதுவனேஸ்வரர் |
இறைவி பெயர் | சௌந்தரநாயகி, நறுங்குழல் நாயகி, மதுவனேஸ்வரி |
பதிகம் | திருநாவுக்கரசர் - 2 |
எப்படிப் போவது | திருச்சி - தஞ்சாவூர் சாலையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து இருந்து சுமார் 12 கி.மீ.. தொலைவில் திருவெறும்பூர் சிவஸ்தலம் உள்ளது. திருச்சி - தஞ்சாவூர் ரயில் மார்க்கத்தில் திருவெறும்பூர் ரயில் நிலையம் இருக்கிறது. |
ஆலய முகவரி | அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர் திருவெறும்பூர் அஞ்சல் திருச்சி திருச்சி மாவட்டம் PIN - 620013 இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். |
தல புராண வரலாறு: தாரகாசுரன் என்ற அரக்கனின் காரணமாக தேவர்கள் மிகவும் துன்பப்பட்டனர். அவர்கள் நாரதரிடம் சென்று தாரகாசுரன் கொடுமைகளில் இருந்து மீள வழி சொல்லும்படி வேண்டினர். நாரதர் திருசிராபள்ளி அருகே உள்ள இத்தலத்திற்குச் சென்று சிவபெருமானை வழிபட்டு அவரிடம் முறையிடும்படி ஆலோசனை கூறினார். தேவர்களும் அதன்படி இங்கு வந்து அசுரன் கண்ணில் படாமல் இருக்க எறும்பு உருவம் எடுத்து இறைவனை வழிபட்டு வந்தனர். அச்சமயம் லிங்கத் திருமேனி மிகவும் வழுவழுப்பாக இருக்க எறும்பு உருவில் இருந்த தேவர்கள் அதன் மீதேறி இறைவனை வழிபட மிகவும் சிரமப்பட்டனர். இறைவன் அவர்கள் சிரமத்தைப் பார்த்து தன் லிங்க உருவை ஒரு எறும்புப் புற்றாக மாற்றிக் கொண்டார். எறும்புகள் மேலேறிப் பூசை செய்வதற்கு வசதியாகச் சொரசொரப்பான திருமேனியுடையவரானார். இதன் காரணமாக இத்தலம் எறும்பியூர் என்றும் இறைவன் எறும்பீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
கோவில் அமைப்பு: இத்தலத்தில் ஆலயம் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்திருக்கிறது. கல்லில் வெட்டப்பட்டுள்ள சுமார் 125 படிகளின் மீதேறி ஆலயத்தை அடையலாம். கருவறை முற்றும் கற்களால் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் நுழைவு வாயில் வடக்கு திசையில் உள்ளது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கருவறை நுழை வாயிலின் இருபுறமும் விநாயகர், முருகன் ஆகியோரின் உருவச் சிலைகள் உள்ளன. கருவறை உள்ளே மூலவர் எறும்பீஸ்வரர் கிழக்கு நோக்கி காணப்படுகிறார். மூலலிங்கம் மண்புற்றாக உள்ளதால் நீர் படாமல் பாதுகாக்கப்படுகிறது. சிவலிங்கத் திருமேனி சற்று சாய்ந்தும், மேற்புறம் சொரசொரப்பாகவும் காணப்படுகிறது. கோஷ்ட மூர்த்தங்களாக, நர்த்தன விநாயகர், அழகான தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் சங்கர நாராயணர் உருவம், விஷ்ணு, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. நவக்கிரக சந்நிதியில் சூரியன் திருவுருவம் இருமனைவியரோடும் நடுவில் உள்ளது. பைரவர் உள்ளார். இறைவி நறுங்குழல் நாயகியின் சந்நிதி வெளிப் பிரகாரத்தில் தெற்கு நோக்கி உள்ளது. உட்பிரகாரத்தில் சோமச்கந்தர், முருகன், கஜலக்ஷ்மி, காசி விஸ்வநாதர், லக்ஷ்மி, பைரவர் ஆகியோரின் உருவச் சிலைகள் காணப்படுகின்றன. பிரம்மா, இந்திரன், அக்னிதேவன், முருகர், அகத்திய முனிவர், நைமிச முனிவர் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர்.
இக்கோவிலின் தலவிருட்சமாக வில்வமும், தீர்த்தமாக கோவில் எதிரில் உள்ள பிரம தீர்த்தமும் விளங்குகிறது.