நேத்ரார்ப்பனேஸ்வரர் திருக்கோவில், திருவீழிமிழலை
சிவஸ்தலம் பெயர்: திருவீழிமிழலை
இறைவன் பெயர்: நேத்ரார்ப்பனேஸ்வரர், திருவீழிநாதர்
இறைவி பெயர்: சுந்தர குசாம்பிகை
பதிகம்: திருநாவுக்கரசர் - 8, திருஞானசம்பந்தர் - 14, சுந்தரர் - 1
நேத்ரார்ப்பனேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது
மயிலாடுதுறை - திருவாரூர் சாலை வழியில் பேரளம் வழியாக பூந்தோட்டம் வந்து அங்கிருந்து 10 கி.மீ. தொலைவில் அரிசிலாற்றின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம் செல்லும் சாலையில் சென்று தென்கரை என்ற இடத்தில் இறங்கி 1 கி.மீ. சென்றாலும் இத்தலத்தை அடையலாம். அருகில் உள்ள பெரிய ஊர் பேரளம். திருஅன்னியூர், சிறுகுடி, திருப்பாம்பரம் மற்றும் திருமீய்ச்சூர் ஆகியவை இத்தலத்தின் அருகில் உள்ள மற்ற சிவஸ்தலங்கள்.
ஆலய முகவரி
திருவீழிமிழலை
திருவீழிமிழலை அஞ்சல்
குடவாசல் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 609505
ஆலய நேரம்
காலை: 8:00 - 12:00
மாலை: 17:00 - 20:00
அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்
| 1 | திருநல்லம் (கோனேரி ராஜபுரம்) - 7.2 கிமி | |
| 2 | திருமீயச்சூர் - 15 கிமி | |
| 3 | திருத்திலதைப்பதி - 10.9 கிமி | |
| 4 | திருபாம்புரம் - 8 கிமி | |
| 5 | சிறுகுடி - 6.2 கிமி | |
| 6 | திருஅன்னியூர் - 4.2 கிமி | |
| 7 | திருக்கருவிலி கொட்டிட்டை - 7.6 கிமி | |
| 8 | திருவாஞ்சியம் - 13.2 கிமி | |
| 9 | நன்னிலம் - 12.2 கிமி |
வரைபடம் – நேத்ரார்ப்பனேஸ்வரர் திருக்கோவில், திருவீழிமிழலை
தல வரலாறு
தல சிறப்பு
தேவார மூவராலும் பாடல் பெற்ற தலங்கள் பல உண்டு. அவற்றில் திருவீழிமிழலை தலமும் ஒன்றாகும். இத்தலம் 23 திருப்பதிகங்களையுடையது. வீழிச்செடிகள் நிறைந்திருந்ததால் இவ்வூருக்கு திருவீழிமிழலை என்று பெயர் ஏற்பட்டது. இத்தலத்தின் தல விருட்சம் வீழிமரம்.
ஸ்தல வரலாறு
மஹாவிஷ்னுவின் கையில் இருந்த சக்கராயுதம் தேய்ந்து போனபோது, ஆற்றல் பொருந்திய சக்கரம் பெறுவதற்காக மஹாவிஷ்னு சிவபெருமானை பூஜித்ததாக பல்வேறு புராணத் தகவல்கள் உண்டு. அப்படி சிவபெருமானை விஷ்னு பூஜித்ததாக திருமாற்பேறு, திருப்பைஞ்ஞீலி, திருவீழிமிழலை ஆகிய சிவஸ்தலங்களின் தல புராண வரலாறுகள் கூறுகின்றன. இம்மூன்று தலங்களில் திருவீழிமிழலை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. திருமாலுக்கு சலந்திரனைச் சம்ஹரிக்கச் சக்கரம் தேவைப்படுகிறது. அதைப் பெருவதற்காக திருவீழிமிழலையில் சிவபெருமானிடம் வருகிறார். ஆயிரம் தாமரை மலர்களால் சிவனை அர்ச்சித்தால் என்னியது கிடைக்கும் என்று அறிகிறார். அதன்படி ஆயிரம் தாமரை மலர்கள் சேர்த்து அர்ச்சனை செய்ய ஆரம்பித்து 999 மலர்களால் அர்ச்சனை செய்து விடுகிறார். ஆயிரமாவது மலர் இல்லை. குறைந்த ஒரு மலருக்குப் பதிலாக தாமரை மலருக்கு ஒப்பான தனது இரு கண்களில் ஒன்றையே பெயர்த்து எடுத்து பூஜையை குறை இல்லாமல் முடித்தவுடன் சிவனும் காட்சி கொடுத்து திருமால் விரும்பியபடி அவருக்கு சக்கராயுதம் கொடுத்து அருள் செய்கிறார். இப்படி மஹாவிஷ்னு தன் கண்ணையே கொடுத்து சிவனை அர்ச்சித்த தலம் தான் திருவீழிமிழலை.
இத்தலம் வீழிச்செடி, சந்தனம், சண்பகம், பலா, விளா முதலிய மரங்களடர்ந்த காடாய் பல காலம் இருந்தது. மிழலைக் குறும்பர் என்னும் வேடுவர் ஒருவர் இத்தலத்தில் வசித்து வந்தார். அவர் தினம் ஒரு விளாங்கனி நிவேதனம் செய்து வீழிநாதரை வழிபட்டு வந்தார். அதன் பலனாக ஈசன் அவர் முன் தோன்றி அருளாசி வழங்க, அவர் தவக்கோலம் பூண்டு, அருந்தவங்கள் செய்து அட்டமாசித்திகள் கைவரப் பெற்றார். இந்த மிழலைக் குறும்பருக்கு இத்தலத்தின் தனி சந்நிதி உள்ளது.
வட இந்திய மன்னன் ஒருவனின் மகன் சுவேதகேது. அவனது ஜாதகத்தைக் கணித்த ஜோதிடர்கள், 16 வயதில் அவனுக்கு மரணம் சம்பவிக்கும் என்று கூறினார்கள். அரசன் முனிவர்களிடம் ஆலோசனை செய்ய, அவர்கள் திருவீழிமிழலை தலத்திற்குச் சென்று சிவபூஜை செய்தால் காலமிருத்யுவை வெல்லலாம் என்று நம்பிக்கையுடன் கூறினார்கள். சுவேதகேது அதன்படி திருவீழிமிழலை தலம் வந்து இறைவனை தினமும் ஆராதித்து வந்தான். சுவேதகேதுவின் உயிர் பிரிய வேண்டிய நேரம் வந்தபோது, எமதர்மன் வீசிய பாசக்கயிறு சிவலிங்கத்தையும் சேர்த்து சுற்றிக் கொள்ள, சிவலிங்கத்திலிருந்து சிவபெருமான் வெளிப்பட்டு எமனைக் காலால் உதைத்து, மார்க்கண்டேயரைக் காத்ததுபோல், சுவேதகேதுவைக் காப்பாற்றினார். பின் தேவர்கள் வேண்டுகோளின் பேரில் எமனை உயிர்ப்பித்து, தன் பக்தர்கள் சிவபூஜையில் ஈடுபட்டிருக்கும் போது உயிரைப் பறிக்க வரக்கூடாது என்று ஆணையிட்டார். இத்தகைய சிறப்பு பெற்றது திருவீழிமிழலை திருத்தலம்.
கோவில் அமைப்பு
இராஜகோபுரம் மற்றும் சந்நிதிகள்
கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்திற்கு முன் பெரிய அழகிய திருக்குளம் உள்ளது. இறைவன் நேத்ரார்ப்பனேஸ்வரர் ஈசுவரர் சந்நிதி கிழக்கு நோக்கி இருக்கிறது. மூலவர் சுயம்பு உருவில் சுமார் 5 அடி உயரத்தில் நற்காட்சி தருகிறார். மூலவர் லிங்கத்திற்கு பின்புற கர்ப்பக்கிருக சுவரில் பார்வதி பரமேசுவரர் திரு உருவங்கள் இருக்கின்றன. இறைவன் உமையை மணந்து கொண்ட தலம் என்னும் நிலைக்கேற்ப, கர்ப்பக்கிருக வாயிலில் அரசாணிக்கால் என்னும் தூணும், வெளியில் மகாமண்டபத்தில் பந்தக்கால் என்னும் தூணும் உள்ளன. மகாமண்டபத்தில் கல்யாணசுந்தரர் மாப்பிள்ளை சுவாமியாகக் காட்சி தருகிறார். இவரே இத்தலத்தின் உற்சவமூர்த்தி. அவரது வலது பாதத்தின் மேலே திருமால் அர்சித்த கண்மலரும், அதன் கீழே சக்கரமும் இருக்கக் காணலாம். பிட்சாடனர், ரதிதேவி, வசிஷ்டர், காமதேனு, மனு முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்ற தலம் இது.
விண்ணிழி விமானம்
கோவிலின் பிரதான நுழைவு வாயில் கோபுரத்தை விட கர்ப்பக் கிருஹத்தின் மேல் இருக்கிற 16 சிம்மங்கள் தாங்கக்கூடியதாக உள்ள விமானமே சிறப்பானது. இதற்கு விண்ணிழி விமானம் என்று பெயர். சக்கரம் பெற்ற திருமால் வைகுண்டத்தில் இருந்து கொண்டுவந்து இந்த விமானத்தால் இக்கோவிலை அலங்கரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. ஆலயத்தின் முதல் பிரகாரத்தில் இருக்கும் நூற்றுக்கால் மண்டபம் சிற்ப வேலைக்கு ஒரு எடுத்துக் காட்டாக திகழ்கிறது. மூலவரின் வலப்பக்க மண்டப அறையில் கையில் கண்ணோடு அர்ச்சிக்கும் பாவனையில் திருமால் காட்சி தருகிறார். இறைவி சுந்தர குசாம்பாள் சந்நிதி மூலவர் சந்நிதிக்கு அருகில் உள்ளது.
வெளவால் நெத்தி மண்டபம்
இக்கோயிலில் உள்ள வெளவால் நெத்தி மண்படம் மிகச் சிறப்பான வேலைப்பாடுகள் உள்ளதாகும். அக்காலத்தில் கோயில் திருப்பணிகள் செய்யும் ஸ்தபதிகள் திருவீழிமிழலை வெளவால் நெத்தி மண்டபம் மற்றும் திருவலஞ்சுழி கல் பலகணி போன்ற அரிய திருப்பணிகள் நீங்கலாக மற்றவை செய்து தருகிறோம் என்று ஒப்புக் கொள்வார்கள். இராஜகோபுரம் கடந்து நுழைந்தவுடன் வலதுபுறம் உள்ள இந்த வெளவால் நத்திமண்டபம் அகலமான அமைப்புடன் நடுவில் தூணில்லாமல், சுண்ணாம்பு கொண்டு ஒட்டப்பட்டுள்ள வளைவான கூரை அமைப்புடன் உள்ள இந்த மண்டபம் கட்டிட வேலைப்பாட்டில் மிகமிக அபூர்வமானது. வெளவால் வந்து வசிக்க முடியாதவாறு கூரை அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும். சித்திரை மாதத்தில் இங்குதான் இறைவன் இறைவி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
பதிகம்
திருநாவுக்கரசர் (8 பதிகங்கள்), திருஞானசம்பந்தர் (14 பதிகங்கள்), சுந்தரர் (1 பதிகம்) ஆக மூவராலும் பாடல் பெற்ற சிறப்பு வாய்ந்த தலம் இது.
இப்படி திருமால் ஈசனை வழிபட்ட செய்தியை திருநாவுக்கரசர் தனது பதிகம் மூலமாக பாடுகிறார். நான்காம் திருமுறையில் இடம் பெற்றிருக்கும் "பூதத்தின் படையர் பாம்பின்" என்று தொடங்கும் பதிகத்தின் 8வது பாடலில் இத்தல வரலாற்றைக் குறித்துப் பாடுகிறார். நான்காம் திருமுறையில் இடம் பெற்றிருக்கும் "ஆதியில் பிரமனார் தாம்" என்று தொடங்கும் திருக்குறுக்கை வீரட்டம் தலத்திற்கான பதிகத்தின் 5வது பாடலிலும் இத்தல வரலாற்றைக் குறித்துப் பாடுகிறார்.
இங்குள்ள மகா மண்டபத்தில் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ள கல்யாண சுந்தரேசுவரர் திருவடியில் திருமால் தம் கண்ணைப் பறித்து அர்ச்சித்த அடையாளமும், கீழே சக்கரமும் இருப்பதை இன்றும் பார்க்கலாம்.
படிக்காசு அருளியது
திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் சேர்ந்தே இத்தலத்திற்கு வருகிறார்கள். அவர்கள் வரும்போது நாட்டில் பஞ்சம். மக்கள் உணவின்றித் தவிக்கின்றனர். இந்த நிலையில் அப்பர், சம்பந்தர் இவர்களுடன் வந்த அடியார்களுக்கு உணவு அளிப்பது சிரமமாக இருக்கிறது. இருவரும் கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கி பதிகங்கள் பாடுகிறார்கள். மறுநாள் காலையில் கிழக்கு பலிபீடத்தில் ஒரு படிக்காசும், மேற்கு பலிபீடத்தில் ஒரு படிக்காசும் இருப்பதை இருவரும் காண்கிறார்கள். அவற்றைக் கொண்டு அடியவர்களுக்கு உணவு அளிக்கின்றனர். நாட்டில் பஞ்சம் தீரும் வரையில் இவ்வாறு தினமும் படிக்காசு பெற்று தொண்டு செய்திருக்கின்றனர். படிக்காசு அளிப்பதிலும் இறைவன் அப்பருக்கு நல்ல காசும், சம்பந்தருக்கு மாற்றுக் குறைந்த காசும் கொடுத்தார். சம்பந்தர் அதைப் பார்த்து "வாசி தீரவே காசு நல்குவீர்" என்னும் பதிகம் பாடிய பிறகு அவருக்கும் நல்ல காசு கொடுத்து அருள் செய்தார். அவ்வாறு வைத்தருளிய பலிபீடங்கள் கோயிலின் கிழக்கிலும் மேற்கிலும் உள்ளன. படிக்காசுப் பிள்ளையார் மேற்கு பலிபீடத்தின் அருகில் உள்ளார். அருகில் சம்பந்தர், அப்பரின் உருவங்கள் உள்ளன. இவ்விருவரும் தங்கியிருந்த திருமடங்கள் வடக்கு வீதியில் கீழ்க்கோடியிலும் (சம்பந்தர்) மேற்குக் கோடியிலும் (அப்பர்) உள்ளன.
பதிகம் திருப்புகழ்
திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்துப் பதிகம்
- சடையார்புன லுடையானொரு
- தடநில வியமலை நிறுவியொர்
- அரையார் விரிகோ வணஆடை
- இரும்பொன் மலைவில்லா
- வாசி தீரவே காசு நல்குவீர்
- அலர்மகள் மலிதர அவனியில் நிகழ்பவர்
- ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங்
- கேள்வியர் நாடொறும் ஓதும்நல்
- சீர்மருவு தேசினொடு தேசமலி
- மட்டொளி விரிதரு மலர்நிறை
- வெண்மதி தவழ்மதில் மிழலையு ளீர்சடை
- வேலி னேர்தரு கண்ணி னாளுமை
- துன்று கொன்றைநஞ் சடையதே
- புள்ளித்தோ லாடை பூண்பது நாகம்
திருநாவுக்கரசர் அருளிய இத்தலத்துப் பதிகம்
- பூதத்தின் படையர் பாம்பின்
- வான்சொட்டச் சொட்டநின் றட்டும்
- கரைந்து கைதொழு
- என்பொ னேயிமை
- போரானை ஈருரிவை
- கயிலாய மலையுள்ளார் காரோ ணத்தார்
- கண்ணவன்காண் கண்ணொளிசேர்
- மானேறு கரமுடைய
சுந்தரர் அருளிய இத்தலத்துப் பதிகம்
அருணகிரிநாதர் அருளிய இத்தலத்து திருப்புகழ்
நேத்ரார்ப்பனேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்