A
தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்
மதிமுக்தீஸ்வரர் திருக்கோவில், திருத்திலதைப்பதி

சிவஸ்தலம் பெயர்: திருத்திலதைப்பதி (தற்போது செதலபதி என்று வழங்குகிறது)

இறைவன் பெயர்: மதிமுக்தீஸ்வரர்

இறைவி பெயர்: பொற்கொடிநாயகி, சுவர்ணவல்லி, மரகதவல்லி

பதிகம்: திருஞானசம்பந்தர் - 1

மதிமுக்தீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது

மயிலாடுதுறை - திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே இத்தலம் இருக்கிறது. கூத்தனூர் சரஸ்வதி கோவில் இங்கிருந்து அருகில் இருக்கிறது.

ஆலய முகவரி
அருள்மிகு மதிமுக்தீஸ்வரர் திருக்கோயில்
செதலபதி
பூந்தோட்டம் அஞ்சல்
நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 609503
ஆலய நேரம்

காலை: 7:00 - 12:45
மாலை: 4:00 - 8:30

அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்
வரைபடம் – மதிமுக்தீஸ்வரர் திருக்கோவில், திருத்திலதைப்பதி
பித்ரு தோஷ நிவர்த்தி தலம், மதிமுக்தீஸ்வரர் கோவில், திருத்திலதைப்பதி
மேலும் படிக்க....
தல வரலாறு
சிவபெருமானின் நடனம்

ஒருமுறை கைலாயத்தில் சிவபெருமானின் நடனத்தைக் காண தேவர்கள், முனிவர்கள், ஞானிகள், இந்திரன், வருணன், வாயு ஆகியோர் தவிர ரம்பா, ஊர்வசி, மேனகா என்று எல்லோரும் கூடியிருந்தனர். ஈசனும், அற்புதமாய் நடனம் ஆடிவிட்டு, பார்வதியுடன் எல்லோருக்கும் திருவருள் புரிந்தார். அச்சமயம் வாயுதேவன் சந்தோஷ மிகுதியால் சுழற்காற்றாக வீசினான். அதில் ஊர்வசியின் ஆடை சற்றே விலக, அருகில் நின்று கொண்டிருந்த பிரம்மா அதைப் பார்த்து காமமுற்றார். ஈசன் அதைக்கண்டு பிரம்மாவின் மேல் கோபமடைந்து பூலோகத்தில் பிறந்து உழலும்படி சாபமிட்டார். பின் பிரம்மாவின் வேண்டுகோளுக்கு இணங்கி, பிரம்மாவை திலதைப்பதியில் சிவவழிபாடு செய்துவரும்படி கட்டளையிட்டு, நேரம் வரும்போது காட்சியளித்து சாபம் நீக்குவேன் என்று வரம் அளித்தார்.

பார்வதியின் தவம்

பிரம்மாவும் திலதைப்பதி வந்து, தன் பெயரால் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தார். சிவபெருமான் அவருக்கு காட்சி கொடுத்தார். சிவன் தடுத்தும் கேளாமல் தனது தந்தை நடத்திய யாகத்திற்குச் சென்று அவமானப்பட்ட தாட்சாயினியான பார்வதி, அந்த அவமானம் நீங்க திலதைப்பதியில் ஒரு புற்றின் கீழ் தவம் செய்து கொண்டிருந்தாள். விஷயமறிந்த பிரம்மா புற்றை வெட்ட அம்பிகை தரிசனம் தந்தாள். சிவன், பார்வதி இருவரையும் வழிபட்ட பிரம்மாவின் சாபத்தை நீக்கி ஆசி வழங்கினார்கள். இன்றும் திலதைப்பதி பாவங்களை நீக்கி சித்திகளை அளிக்கும் தலமாக விளங்கி வருகிறது.

நற்சோதி மன்னன்

நற்சோதி என்ற மன்னன் ஒருவன் தன் தந்தைக்கு பிதுர் காரியங்கள் செய்ய வேண்டி வந்தது. எந்த ஊரில் பித்ருக்கள் நேரடியாக வந்து அன்னத்தைப் பெற்றுக் கொள்கிறார்களோ அதுவரை ஓயமாட்டேன் என்று ஊர் ஊராகச் சென்று பித்ரு காரியங்கள் செய்தான். கடைசியில் திலதைப்பதி வந்தபோது பித்ருக்கள் பிண்டத்தை கை நீட்டி வாங்கிக் கொண்டார்களாம். அதனால் அந்தமாதிரியான பித்ரு காரியங்கள் இங்கு செய்ய ஏராளமானவர்கள் வருகிறார்கள்.

தர்ப்பணம்

முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி (செதலபதி), கயா, அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம் ஆகிய 7 தலங்கள் சிறந்த தலங்களாக கருதப்படுகிறது. இதில் ஐந்தாம் இடத்தில் உள்ள தலம் இது. இக்கோயிலில் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் என பார்க்கத் தேவையில்லை. எந்த நாளில் வேண்டுமானாலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்து கொள்ளலாம்.

தசரதனுக்கும், ஜடாயுவிற்கும் ராமனும் லக்ஷ்மணனும் தில தர்ப்பணம் செய்த இடம் என்ற புராணப் பெருமை உடையது இத்தலம். இராமர் இங்கு தர்ப்பணம் செய்து வழிபட்டதால் தசரதனுக்கு முக்தி அளித்தார் சிவபெருமான் என்று இவ்வாலயத்தின் தலபுராணம் கூறுகிறது. இத்தல இறைவனுக்கும் முக்தீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. ராமர் தர்ப்பணம் செய்தபோது மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய நால்வரையும் வணங்கி நான்கு பிண்டங்கள் பிடித்து வைத்து பூஜித்தார். இந்த பிண்டங்கள் லிங்கங்களாக மாறின. கருவறைக்குப் பின்புறத்தில் இந்த லிங்கங்களையும், ராமர் - லட்சுமணர் இவ்வாறு தர்ப்பணம் செய்யும் நிலையிலுள்ள சிற்பத்தையும் கோயில் பிராகாரத்தில் காணலாம். சூரியன், சந்திரன், யானை, சிங்கம், இராமர், இலக்குவன் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர்.

கோவில் அமைப்பு
முகப்பு வாயில்

கிழக்கு நோக்கிய இரும்புக் கம்பிகளாலான கதவையுடைய முகப்பு வாயிலுடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. உள்ளே சென்றால் கொடிமரம், நந்தி உள்ளன. உள்வாயிலைக் கடந்து முன் மண்டபம் அடைந்தால் நேரே மூலவர் தரிசனம். வலதுபுறம் அம்பாள் சந்நிதி உள்ளது. பிராகாரத்தில் விநாயகர், இராம - இலக்குமணர் திருமேனிகள், அவர்கள் பிரதிஷ்டை செய்த சிவலிங்கங்கள், ஆறுமுகர், கஜலட்சுமி, நவக்கிரகம், பைரவர், நால்வர், சூரிய சந்திரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை உள்ளனர்.

தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்தி இங்கு வித்தியாசமாக காணப்படுகிறார். காலால் அசுரனை மிதித்தபடி, தன் இரண்டு பக்கமும் அணில்கள் இருக்க, சனகாதி முனிவர்கள் நால்வரும் அருகில் தவம் செய்யக் காட்சி தருகிறார். இவ்வாலயத்தின் மற்றொரு சிறப்பு கோவில் வாசலில் வீற்றிருக்கும் ஆதி விநாயகர் சந்நிதி. யானை முகத்திற்கு முந்தைய விநாயகர் என்பதால், இங்கு விநாயகர் தும்பிக்கையில்லாமல், வலக்கால் தொங்கவிட்டு, இடக்கால் மடித்து, இடக்கையை இடக்காலின்மீது வைத்து, வலக்கை சற்று சாய்ந்த அபயகரமாக விளங்க, மனித முகத்துடன் அழகான கோலத்தில் காட்சி தருகின்றார்.

திருப்புகழ் தலம்

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

மகாவிஷ்ணு

இக்கோயிலில் மகாவிஷ்ணு தனது மூன்று கோலத்தை காட்டியபடி அருளுகிறார். இராமராக சிவபூஜை செய்யும் உருவிலும், கருவறை கோஷ்டத்தில் வழக்கமாக லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணுவாக நின்ற கோலத்திலும், பிரகாரத்தில் நவக்கிரக சன்னதி அருகில் மற்றொரு பெருமாள் ஸ்ரீதேவி - பூதேவியுடன் வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார். இவ்வாறு மகாவிஷ்ணுவின் மூன்று விதமான கோலங்களை இக்கோயிலில் தரிசிக்கலாம்.

அரிசிலாறு

இத்தலத்தின் தீர்த்தங்களில் ஒன்றான அரிசிலாறு வடக்கிலிருந்து தெற்கு நோக்கி உத்தரவாஹினியாக செல்கிறது. இதுபோன்ற நதிகள் ஓடும் தலங்களில் உள்ள கோவில்களிலுள்ள இறைவனை வழிபட்டால் செல்வம் செழிக்கும் என்பது நம்பிக்கை. இந்த அரிசிலாற்றில் நீராடி சிவபூஜை செய்து, தசரதருக்கு பிண்டம் வைத்து சிரார்த்தம் செய்தார் இராமர்.

பதிகம் திருப்புகழ்

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இப்பதிகத்தை நாள்தோறும் சிரத்தையுடன் ஓதி வழிபடுவர்கள் சிவனடி சேர்வது திண்ணம் என்று சம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார். சம்பந்தர் இத்தலத்தை மதி முத்தம் என்றே குறிப்பிடுகிறார்.

திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்துப் பதிகம்
  1. பொடிகள்பூசிப் பலதொண்டர்
அருணகிரிநாதர் அருளிய இத்தலத்து திருப்புகழ்
  1. இறையத் தனையோ அதுதானும்
  2. பனகப் படமி சைந்த முழையிற் றரள நின்று
  3. மகரக் குழைக்குளுந்து
மதிமுக்தீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்