Shiva Temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


ஆதிரத்தினேஸ்வரர் கோவில், திருவாடானை

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருவாடானை (ராமநாதபுரம் மாவட்டம்)
இறைவன் பெயர்ஆதிரத்தினேசுவரர், ஆடானை நாதர், அஜகஜேஸ்வரர்
இறைவி பெயர்சிநேகவல்லி, அம்பாயி அம்மை
பதிகம்சம்பந்தர் - 1
எப்படிப் போவது காரைக்குடியில் இருந்து தேவகோட்டை வழியாக சுமார் 42 கி.மீ. தொலைவிலும், சிவகங்கையில் இருந்து தொண்டி சாலையில் காளையார்கோவில் வழியாக சுமார் 50 கி.மீ. தொலைவிலும் திருவாடானை தலம் உள்ளது. பேருந்து வசதிகள் காரைக்குடி, சிவகங்கை மற்றும் தேவகோட்டையில் இருந்து இருக்கின்றன. திருப்புனவாசல் தலத்திலிருந்தும் இங்கு வர சாலை வசதி உள்ளது.
அருகில் உள்ள தலம்திருப்புனவாயில் (பாண்டிய நாட்டில் உள்ள மற்றொரு பாடல் பெற்ற தலம்) - 21 கிமி -
ஆலய முகவரி அருள்மிகு ஆதிரத்தினேசுவரர் திருக்கோவில்
திருவாடானை அஞ்சல்
திருவாடானை வட்டம்
இராமநாதபுரம் மாவட்டம்
PIN - 623407

இவ்வாலயம் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


முன்ஜென்ம தீவினைகள் நீங்க ஆடானைநாதர் கோவில், திருவாடானை

மேலும் படிக்க.....

படிக்கும் நேரம் - நிமிடங்கள்

இத்தலம் நான்கு யுகங்களிலும் இருப்பதாகவும், தேவலோகத்தில் உள்ள அமிர்தத்திலிருந்து ஒரு துளி பூமியில் விழுந்ததால் இவ்வூர் உண்டாகியது எனவும் திருவாடானை தலபுராணம் கூறுகிறது. இத்தலத்து இறைவனை வணங்குவோருக்கு முக்தி அளிப்பதால் முக்திபுரம் எனவும், சூரியன் வணங்கியதால் ஆதிரத்தினேசுவரம் எனவும், வாருணி சாபம் நீக்கியதால் ஆடானை எனவும் இத்தலம் அழைக்கப்படுகிறது.

வருணனின் மகன் வாருணி ஒருமுறை நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருந்த துர்வாச முனிவரை மதிக்காமல் சென்றதால் கோபமுற்ற முனிவர், வாருணி ஆட்டுத்தலையும் யானை உடலும் பெறுமாறு சாபமிட்டார். வாருணியும் அவ்வாறே ஆக, தவறை உணர்ந்து முனிவரிடம் மன்னிப்புக் கேட்க, சூரியனால் வழிபடப்பட்ட இத்தலத்து மூர்த்தியான சிவலிங்கத்தை வணங்கி வழிபட்டால் சாபம் நீங்கும் என்று கூறினார். வாருணியும் இத்தலம் வந்து சூரிய தீர்த்தத்தில் நீராடி இத்தலத்து இறைவனை வணங்கி சுயரூபம் பெற்றான். வாருணி சாபம் நீக்கியதால் இத்தலம் ஆடானை என்று பெயர் பெற்றது. இத்தலத்து இறைவன் ஆடானை நாதர் என்று பெயர் பெற்றார்.



பிரம்மதேவர் கூறியபடி ஒருமுறை சூரியன் இத்தலத்திற்கு வந்து தன் பெயரில் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி ரத்தினமயமான லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டான். ஆதியாகிய சூரியன் நீல நிறமுள்ள ரத்தினமயமான இறைவனை வழிபட்டதால் இத்தலத்து இறைவன் ஆதிரத்தினேசுவரர் என்றும் பெயர் பெற்றார். இன்றும் உச்சிக்காலத்தில் பாலாபிஷேகம் செய்யும் போது இறைவன் நீல நிறமாக காட்சி அளிப்பதாக கூறப்படுகிறது.

சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கோவில் 130 அடி உயரம் உள்ள 9 நிலைகளை உடைய அழகிய சுதைச் சிற்பங்களோடு கூடிய ராஜகோபுரத்துடன் நம்மை வரவேற்கிறது. நீண்ட மதில் சுவர்களும், பெரிய வெளிப் பிரகாரமும், அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்களை உடைய மண்டபமும் உடைய இக்கோவில் பாண்டிய நாட்டு தேவார சிவஸ்தலங்களில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இறைவன், இறைவி இருவர் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மாசி மாதத்தில் சூரியஒளி மூலவர் மற்றும் அம்பாள் மீது விழும்படி கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

உள பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், சூரியன், 63 நாயன்மார்கள், தட்சிணாமூர்த்தி, வருணலிங்கம், விஷவநாதர், சண்டிகேஸ்வரர், நடராஜர், நால்வர், பைரவர், சந்திரன் முதலிய சந்நிதிகள் உள்ளன. சுக்கிர தோஷ நிவர்த்தித் தலமாக விளங்குவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். வெள்ளிக்கிழமை தோறும் இத்தலத்தில் சுக்கிர தோஷ நிவர்த்திக்காக விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. இத்தலத்தின் தீர்த்தங்கள் க்ஷீரகுண்டம், வருணதீர்த்தம், அகத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம் ஆகியவை.


இத்தல முருகப்பெருமான ஓரு திருமுகமும் நான்கு கரங்களும் கொண்டு இரு தேவியர் உடனிருக்க மயிலுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். இவர் சுமார் 5 அடி உயரத்துடன் கம்பீரமாக உள்ளார். மயிலின் முகம் தெற்கு நோக்கி உள்ளது. திருப்பகழில் ஒரு பாடல் உள்ளது.

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியுள்ள பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.


திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்து பதிகம்

  1. மாதோர் கூறுகந் தேற தேறிய

அருணகிரிநாதர் அருளிய இத்தலத்து திருப்புகழ்

  1. ஊனாரு முட்பிணியு மானாக
ஆதிரத்தினேஸ்வரர் ஆலயம்
புகைப்படங்கள்

ஆலயத்தின் 9 நிலை இராஜகோபுரம்
பைரவர்
சுவாமி சந்நிதி முன் நந்தி, பலிபீடம், கொடிமரம்
பிரகாரத்தில் உள்ள சந்நிதி
63 நாயன்மார்கள்
சப்த மாதர்கள்
ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜர்
முருகப்பெருமான்
சந்திரன்
ஆதிரத்தினேஸ்வரர் சந்நிதி
அம்பாள் சிநேகவல்லி சந்நிதி