Shiva Temples of Tamilnadu

தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்


இராமநாதசுவாமி திருக்கோவில், இராமேஸ்வரம்

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்இராமேஸ்வரம்
இறைவன் பெயர்ராமநாதசுவாமி
இறைவி பெயர்பர்வத வர்த்தினி
பதிகம்திருநாவுக்கரசர் - 1
திருஞானசம்பந்தர் - 2
எப்படிப் போவது இந்த திருத்தலம் ராமேஸ்வரம் தீவில் உள்ளது. சென்னை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து ரயில் வசதி உண்டு. பேருந்து வசதியும் மதுரை, திருச்சியில் இருந்து இருக்கிறது
ஆலய முகவரிஅருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவில்
இராமேஸ்வரம்
இராமநாதபுரம் மாவட்டம்
PIN - 623526
சக்தி பீடம்இராமேஸ்வரம் பர்வத வர்த்தினி (சேதுபீடம்)

பித்ருதோஷ நிவர்த்தி தலம் ராமநாதசுவாமி கோவில், ராமேஸ்வரம்

மேலும் படிக்க.....

படிக்கும் நேரம் - நிமிடங்கள்

இராமாயணம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது இராமேஸ்வரம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலம். இந்தியாவில் மிகவும் தெய்வீகத் தன்மையுடையதாக கருதப்படும் கோவில்களில் இராமேஸ்வரம் ஒன்றாகும். இராமேஸ்வரம் கோவிலுக்கு வந்து மூலவர் ராமநாதரை வழிபடுவதும், அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படும் சமுத்திரக் கரையில் நீராடுவதும் ஒவ்வொரு இந்துவும் தன் வாழ்நாளில் செய்ய வேண்டிய கடமையாக கருதப்படுகிறது. இறந்தவர்களுக்காக திதி, தர்ப்பணங்கள் செய்வதற்கு உகந்த திருத்தலங்களில் இராமேஸ்வரம் ஒரு முக்கிய தலம் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற ஸ்தலம் இராமேஸ்வரம்.


இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் இராமேஸ்வரம் தலமும் ஒன்று. இந்தியாவில் உள்ள புண்ணியத் தலங்களுள் நான்கு தலங்களையே வட இந்தியாவில் உள்ளோர் மிகச் சிறப்பாகக் கருதுகின்றனர். அவை முறையே வடக்கே பத்ரிநாதம், கிழக்கே ஜகந்நாதம், மேற்கே துவாரகநாதம், தெற்கே இராமநாதம். இவற்றுள் முதல் மூன்று தலங்களும் வைணவத் தலங்களாகும். நான்காவதான இராமநாதம் ஒன்றே சிவஸ்தலம். இத்தலத்தில் இராமநாதர் ஜோதிர்லிங்க மூர்த்தியாக திகழ்கிறார். இந்த ஜோதிர்லிங்கம் சுவாமி சன்னதியின் முதல் கிழக்கு பிரகாரத்தில் உள்ள சிறிய சன்னதியில் இருக்கிறது. இலங்கைமீது படையெடுத்து இராவணாதி அரக்கர்களை வென்று, அயோத்திக்குத் திரும்பும் வழியில், இராமபிரான் இராவணனைக் கொன்றதனால் ஏற்பட்ட பழியினைப் போக்கிக்கொள்வதற்கு இராமேஸ்வரத்தில் இறைவனை வழிபட்டார் என்றும், சீதாப்பிராட்டியினால் மணலில் அமைக்கப்பட்ட சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்றும் புராண வாயிலாக அறியப்படுகிறது. இராமபிரான் சிவலிங்கம் ஸ்தாபித்து அவரை வழிபட்ட காரணத்தினால் இத்தலத்திற்கு இராமேஸ்வரம் என்று பெயர் ஏற்பட்டது. வடக்கே உள்ள காசியும் தெற்கே உள்ள இராமேஸ்வரமும் இந்துக்களின் சிறந்த புண்ணிய தலங்களாகக் கருதப்படுகின்றன. காசிக்கு புனிதப் பயணம் சென்றவர்கள் இராமேஸ்வரம் தலத்திற்கு வந்து தனுஷ்கோடி தீர்த்தத்தில் நீராடி இராமநாதரை வழிபட்டால் தான் காசி தலப் பயணம் முழுமை அடைந்ததாகும் என்பது இந்து சமயத்தினரின் நம்பிக்கையாகும். இராமாயணத் தொடர்புடைய இராமலிங்கத்தை வழிபட இந்தியாவின் பல்வேறு மொழிகள் பேசும் மக்கள், பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வருகின்றனர். எனவே, இராமேஸ்வரக் கோவிலை இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்குரிய ஒரு சிறந்த சின்னமாகக் கருதலாம்.


தல வரலாறு: இராமாயணப் போரில் இராவணனைக் கொன்றபிறகு சீதையை சிறைமீட்டு இராமபிரான் அழைத்து வருகிறார். இராமேஸ்வரம் தலம் வந்தபிறகு, இராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம் விலக சிவபெருமானை வழிபடத் தீர்மானித்து, அனுமனை சிவலிங்கம் கொண்டுவருமாறு காசிக்கு அனுப்புகிறார். சிவலிங்கப் பிரதிஷ்டைக்கு குறிப்பிட்டிருந்த நேரத்திற்குள் அனுமன் திரும்பி வராததால் சீதை கடற்கரையில் உள்ள மணலால் ஒரு சிவலிங்கம் உருவாக்கித் தந்தாள். இராமபிரான் அந்த சிவலிங்கத்தை குறித்த நேரத்தில் பிரதிஷ்டை செய்து தனது பூஜையை முடித்தார். காலங் கடந்து வந்த அனுமன் தான் வருவதற்குள் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதைக் கண்டு கோபமுற்று தனது வாலினால் இராமபிரான் பிரதிஷ்டை செய்த லிங்கத்தைப் பெயர்த்து எடுக்க முயன்று தோல்வியுற்று நின்றார். இராமர் அனுமனை சமாதானப்படுத்தி அனுமன் கொண்டுவந்த லிங்கத்தை முதலில் பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு அருகில் பிரதிஷ்டை செய்தார். மேலும் அனுமன் கொண்டுவந்த லிங்கத்திற்கே முதற் பூஜை நடைபெற வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.

அனுமன் கொண்டு வந்த சிவலிங்கம் இராமலிங்கத்திறகு வடபுறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அனுமன் கொண்டுவந்த லிங்கம் காசி விசுவநாதர் எனப்படும். இன்றும் இந்த காசி விசுவநாதருக்கே முதல் பூஜை நடைபெறுகிறது. பின்பே இராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இராமலிங்கத்திற்கு பூஜை நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பாக் ஜலசந்தியில் உள்ள ராமேஸ்வரம் தீவில் ராமநாதசுவாமி ஆலயம் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக பாம்பன் ரயில் பாலம் மூலமாகத்தான் இராமேஸ்வரம் செல்ல முடியும் என்று இருந்த நிலை மாறி இப்போது பாம்பன் சாலை பாலமும் இருப்பதால் எளிதாக இராமேஸ்வரம் சென்று வர முடியும்.



கோவில் அமைப்பு: இராமேஸ்வரம் திருக்கோவில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவிலாகும். 865 அடி நீளமும் 657 அடி அகலமும் உடைய இராமேஸ்வரம் கோவிலின் கிழக்கு கோபுரமே மிகவும் உயரமானது. இதன் உயரம் சுமார் 126 அடி. மேற்கில் உள்ள கோபுரம் சுமார் 78 அடி உயரம் உடையது. இக்கோவிலின் நான்கு பக்கமும் வாயில்கள் அமைந்திருந்தாலும் வடக்கு, தெற்கு வாயில்கள் உபயோகத்தில் இல்லை. ஆலயத்தினுள் இராமலிங்கம், காசி விஸ்வநாதர் பர்வதவர்த்தினி, விசாலாட்சி, நடராஜர் ஆகிய இவருக்கும் தனித்தனியே விமானக்கள் அமைந்திருக்கின்றன. சுவாமியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இச்சந்நிதியில் சீதாதேவியால் உருவாக்கப்பட்டு இரமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இராமலிங்கர் சிவலிங்கத் திருமேனியுடன் காட்சி அளிக்கிறார். இந்த சிவலிங்கத் திருமேனியில் அனுமனின் வால் தழும்பு இன்றும் காணலாம். சுவாமி சந்நிதிக்கு இடதுபுறம் காசி விஸ்வநாதர் சந்நிதி அமைந்துள்ளது. இதுவே அனுமன் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கமாகும். மூலவர் கருவறையின் முன்மண்டபத்தில் இராமர், சீதை, லட்சுமணன் ஆகியோர் திரு உருவங்கள் காணலாம்.இவர்களுக்கு எதிரே தெற்கு நோக்கியபடி தனியே ஒரு ஆஞ்சநேயரும் எழுந்தருளியுள்ளார். அம்பிகை பர்வதவர்த்தினியின் சந்நிதி இராமநாதரின் வலப்பக்கம் அமைந்திருக்கிறது. அம்பிகை கோவிலின் வடமேற்கு மூலையில் பள்ளிகொண்ட பெருமாள் ஆகாயத்தை நோக்கியபடி கிடந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். தென்மேற்கு மூலையில் சந்தானகணபதியின் சந்நிதி அமைந்திருக்கிறது. ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. இராமநாதர் சந்நிதிக்கு பின்புறம் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரகாரங்களுக்கிடையே சேதுமாதவர் சந்நிதி அமைந்துள்ளது. தினமும் காலை 5 மணிக்கு ராமநாதசுவாமி சன்னதியில், ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் நடக்கிறது. இந்த அபிஷேகத்தை தரிசிக்க கட்டணம் உண்டு. பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்ரம் இருக்கிறது. சக்தி பீடங்களில் இது "சேதுபீடம்" ஆகும்.


இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு 1212 தூண்களைக் கொண்ட இக்கோவிலின் மூன்றாம் பிரகாரம் ஆகும். உலகிலேயே மிக நீளமான பிரகாரம் என்ற பெருமையைப் பெற்ற இப்பிரகாரம் உலகப்பிரசித்தி பெற்றதாகும். முத்துவிஜயரகுநாத சேதுபதி அவர்களால் (1735-1746) கி.பி. 1740-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரம் அமைக்கும் பணி, முத்துராமலிங்க சேதுபதி அவர்களால் 1740 - 1770 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த பிரகாரம் வெளிப்புறத்தில் கிழக்கு, மேற்காக 690 அடியும், வடக்கு தெற்காக 435 அடி நீளமும் கொண்டது. உள்புறத்தில் கிழக்கு மேற்காக 649 அடியும், வடக்கு தெற்காக 395 அடி நீளமும் கொண்டது. இந்த பிரகாரத்தில் ராமபிரானுக்கு கடலில் பாலம் (சேது பாலம்) அமைக்க உதவி செய்ய வந்த நளன், நீலன், கவன் ஆகிய மூன்று வானரர்களின் பெயரால் லிங்க சன்னதிகளும், பதஞ்சலி ஐக்கியமான நடராஜர் சன்னதியும் உள்ளன. இந்த நடராஜர் ருத்திராட்ச மண்டபத்தில் அழகுடன் எழுந்தருளியுள்ளார்.

மூன்றாம் பிரகாரம்

கோவில் தீர்த்தம்: இராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனத்தை விட தீர்த்தமாடுவது தான் மிக சிறப்பாக கருதப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே 22 தீர்த்தங்களும் வெளியே 22 தீர்த்தங்களும் உள்ளன. ஆலயத்தின் உள்ளே உள்ள தீர்த்தங்கள் எல்லாம் கிணறுகளாகவே அமைந்துள்ளன. அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் இராமேஸ்வரம் சமுத்திரக் கரையில் முதலில் தீர்த்தமாடுதலைத் தொடங்கி பின்பு ஆலயத்தினுள் மற்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். முற்காலத்தில் தனுஷ்கோடியில் நீராடி அதன் பின்பு, ராமேஸ்வரம் வந்து தீர்த்தமாடும் வழக்கம் இருந்தது. தனுஷ்கோடி பல வருடங்களுக்கு முன்பு புயலில் அழிந்த பிறகு, கோயில் முன்புள்ள அக்னி தீர்த்தக்கடலில் நீராடும் வழக்கம் ஏற்பட்டது. அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் சமுத்திரக் கரையில் தான் முன்னோர்களுக்கு தர்ப்பணங்கள், பிதிர்கடன்கள் நிறைவேற்றப்படுகின்றன.


திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்து பதிகம்

  1. அலைவளர் தண்மதி யோட
  2. திரிதரு மாமணி நாகமாட

திருநாவுக்கரசர் அருளிய இத்தலத்து பதிகம்

  1. பாசமுங் கழிக்க கில்லா
இராமநாதசுவாமி ஆலயம்
புகைப்படங்கள்

பாம்பன் ரயில் பாலம்பாம்பன் ரயில் பாலம்
பாம்பன் சாலை பாலம்பாம்பன் சாலை பாலம்
சுவாமி சந்நிதி முன் நந்தி22 அடி நீளமும், 12 அடி அகலமும், 17 அடி உயரமும் உள்ள நந்தி
அக்னி தீர்த்தக்கரை
அக்னி தீர்த்தக்கரை மற்றொரு தோற்றம்
கடலில் இருந்து கிழக்கு கோபுரம் மற்றும் அக்னி தீர்த்தம்
கிழக்கிலுள்ள இராஜகோபுரம்
மேற்கிலுள்ள கோபுரம்