A
தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்

தாலவனேஸ்வரர் திருக்கோவில், திருப்பனந்தாள்

சிவஸ்தலம்

திருப்பனந்தாள் (தாடகை ஈச்சரம்)

இறைவன்

செஞ்சடையப்பர், தாலவனேஸ்வரர்

இறைவி

பிரஹந்நாயகி

பதிகம்

திருஞானசம்பந்தர் - 1

தாலவனேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது

கும்பகோணம் – அணைக்கரை வழித்தடத்தில் கும்பகோணத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணம் – மயிலாடுதுறை சாலை வழியிலுள்ள ஆடுதுறை அடைந்து அங்கிருந்தும் திருப்பனந்தாள் செல்ல சாலை வசதி உள்ளது. ஆடுதுறையில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் வழியில் திருமங்கலக்குடி தலத்தையும் தரிசிக்கலாம். காவிரி தென்கரை தலங்களில் ஒன்றான தென்குரங்காடுதுறை என்ற சிவஸ்தலம் ஆடுதுறையில் உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு செஞ்சடையப்பர் திருக்கோவில்
திருப்பனந்தாள்
திருப்பனந்தாள் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612504

ஆலய நேரம்

காலை :  7:00 - 12:00

மாலை :  4:00 - 8:30

அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்
அருகில் உள்ள திவ்யதேசம்
1. திருவெள்ளியங்குடி கோல விழி ராமர் - சுக்ர ஸ்தலம் 5.7 கிமி
வரைபடம் – தாலவனேஸ்வரர் திருக்கோவில், திருப்பனந்தாள்
கோவில் அமைப்பு

மேற்கு நோக்கி உள்ள செஞ்சடையப்பர் கோவிலின் வாயிலில் நீண்டுயர்ந்த கோபுரம் உள்ளது. உள்ளே நுழைந்ததும் 16 கால் மண்டபம் இருக்கிறது. இம்மண்டபத்தின் கீழ்ப்புறம் நாககன்னிகை தீர்த்தம் இருக்கிறது. கோவிலின் வெளிப் பிரகாரத்தின் கீழ்ப் பக்கத்தில் ஸ்தல விருட்சம் பனைமரமும் அதன் அருகில் தாடகை வழிபட்ட சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கிறது. மூலவர் செஞ்சடையப்பர் சந்நிதி மேற்கு நோக்கி உள்ளது. இதற்கு வடக்கில் மேற்கு நோக்கிய பிரஹந்நாயகியின் சந்நிதி இருக்கிறது.

முருகப்பெருமான் சந்நிதி

அருணகிரிநாதரின் திருப்புகழில் இத்தல முருகப்பெருமான் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு மயிலின் அருகில் நின்ற திருக்கோலத்தில் இருபுறமும் வள்ளி தேவசேனாதேவி சமேதராக கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார். ஒரு உற்சவர் மூலவரைப் போன்றும் மற்றொரு உற்சவரான முத்துக்குமாரசாமி மயிலின்றியும் காட்சி தருகின்றனர்.

தல வரலாறு
தாடகையின் பக்தியும் செஞ்சடையப்பர் அருளும்

அசுரகுல மகளான தாடகை (ராமாயணத்தில் வரும் தாடகை அல்ல) தினமும் பூமாலை ஏந்தி திருப்பனந்தாள் மூலவர் செஞ்சடையப்பரை வணங்கி வருகிறாள். ஒரு நாள் அவள் பூமாலையுடன் இறைவனை வணங்க வரும்போது அவளுடைய மேலாடை நழுவுகிறது. ஆடையைச் சரி செய்ய பூமாலையைக் கீழே வைக்க வேண்டும்; இல்லாவிடில் மேலாடை சரிந்து நழுவி அவள் பலர் முன்னிலையில் மானம் இழக்க நேரிடும். இந்த நிலையில் அவளின் இறை வழிபாட்டை மெச்சி இறைவன் அவள் தனக்கு எளிதாக மாலை அணிவிக்கும் வகையில் தலை தாழ்த்திக் கொடுக்கிறார். இப்படி தாடகையின் பக்தியை உலகறியச் செய்த செஞ்சடையப்பர் குடி கொண்டிருக்கும் இத்தலம் தாடகை ஈச்சரம் என்றே அழைக்கப்படுகிறது.

குங்கிலியக் கலயர் நாயனாரும் தலை நிமிர்வும்

தாடகைக்காக தலை தாழ்த்திய பிறகு அரசன் முதலானோர் எவ்வளவோ முயன்றும் சிவபெருமானின் தலை நிமிரவில்லை. 63 நாயன்மார்களில் ஒருவரான குங்கிலியக் கலயர் வந்து இறைவன் சடைமுடிக்கும் தம் கழுத்திற்கும் கயிறு கட்டி இழுக்கிறார். இறைவனும் அவரின் தூய்மையான பக்திக்குக் கட்டுப்பட்டு தலை நிமிர்கிறார். குங்கிலியக் கலயரின் மகன் இறந்துவிட, அந்த உடலை தகனம் செய்ய எடுத்துப் போகும்போது வழியில் உள்ள பிள்ளையார் வழி மறித்து நாககன்னிகைத் தீர்த்தத்தில் தீர்த்தமாடி வீடு திரும்பச் சொல்கிறார். வீடு சென்ற பின் இறந்த மகன் உயிர் பெற்று எழுகிறான்.

இத்தலத்தில் வழிபட்டோர்

தாடகை, நாககன்னிகை, ஆதிசேஷன், பிரம்மா, குங்கிலிய நாயனார், அரித்துவசன் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். திருப்பனந்தாள் தலத்திற்கு திருஞானசம்பந்தர் பாடிய பதிகத்தில் இத்தலம் திருத்தாடகை ஈச்சரம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

பரிகார வழிபாடு
காலசர்ப மற்றும் நாகதோஷ நிவர்த்தி

காலசர்ப, நாகதோஷ நிவர்த்திக்கு இத்தலம் வந்து வழிபடுவோர் பரிகாரத்திற்கு உண்டான கட்டணம் நீங்கலாக 14 நெய்தீபம் ஏற்றி சுவாமி, அம்பாள் மற்றும் விநாயகரை அர்ச்சித்து பலன் பெறலாம்.

குருதோஷம் மற்றும் பிற தோஷ நிவர்த்தி

குருதோஷம் மற்றும் பல தோஷ நிவர்த்திக்கு 15 நெய் தீபம் ஏற்றி சுவாமி, அம்பாள், தட்சிணாமூர்த்தி, நவக்கிரக குரு மற்றும் விநாயகரை வழிபட்டால் நலமுண்டாகும்.

பதிகம்திருப்புகழ்
தாலவனேஸ்வரர் ஆலயம் மேலும் புகைப்படங்கள்