அக்னீஸ்வரர் திருக்கோவில், திருகஞ்சனூர்
சிவஸ்தலம்
திருகஞ்சனூர்
இறைவன்
அக்னீஸ்வரர்
இறைவி
கற்பகாம்பாள்
பதிகம்
திருநாவுக்கரசர் - 1
அக்னீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது
மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதிகள் உண்டு. ஆடுதுறையிலிருந்து திருமங்கலக்குடி, சூரியனார் கோவில் வழியாக துகிலி செல்லும் சாலையில் சென்று “கோட்டூர்” “கஞ்சனூர்” என்று வழிகாட்டிப் பலகையுள்ள திசையில் பிரிந்து இத்தலத்தை அடையலாம்.
ஆலய முகவரி
கஞ்சனூர்
கஞ்சனூர் அஞ்சல்
துகலி வழி
திருவிடைமருதூர் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 609804
ஆலய நேரம்
காலை : 7:00 - 11:00
மாலை : 4:00 - 6:00
அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்
பரிகாரத் தலம்
சுக்கிர தோஷ பரிகாரத் தலம் அக்னீஸ்வரர் கோவில், திருகஞ்சனூர்
தலத்தின் சிறப்பு
- நவக்கிரகத் தலங்களில் கஞ்சனூர் சுக்கிரன் தலமாக போற்றப்படுகிறது.
- பஞ்சாட்சர மகிமையை வெளிப்படுத்திய ஹரதத்த சிவாசாரியார் அவதரித்த தலம்.
- 63 நாயன்மார்களில் ஒருவரான மானக் கஞ்சாற நாயனார் அவதரித்து வழிபட்ட சிறப்பினை உடைய தலம்.
- பிரம்மனுக்குத் திருமணக் காட்சி தந்தருளிய தலம்.
- அக்கினிக்கு உண்டான சோகை நோயைத் தீர்த்தருளிய தலம்.
- பராசரருக்குச் சித்தப்பிரமை நீங்கியதும், சந்திரனின் சாபம் நீங்கியதும் இத்தலத்தில் தான்.
- கொடிமரத்தை அடுத்துள்ள கல் நந்தி புல்லைத் தின்ற பெருமையுடைய தலம்.
கோவில் அமைப்பு
முன்பிரகாரம் மற்றும் மண்டபம்
கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் காட்சி அளிக்கிறது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்து பிரகார வலம் வந்து உள் மண்டப வாயிலை அடையலாம். மண்டப வாயிலின் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் விசுவநாதர் சந்நிதியும் உள்ளன. அதையடுத்து அம்பாள் சந்நிதி உள்ளது. உள்வாயிலைத் தாண்டி சுவாமி சந்நிதிக்குச் செல்லும்போது இடதுபுறம் வெளவால் நெத்தி மண்டபத்தில் விநாயகர், மயூர சுப்பிரமணியர், மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன. தலமரம் – புரசு (பலாசு) உள்ளது. இதன்கீழ் அக்னீஸ்வரர் லிங்கம் தரிசனம். அடுத்து மானக்கஞ்சாறர், கலிக்காமர் திருவுருவங்கள் உள்ளன. பக்கத்தில் சுரைக்காய்ப் பக்தர் என்ற அடியார் மனைவியுடன் காட்சி தருகிறார்.
மகா மண்டபம் மற்றும் முக்தி மண்டபம்
மகா மண்டபத்தில் பைரவர், சூரியன், சனிபகவான், சந்திரன், நவக்கிரகச் சந்நிதி, நால்வர் சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள நடராச சபை தரிசிக்கத் தக்கது. நடராசர் மூலத்திருமேனியில் சிவகாமியுடன் சிலாரூபமாக இருப்பது தனிச் சிறப்பும் அழகும் வாய்ந்தது. இம்மூர்த்தியே பராசரருக்குத் தாண்டவக் காட்சியளித்தவர். இத்தாண்டவம் முத்தித் தாண்டவம் எனப்படுகிறது. இம்மண்டபத்திற்கும் முக்தி மண்டபம் என்று பெயர்.
மூலவர் சந்நிதி
கருவறையில் மூலவர் அக்னீஸ்வரர் கிழக்கு நோக்கிய சந்நிதியில் சுயம்பு மூர்த்தியாக உயர்ந்த பாணத்துடன் காட்சி தருகிறார். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற இக்கோவில் இறைவனை திருமால், பிரம்மன், சந்திரன், கம்சபாண்டியன் ஆகியோர் வணங்கி பேறு பெற்றதாக வரலாறு உள்ளது. இறைவன் பிரம்ம தேவருக்கு திருமண கோலம் காட்டி அருளியதால் வலப்பாகத்தில் இறைவியை கொண்டுள்ளார்.
தல வரலாறு
சுரைக்காய்ப் பக்தர்
பக்தர் ஒருவர் இவ்வூரைச் சேர்ந்தவர். சுரைக்காய் விற்றுப் பிழைத்து வந்தார். இதனால் இவர் பெயர் சுரைக்காய் பக்தர் என்றாயிற்று. இவரிடம் ஒரே ஒரு சுரைக்காய்தான் எஞ்சியிருந்தது. அதை விதைக்கு ஆகும் என்று அப்படியே வைத்துவிட்டார். அந்நிலையில் இறைவன் அவரிடம் விருந்தினராக வந்து உணவிடுமாறு கேட்க, அப்போது செய்வதறியாது திகைத்தார். அதிதிகட்குச் சுரைக்காய் கறிக்கு ஆகாது என்றெண்ணிக் கலங்கினார். அப்போது இறைவன் அசரீரியாக ‘ஒரு பாதி விதைக்கு, ஒரு பாதி கறிக்கு’ என்றருளிச் செய்து ஏற்று, அவருக்கு அருள்புரிந்தார் என்றொரு வரலாறு சொல்லப்படுகிறது.
ஹரதத்தர் வரலாறு
முன்பொரு காலத்தில் கஞ்சனூரில் வாசுதேவர் என்னும் வைணவருக்கு சுதர்சனர் என்ற குழந்தை பிறந்தது. வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது. பிறப்பால் வைணவரானாலும், இவர் தீவிர சிவபக்தர். தினமும் காலையில் கஞ்சனூரிலிருந்து கிளம்பி திருமாந்துறை, திருமங்கலக்குடி, திருக்குரங்காடுதுறை, திருவாவடுதுறை, திருவாலங்காடு மற்றும் திருக்கோடிக்கா ஆகிய சிவத்தலங்களை தரிசித்து விட்டு, அர்த்த ஜாம பூஜைக்கு, தனது சொந்த ஊரான கஞ்சனூர் ஆலயத்துக்கு திரும்பிவிடுவதை தினம் தனது வழக்கமாகக் கொண்டவர். வைணவரான சுதர்சனர் இவ்வாறு சிவபக்தராக திகழ்வதில் அவ்வூர் மக்களுக்கு விருப்பமில்லை. அவ்வூர் மக்கள் சொல்லியவாறே பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலி மீதமர்ந்து சிவமே பரம்பொருள் என்று சுதர்சனர் மும்முறை கூறியதைக் கண்டவர்கள் வியந்தனர். ஹரதத்தருக்கு உபதேசித்து அருள் செய்த தட்சிணாமூர்த்தி திருவுருவில் ஹரதத்தரின் உருவமும் உள்ளது. இம்மூர்த்தியே சுதர்சனரை ஆட்கொண்டு சுதர்சனருக்கு ஹரதத்தர் என்ற பெயரளித்துச் சிவநாம தீட்சை செய்தவர். இக்காட்சியைச் சித்தரிக்கும் உருவம் இவ்வூர்ப் பெருமாள் கோயிலிலும் உள்ளது. பெருமாள் கோவிலிலும் அக்னீஸ்வரர் கற்பகாம்பாள் எழுந்தருளியுள்ளனர்.
இறைவன் கஞ்சி உண்ட கதை
ஒரு செல்வந்தர் தினந்தோறும் அக்னீஸ்வரருக்கு நைவேத்தியம் படைத்து வந்தார். அன்றாடம் அவர் கனவில் இறைவன் தோன்றி அவ்வுணவை உண்பதுபோலக் காட்சி தருவார். ஒருநாள் அக்கனவு தோன்றவில்லை. காரணம் புரியாது அவர் விழித்தார். விசாரித்ததில் அன்று அக்னீஸ்வரர், ஹரதத்தரிடம் ஏழைப் பிராமணர் வடிவில் சென்று கஞ்சியை வாங்கியுண்டதாகவும் அதனால் வயிறு நிரம்பிவிட செல்வந்தரின் உணவை ஏற்கவில்லை என்றும் உணர்ந்தார். இதன்மூலம் ஹரதத்தரின் பெருமையையறிந்து அச்செல்வர் அவரை நாடிச்சென்று வணங்கியதாக வரலாறு சொல்லப்படுகிறது. ஆலயத்தில் ஹரதத்தரின் குடும்பமும் ஏழை அந்தணராக வந்த இறைவனின் திருவுருவமும் உள்ளன. ஊருள் வரும்போது அரச மரத்தின் எதிரில் கிழக்கு நோக்கி ஹரதத்தர் சிவபூசை செய்வதுபோல உள்ள ஹரதத்தர் தனிக் கோயிலும் இத்தலத்தில் உள்ளது.
பதிகம்
திருநாவுக்கரசர்
அக்னீஸ்வரர் ஆலயம் மேலும் புகைப்படங்கள்