A
தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்
ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில், தென்குரங்காடுதுறை

சிவஸ்தலம் பெயர்: தென்குரங்காடுதுறை (தற்போது ஆடுதுறை என்று பெயர்)

இறைவன் பெயர்: ஆபத்சகாயேஸ்வரர்

இறைவி பெயர்: பவளக்கொடி அம்மை

பதிகம்: திருநாவுக்கரசர் - 1, திருஞானசம்பந்தர் - 1

ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது

கும்பகோணத்தில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும் ஆடுதுறை என்று வழங்கப்படும் இடத்தில் இத்தலம் இருக்கிறது. அருகில் உள்ள ரயில் நிலையம் ஆடுதுறை. இது கும்பகோணம் - மயிலாடுதுறை ரயில் மார்க்கத்தில் இருக்கிறது. மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள ஆடுதுறை பேருந்து நிறுத்தத்தில் இருந்து கும்பகோணம் சாலையில் சிறிது தொலைவு சென்றால் சாலையோரத்தில் உள்ள குளத்தையொட்டி இடப்புறமாகத் திரும்பிச் செல்லும் சாலையில் சென்று வலப்பக்க வீதியில் திரும்பினால் ஆலயம் உள்ளது. ஆடுதுறை பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவு.

ஆலய முகவரி
செயல் அலுவலர்
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில்
ஆடுதுறை
ஆடுதுறை அஞ்சல்
திருவிடைமருதூர் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612101
ஆலய நேரம்

காலை: 7:30 - 12:00
மாலை: 5:30 - 8:30

அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்
வரைபடம் – ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில், தென்குரங்காடுதுறை
தொழில் மற்றும் பொருளாதாரம் மேம்பட பரிகாரத் தலம்

மேலும் படிக்க....

கோவில் அமைப்பு

காவிரி நதியின் தென்கரையில் அமைந்துள்ளதாலும், இராமாயணத்தில் வரும் சுக்ரீவன் இங்கு இறைவனை வழிபட்டதாலும் இத்தலம் தென்குரங்காடுதுறை என்று பெயர் பெற்றது. சோழ மன்னன் கண்டராதித்ய சோழனின் மனைவியான செம்பியன் மாதேவியால் கற்றளியாக கட்டுவிக்கப்பட்ட இந்த ஆலயம் கிழக்கு நோக்கியுள்ள 3 நிலை இராஜகோபுரத்துடனும் 2 பிரகாரங்களுடனும் விளங்குகிறது.

கோபுர வாயிலைக் கடந்து சென்றால் கொடிமரத்து விநாயகரையும் பலிபீடத்தையும் சிறுமண்டபத்துள்ளே அமைந்துள்ள நந்தியையும் காணலாம். அகன்ற வெளிப் பக்கத்துப் பெரிய பிரகாரத்தை வலம்வந்து உள்ளே சென்றால் மணிமண்டபத்தைக் காணலாம். அம்மண்டபத்தின் தென்புறச் சுவரில் இத்தலத்தின் தேவாரப் பதிகங்களையும் திருப்புகழ்ப் பாடல்களையும் கல்லெழுத்துக்களில் வடித்துள்ளதைக் காணலாம்.

வெளிப் பிரகாரம்

வெளிப் பிரகாரத்தில் விஸ்வநாதர், அம்பாள் விசாலாக்ஷி, விநாயகர், சூரியன், சந்திரன், நவக்கிரகம் மற்றும் முருகன் ஆகியோரின் சந்நிதிகள் அமைந்துள்ளன. அம்பாள் பவளக்கொடி அம்மையின் சந்நிதியும் வெளிப் பிரகாரத்தில் இரண்டாவது வாயிலுக்கு முன்னே தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

மண்டப சிறப்பு

உள்ளே சென்றால் எதிரில் தோன்றும் மண்டபத்தின் மேல் மாடப்பத்தியில் சுக்ரீவன் ஆபத்சகாயேசுரரை வணங்கும் காட்சியும், சுக்ரீவனை இறைவன் அன்னப்பறவையாவும் அவன் தேவியை பாரிஜாத (பவளமல்லிகை) மரமாகவும் உருமாற்றியருளிய தல வரலாற்றுக் காட்சி சுதை வேலைப்பாட்டில் அமைந்துள்ளதைக் காணலாம்.

கருவறை சிறப்பு

அடுத்துள்ள மூன்றாம் வாயிலைக் கடந்து சென்றால் நேரே பலிபீடமும் நந்தியும் உள்ளன. கருவறை வாயிலில் கம்பீரமாகக் காத்து நிற்கும் புடைச் சிற்பமாக விளங்கும் இரண்டு துவாரபாலகர்களையும் காணலாம். இறைவன் ஆபத்சகாயேஸ்வரரின் சந்நிதி இரண்டாவது உள் பிரகாரத்தில் உள்ளது. இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவர் குடிகொண்டுள்ள கருவறைச் சுற்றிலும் அகழி போன்ற அமைப்பு இருக்கிறது.

கோஷ்ட மூர்த்தங்கள்

கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். இக்கோயிலைக் கற்கோயிலாக அமைத்த கண்டராதித்தியர் தேவியாரான செம்பியன் மாதேவியார் சிவபிரானை வழிபடுவதாக அமைந்துள்ள புடைச்சிற்பத்தையும் கருவறைச் சுற்றில் காணலாம்.

பிற சந்நிதிகள்

கருவறை சுற்றுப் பிரகாரத்தில் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளியுள்ள முருகப் பெருமான் சந்நிதி, கஜலட்சுமி சந்நிதி ஆகியவை உள்ளன. வடக்கு நோக்கிய சந்நிதியில் எட்டுத் திருக்கரங்களோடு விளங்கிக் காட்சி நல்கும் துர்கா தேவியும், அருகில் கங்கா விசர்சன மூர்த்தியும் பைரவ மூர்த்தியும் இருக்கின்றன. அவற்றின் அருகில் விஷ்ணு துர்க்கை சந்நிதி உள்ளது.

பிற சிறப்புகள்
வரலாற்றுச் சிற்பங்கள்

அம்பாள் பவளக்கொடியம்மை சந்நிதியை வலம் வரும்போது பின்புறச் சுவரில் சுக்ரீவன் சிவபூஜை செய்யும் புடைப்புச் சிற்பத்தையும், செம்பியன் மாதேவி சிவபூசை செய்யும் புடைப்புச் சிற்பத்தையும் காணலாம்.

குறிப்பு

இத்தலத்தின் தலவிருட்சமாக பவளமல்லிகை மரமும், தீர்த்தங்களாக சகாய தீர்த்தம் மற்றும் கோவிலுக்கு எதிரிலுள்ள சூரிய தீர்த்தம் ஆகியவையாகும்.

சூரிய ஒளி சிறப்பு

ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் 5, 6, 7 தேதிகளில் சூரியனது ஒளிக்கிரணங்கள் சந்நிதிக்கு எதிரில் உள்ள சூரிய தீர்த்தத்தில் பிரதிபலித்துக் கடந்து சுவாமி மீது படுகின்றன.

பரிகார வழிபாடுகள்

சூரியன், சனி பகவானுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அர்ச்சனை செய்துவழிபட்டால் தந்தை மகன் உறவில் உள்ள பிரச்னைகள் தீரும் என்றும், தொழில் மற்றும் பொருளாதாரம் மேம்பட இங்கு பிரார்த்தனை செய்தால் நல்லதே நடக்கும் என்றும் பக்தர்கள் கருதுகின்றனர்.

பவுர்ணமியில் அகத்தியருக்கு சந்தனாதி தைலம் சாற்றி வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.

அருகில் உள்ள வைப்புத்தலம்

தென்குரங்காடுதுறைக்கு (ஆடுதுறைக்கு) அருகாமையிலுள்ள மருத்துவக்குடி என்னும் ஊரின் பெயரும் இத்தல கல்வெட்டில் காணப்படுகிறது. இம்மருத்துவக்குடியே திருஇடைக்குளம் என்னும் தேவார வைப்புத்தலமாகும்.

பதிகங்கள்

திருஞானசம்பந்தர் இத்தல இறைவனை தனது பதிகத்தால் பாடி தொழுபவர்கள் வானவர்களோடு உறையும் சிறப்பைப் பெறுவார்கள் என்று குறிப்பிடுகிறார்.

இத்தலத்து இறைவனை தொழுதால் பற்றுகின்ற தீவினைகள் யாவும் கெட்டுவிடும் என்றும் தனது பதிகத்தில் திருநாவுக்கரசர் குறிப்பிடுகிறார்.

பதிகங்கள் திருப்புகழ்
திருநாவுக்கரசர் அருளிய இத்தலத்துப் பதிகங்கள்
  1. இரங்கா வன்மனத் தார்கள்
திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்துப் பதிகங்கள்
  1. பரவக் கெடும்வல் வினைபா
மேலும் புகைப்படங்கள்